தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : உடல் நலத்தை மாற்றும் செய்முறைகளின் அடிப்படை மாதிரி
- பத்மா அர்விந்த்

உடல் நலத்தை மாற்றும் செய்முறைகளின் அடிப்படை மாதிரி (Health belief Model - HBM)

கிட்டதட்ட 50 வருடங்களாக பழக்கத்திலிருக்கும் HBM  இன்று பெரும்பாலான மனநல  மருத்துவர்கள் மற்றும் உடல் நலம் பற்றி சொல்லித்தரும் ஆர்வலர்களால் பயன் படுத்தப்படுகிறது. இதன் நல்லதும் அல்லதும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இப்போது ஒரு நல்ல முன் மாதிரியாக செயல்படுகிறது.

1950 இல் உளவியல் வல்லுனர்களால் இந்த செயல் முறையும் திட்டமும் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.மக்கள் நோயை தடுக்க வரும் திட்டங்களில் ஏன் அதிக அளவில் பங்கு பெற வரவில்லை என்பதை ஆராய மேற்கொண்ட முயற்சியின் விளைவே இந்த கருத்தும் மாதிரியும்.

உளவியல் வல்லுனர்கள் முதலில் மனிதனுக்கு புதிய ஒரு தொழில் நுட்பம் பற்றி அறியாமையால் ஏற்படும் ஒருவித தயக்கமே மருத்துவ துறையின் புதிய பரிசோதனைகளுக்கு உள்ளாவதை தடுக்கிறது என்று கூறினர். இது இன்னமும் உண்மையாகும். ஒரு கருவி வாங்கும் முன் அதன் பலன்கள், உபயோகிக்க எளிதானதா, அதிக நாட்கள் வருமா, நம்மால் உபயோகிக்க முடியுமா, கொடுத்த பணத்திற்கு ஈடானதா என்றெல்லாம் நாம் மன தினுள்ளேயே ஆராய்வதும், பின் அதிக அளவில் பயன் படுதிய பின் மற்றவருக்கு சொல்வதை போல, உடல் நல  பழக்கங்களிலும் தயக்கம் ஏற்பட அறியாமையே காரணம் என்கிறார் வாட்சன் மற்றும் ஹில்ல.

இதையே இன்னும் ஒருபடி மேலே போய், ஒரு பழக்கத்தால் வரும் நன்மைகளை எடுத்து சொன்னால், கற்றுக் கொள்ள இருக்கும் ஆரம்ப பயம் போய்விடும், மக்கள் இன்னமும் அதிக ஆர்வத்துடன் கற்று கொள்வார்கள் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்த உளவியல் வல்லுனர்கள் கூறினர். மார்பக புற்றுநோய் வரும் அறிகுறி தெரியும் முன்னே நிழல்படம் எடுத்துக்கொண்டோமானால் (Mammography), புற்று நோய் வருவதை தவிர்க்க முடியும் என்பது விளங்கினால், புற்று நோய் வந்தால் அனுபவிக்கக்கூடிய  துன்பங்களை ஒற்று நோக்கில், நிழற்படம் எடுக்கும் போது தெரியும் வலியும் துன்பமும் மிக குறைவு என்பதும் புரிந்தால் பெருவாரியான பெண்கள் தங்களை இப்பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வர்.
இதைத்தான் HBM சொல்கிறது. இது அடிப்படையில் பலன்களை எதிர்பார்த்து செயல் புரியும் மனித மனத்தின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டது.

1. உடல் நலக்குறைவு ஏற்படாதிருத்தல் (பலன்)

2. ஒரு பழக்கம் இந்த நோய் வராமல் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை (எதிர்பார்ப்பு) ஆரம்ப காலத்தில் மக்களை நோய் தடுக்க நிழல் படம் எடுக்க ஊக்கம் தர பயன் பட்ட இந்த நிலைப்பாட்டை,  காலப்போக்கில் நோய்வாய்ப்படும் போதான பழக்கங்கள், திருந்துகின்ற முறைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஊக்கப்படுத்த, அலுவலகத்தில் வேலை செய்வோரை மேலும் உற்சாகப்படுத்த என்று எண்ணற்ற முறைகளில் பயன் படுத்த துவங்கியிருக்கிறார்கள்.

இந்நிலைப்பாடு 6 படிகளை கொண்டது.

1. மனதில் தோன்றும் எண்ணங்கள்: ஒரு மனிதன் தனக்கு நோய் வருமோ என்று மனதில் நினைப்பது. உதாரணமாக நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவன் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை பார்த்துவிட்டு அது போல தனக்கும் உடல் நலம் குன்றுமோ என்று எண்ணுவது.  ஒருவனுக்கு நுரையீரலில் புற்றுநோய் வருவதாக பார்த்துவிட்டு , தானும் புகை பிடிப்பதால் தனக்கும் வருமோ என்று எண்ணி பயப்படுவது. விளம்பரத்தின் உத்தியே புகை பிடிப்பவர்களை பயமுறுத்தி அவர்களை அப்பழக்கத்தை விட்டுவிட தூண்டுவதுதான். மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது, தன்னுடைய உடல் நலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களில் இந்த சலனம் ஈடுபடுத்தும்.

