தமிழோவியம்
தராசு : வரலாற்றை மாற்றும் முயற்சி
- மீனா

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 10வது முடித்தவுடன் பெரும்பான்மையான மாணவர்கள் படிக்க விரும்பும் பாடத்துறைகள் அறிவியல், கணிதம் மற்றும் வணிகவியல் தான். தமிழகக் கல்வித்துறையைப் பொறுத்த மட்டில் 11 ஆம் வகுப்பில் வரலாற்றுப் பிரிவை எடுக்கும் மாணவர்கள் மிகவும் குறைவு. ஏதோ ஒரு சில மாணவர்களாவது வரலாற்றை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்துவருகிறார்களே என்று நினைத்திருக்க தற்போது அதற்கு ஒரு பெரிய வேட்டு வைத்திருக்கிறார்கள் நம் கல்வித்துறை அதிகாரிகள்.

+2 வகுப்பிற்கான வரலாற்றுப் புத்தகத்தை தப்பும் தவறுமாக வெளியிட்டு இந்திய - உலக வரலாறையே மாற்றி அமைத்திருக்கிறார்கள் சென்னை பல்கலைக் கழக முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் உள்ளிட்ட ஏழு பேராசிரியர்கள். இந்த வருடத்திற்கான புதிய பாடத் திட்டத்தின் கீழ் வரலாற்றுப் பாடபுத்தகத்தை எழுதியுள்ள இந்த 7 பேர் குழுவினர் முன்னுக்குப் பின் முரணான ஏகப்பட்ட தகவல்களை பாடப்புத்தகத்தில் கொடுத்துள்ளார்கள். பல இடங்களில் ஆண்டுகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் மொழி பெயர்ப்பு தவறு என்றும், வரைபடங்களில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் இப்புத்தகத்தைப் பற்றி வரலாற்றுத் துறையைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படி தவறுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ள இப்பாட புத்தகத்தைப் படித்து மாணவர்கள் தேர்வெழுத வேண்டிய நிலையை என்னவென்று சொல்வது? தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு மாணவர்கள் பதில் எழுதினால் அவர்கள் நிலை என்ன ஆகும்? மொத்தத்தில் இந்த வருட வரலாறு மாணவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழப்போவது நிச்சயம்.

அறிவியல் கணிதம் மற்றும் வணிகவியல் துறைகளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட வரலாறு பாடங்களுக்கு நம் கல்வி அதிகாரிகள் தருவதில்லை என்பது உண்மை என்றாலும் இந்த அளவிற்கு புத்தகம் வெளியிடுவதில் அவர்கள் காட்டியிருக்கும் கவனக்குறைவு நிச்சயம் கண்டனத்திற்கு உரிய ஒரு விஷயம். வரல¡ற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்து டாக்டர் பட்டம் பெறும் ஆர்வலர்கள் இன்றும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை இந்த அதிகாரிகள் கொஞ்சமாவது கவனத்தில் வைக்கவேண்டும். உலக அரங்கில் இன்றும் இந்தியாவின் வரலாற்றுப் பெருமைகளைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அதிகாரிகள் உணரவேண்டும்.

நம் இந்தியா 2000 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகம் கொண்டது, 3000 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகம் கொண்டது என்று வெறுமனே சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் கிடையாது. அத்தகைய பழமை வாய்ந்த நாகரீக - கலாச்சாரப் பெருமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வது நம் வரலாறு தான். இதை நம் மாணவர்களுக்கு முறையாக கற்பிக்க வேண்டியது நமது அரசின் கடமை. அரசின் அங்கமான அதிகாரிகளின் கடமை. விடுதலை அடைய நாம் என்ன பாடுபட்டோம் என்பதை இளைய சமுதாயத்திற்கு உரிய முறையில் எடுத்துச் சொல்லவேண்டும். அப்போது தான் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் எண்ணம் கொஞ்சமாவது நம் மனதில் தோன்றும். எனவே அரசு அதிகாரிகளே!! வரலாற்றை மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors