தமிழோவியம்
ஆன்மீகக் கதைகள் : விரல் நுனியில் சாப்பாடு
-

மகாபாரதப் போர் முடிந்தது. போர்க்களத்தில் கர்ணன் வீர மரணம் அடைந்தான். அவனுக்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளால் சுவர்கத்தில் இடம் கிடைத்தது. கர்ணனுக்கு சுவர்க்கத்தில் இருக்கும் போது பசி எடுத்தது. ஆச்சரியம். காரணம், சுவர்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பசிக்காது.

அப்போது அங்கு வந்த நாரதரிடம் 'எனக்கு மட்டும் ஏன் பசிக்கிறது ?' என்று கர்ணன் கேட்டார்.

அதற்கு நாரதர்.. "நீ பூலோகத்தில் இருக்கும்போது எவ்வளவோ தான் தருமங்கள் செய்தாய். ஆனால் அன்னதானம் செய்யவில்லை. அதனால் சுவர்க்கத்தில் இருக்கும்போது உனக்குப் பசிக்கிறது" என்று சொன்னார். கர்ணனுக்கு அதிர்ச்சி ! தானத்தில் சிறந்த அன்னதானத்தை செய்யவே இல்லையோ என்று யோசித்தான். பிறகு அதற்காக வருத்தப்பட்டான்.

"சரி.. இப்போது பசிக்கிறதே என்ன செய்ய ?" என்று நாரதரிடம் கேட்டான்.

"கர்ணா, கவலைப்படாதே. உன் வலது கை ஆள்காட்டி விரலை உன் வாயில் வைத்துக்கொள். பசி போய்விடும்" என்றார்.  கர்ணனும் அவ்வாறே செய்ய பசி போய்விட்டது.

கர்ணனுக்கு மறுபடியும் ஆச்சரியம். "இது என்ன அதிசரம் ?" என்று கேட்டான்

"கர்ணா! நீ பூமியில் வாழ்ந்த போது, அஸ்தினாபுரத்துக்கு ஸ்ரீ கண்ணன் பாண்டவர்கள் சார்பாக தூது வந்தான். கண்ணனுடைய தேர்ப்பாகர்கள் " சாப்பாடு எங்கே கிடைக்கும் ?" என்று கேட்டனர். நீயோ, உன் ஆள்காட்டி விரலால், விதுரரின் குடிசையைக் காண்பித்து, உணவு அங்கே கிடைக்கும் என்று சொன்னாய். பலரின் பசி போக்க, உன் ஆள்காட்டி விரலால் உணவு கிடைக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டினாய். அதுவே பெரிய நல்ல காரியம். அதனால்தான் இன்று உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்தவுடன் அன்னதான் பலன் காரணமாக, பசி மறைந்தது" என்றார்.

 

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors