தமிழோவியம்
திரைவிமர்சனம் : கிரிவலம்
- மீனா

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஹிந்தி திரைப்படம் ஹம்ராஸ் திரைப்படத்தின் தமிழ் வடிவே கிரிவலம். நடனக்குழு ஒன்றை நடத்திவரும் ஷ்யாமின் காதலி அக்குழுவின் முக்கிய டான்சரான தனுஸ்ரீ. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்டின் ஹோட்டலில் நடனமாட ஷ்யாம் மற்றும் குழுவினர் முயற்சி செய்கிறார்கள். முடிவில் முயற்சியில் வெற்றியும் பெறுகிறார்கள். ஹோட்டலில் தனுஸ்ரீயின் நடனத்தைப் பார்த்து மயங்கும் ரிச்சர்ட் அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க - மகிழ்வுடன் அதை ஏற்றுக் கொள்கிறார் தனுஸ்ரீ. மேலும் இதைப் பற்றி ஷ்யாமிடம் கூற - அவரும் அகமகிழ்கிறார். தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண்ணை அடுத்தவன் திருமணம் செய்து கொள்ள காதலனே எப்படிச் சம்மதிக்கிறான்? ஏன் சம்மதிக்கிறான்? அவர்களுக்கு ஏன் அவனே திருமண செய்து வைக்கிறான்? இவைகளே படத்தின் முக்கிய கேள்விகள். இதற்கான விடைகளை த்ரில்லர் படத்திற்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷிவ்ராஜ்.

கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் வில்லனாக நடித்திருக்கிறார் ஷ்யாம். தன்னுடைய திட்டத்திற்கு தன் காதலி சம்மதிக்கவில்லை என்பதால் உயிருக்கு உயிராக காதலித்தவரையே காட்டிக்கொடுக்கும் கொடுமைக்காரனாகவும், தனது திட்டத்தை நிறைவேற்ற குறுக்கே யார் வந்தாலும் அவர்களை கொல்லத் தயங்காதவராக வரும் ஷ்யாம் படத்தின் இறுதி கட்டங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்வதைத் தவிர்த்திருந்தால் நன்றாக ஒருந்திருக்கும். மற்றபடி இவரது நடிப்பு ஓக்கே.

பணக்கார கணவனாக ரிச்சர்ட். நிச்சயம் நடிக்க முயற்சி செய்தாக வேண்டும். இல்லையென்றால் தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு இடம் வைத்துக்கொள்வது இவரது கனவாக மட்டுமே இருந்துவிடும். புதுமுகம் தனுஸ்ரீ பரவாயில்லை. கணவருக்கு துரோகம் செய்ய இயலாமல் தவிக்கும் இடங்களிலும், கொலைமுயற்சி சீனிலும் இவரது நடிப்பு சூப்பர். சார்லி மற்றும் ரமேஷ் கண்ணா போன்றவர்கள் ஏதோ ஒப்புக்கு தலையைக் காட்டிவிட்டு போகிறார்கள்.

இசை தேவா. இதைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. படத்தில் ஷ்யாமிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட பாடல் காட்சிகளை இணைத்துள்ளார் இயக்குனர். நெருடலான விஷயங்களில் இதுவும் ஒன்று. அபத்தமான நகைச்சுவை காட்சிகளைத் தவிர்த்திருந்தாலே படம் சுமாராக இருந்திருக்கும். ரீமேக் படங்களை நம் தமிழ் சினிமாவிற்கு ஏற்ற வகையில் எடுப்பது என்பதே ஒரு கலை. இயக்குனர் ஷிவ்ராஜ் அதைப் பற்றி கவலையே படாமல் அப்படியே ஹிந்தியிலிருந்து காப்பியடித்திருப்பதை தவிர்த்து கொஞ்சமாவது தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்ற முயற்சி செய்திருக்கலாம். மொத்தத்தில் கிரிவலம் - ரொம்பவும் பொழுதே போகாதபோது பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.

Copyright © 2005 Tamiloviam.com - Authors