2. நோயின் தீவிரம் குறித்தான எண்ணங்கள்: ஆரம்ப நிலையில் அடிக்கடி இருமலோ, காய்ச்சலோ வருமாயின், மருத்துவர் மிகவும் ஆபத்தாக எதுவும் இல்லை என்று சொன்னாலும் மனம் நிம்மதியாய் இராமல், இணையத்தில் நோய் பற்றிய குறிப்புகளை படிக்கவோ, அல்லது புகைப்பதால் வரும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளவோ தூண்டும். இது நோயின் தீவிரத்தை பற்றிய கருத்துக்களை மனதில் தோற்றுவிக்கும். தன  க்கு நோய் வந்து இறந்து விட்டால் தன் குழந்தைகள், மனைவி எப்படி துன்பப்படுவார்கள் என்றெல்லாம் அச்சப்பட ஆரம்பிக்கும் போது நோயின் தீவரம் குறித்தான எண்ணங்கள் ஒருவித அச்சுறுத்தலாக மாறும்.

3. நன்மைகளை குறித்து மனதில் தோன்றும் எண்ணம்: இப்போது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் அதை மாற்றுவதால் வரக்கூடிய நன்மைகளை மனம் எண்ணிப்பார்க்க ஆரம்பிக்கிறது. நன்மை தீமைகளை கணக்கிடவும் செய்கிறது. புகைப்பதை விட வேண்டும் என்றால் தனக்கு மன உறுதி உண்டா, இதனால் ஒருவித தகைவு ஏற்பட்டு வீட்டில் அல்லது அலுவலகத்தில் எரிச்சலைடைந்து என்னுடைய உறவில் குழப்பம் வருமா, அதிகம் உண்ணத்தோன்றுமா, இதனால் அதிகம் செலவாகுமா, எடை கூடுமா, அந்த நேரத்தில் என்ன செய்யலாம், சிந்திக்கின்றபோது, உணவு உண்டபின் கையில் சிகரெட் வைத்துக் கொண்டு பழக்கமாகி விட்டதே, இப்போது என்ன செய்யலாம் போன்ற பலவும் சிந்தனையில் தோன்றும்.

4. தடங்கல்களாக மனதில் தோன்றுபவை: இங்கே தன்னுடைய பழக்கத்தை மாற்ற ஆகும் செலவு, வேறு பொழுதுபோக்கு வேண்டுமென்றால் அதற்கான நேரம், உடல் நலத்தின் நன்மைகளை மனதில் கொண்டு செய்யவேண்டிய சில செய்கைகள் என்று மனம் எண்ணினாலும் சில தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக இத்தனை நாள் நண்பர்களுடன் அலுவலகத்தி புகை பிடித்து மற்ற விஷயங்களை அலசிக் கொண்டிருந்து விட்டு மறுநால் அதே நண்பர்கள் அழைக்கும் போது உறுதி இன்மை, வேதி பொருள்கள் உடலில் தோற்றுவிக்கும் சலனங்கள், மனதில் தோன்றும் குழப்பங்கள் போன்றவை தடங்கல்களாக இருக்கும்.

5. செயல்பட வேண்டிய குறிப்புகள் (cues to Action): பழக்கத்தை மாற்ற வேண்டிய சில குறிப்புகளை அறிந்து கொள்ளுதல், புகைப்பதை நிறுத்தும் போது எப்படி இருக்கும் என்ன தோன்றும் போன்ற சில முன்னெச்சரிக்கைகள், ஏற்கென  வே நிறுத்தியவர்கள் என்ன முறையை கையாண்டார்கள் போன்ற அனுபவ குறிப்புகள் உதவும். இங்கே ஊடகங்களும் ஒருவகையில் மக்களுக்கு தேவையான குறிப்புகளை தருகின்றன.

6. தன்னம்பிக்கையும் தன்னால் முடியும் என்ற சுய எண்ணமும்: தன்னால் முடியுமா என்ற அவநம்பிக்கை வரும் போதெல்லாம் ஊக்குவிக்கவும் உதவி செய்யவௌம் நண்பர்கள் துணை அவசிய வேண்டும். புகை பிடிப்பதை ஒரு வாரம் நிறுத்திவிட்டு மீண்டும் நிறைய பேர் உடனே துவக்குவதற்கு வேதிபொருட்களின் தூண்டுதலுக்கு பழகிய மனம் அதிலிருந்து விடுபட மறுப்பதுதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors