தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : இருப்பிடப் பதிவு - 2
- எழில்

வலையமைப்பினையும் தனக்குரிய செல்லையும் தேர்ந்தெடுத்தவுடன் தனது இருப்பிடத்தை வலையமைப்பில் பதிவு செய்யும் முயற்சியில் செல்பேசி என்னென்ன செய்கிறது ?

பரிவர்த்தனை நிகழ்த்த தனக்கு ஒரு நேரத்துண்டு (Time slot) வேண்டுமல்லவா ? எனவே தள நிலையத்தைத் தொடர்பு கொண்டு தனக்கு ஒரு நேரத்துண்டு கேட்க வேண்டும். சரி நேரத்துண்டு வேண்டுமென்று எந்த நேரத்தில் கேட்பது ? செல்பேசி நினைத்த நேரத்தில் தள நிலையத்திற்குத் தகவல் அனுப்பினால் என்னவாகும்? நினைத்த நேரத்தில் தகவல் அனுப்பினால் , தகவல் பிற செல்பேசிகள் அனுப்பும் தகவலோடு மோதி அழிந்து போக வேண்டியதுதான். எனவே செல்பேசி தகவல் அனுப்ப எப்படி முடிவு செய்கிறது ?  சென்ற பதிவில் செல்பெசி தள நிலையத்துடன் நேர ஒத்தியைவு செய்து கொள்கிறதென்று பார்த்தோம். அவ்வாறு நேர ஒத்தியைவு கொள்வதால் தள நிலையம் (அதாவது வலையமைப்பு) பின்பற்றும் கால வரையறைகள் செல்பேசிக்குப் புரிந்து விடும் .ஒரு நேர வரையறையின்(Time frame) ஏதாவது ஒரு நேரத்துண்டைத் தற்போக்காகத்(randomly) தேர்ந்தெடுத்து அந்த நேரத்துண்டில் செல்பேசி தள நிலையத்திடம் தனக்குப் பயன்படுத்த ஒரு தனியான நேரம் (Time slot ) அல்லது தடம் கேட்கிறது. தற்போக்காகத்தான் அந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்கிறது. அதே நேரத்தில் வேறு ஏதாவது செல்பேசி தள நிலையத்திற்குத் தகவல் அனுப்புகிறதா என்றெல்லாம் செல்பேசிக்குத் தெரியாது . இவ்வாறு செல்பேசி அனுப்பும் தகவற்தடம் தற்போக்கு அணுகல் தடமென்று பெயர்பெறும் (Random Access). இதே நேரத்தில் வேறொரு செல்பேசியும் தகவல் அனுப்பினால் தகவலானது முட்டி மோதி அழிந்து விடும் . சரி, தகவல் தள நிலையத்தை அடைந்ததா அல்லது இடையிலேயே அழிந்து போனதா என்று செல்பேசிக்கு எப்படித் தெரியும்? தக்வலானது அழிந்து போனால் தள நிலையத்தை அத்தகவல் அடைந்திருக்க முடியாது. அத்தகவல் தள நிலையத்தை அடைந்திருந்தால் , தள நிலையம் உடனே அத்தகவலுக்குப் பதில் அனுப்பி இருக்கும். ஆக, தள நிலையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் பதில் வரவில்லையென்றால் , தான் அனுப்பிய தகவல் சிதைந்து விட்டதென செல்பேசி புரிந்துகொள்கிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு தகவல் (நேரத்துண்டு வேண்டுமெனக்கு என) தள நிலையத்திற்கு அனுப்புகிறது. இவ்வாறு , தானனுப்பிய தகவல் தள நிலையத்தைப் போய்ச்சேரும் வரை தற்போக்கு அணுகல் தகவல் தொடர்கிறது . கவனிக்க, இந்த ஒரு தகவல் தான் தற்போக்குத் தடம். மற்ற தகவல்களெல்லாம் தனக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் நிகழ்வதால் இவ்வளவு பிரச்சினைகள் இல்லை.

சரி, ஒரு செல்பேசி அனுப்பிய தற்போக்கு அணுகல் தகவல் தள நிலையத்தை அடைந்தாதக வைத்துக்கொள்வோம் . அத்தகவலை ஆராய்ந்த தள நிலையம் , வேறு எந்த செல்பேசியும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு நேரத்துண்டினைச் செல்பேசிக்கு வழங்குகிறது.  " அடுத்த நேர வரையறையிலிருந்து ஐந்தாவது நேரத்துண்டை உனக்கு வழங்குகிறேன். பயன்படுத்திக்கொள் " என்று அந்தத் தகவல் இருக்கும்.அவ்வாறு அனுப்பப் படும் தகவல் அணுகல் அனுமதித் தடம் (Access Grant Channel ,AGCH)  என்றழைக்கப்படுகிறது. இத்தகவலைப்பெற்றவுடன் செல்பேசி அந்த நேரத்துண்டைத் தனதாக்கிக் கொண்டு தகவல் அனுப்ப ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நேர வரையறையின் ஐந்தாவது நேரத்துண்டில் தான் அனுப்ப வேண்டிய தகவல்களைத் தள நிலையத்திற்கு அனுப்பும் . தனது இருப்பிடத்தைப் பதிவு செய்யவே இத்தகவல் பரிமாற்றம்.

" ஐயா எனது இருப்பிடத்தைத் தயை கூர்ந்து குறித்துக்கொள்வீர்களாக" என்று தள நிலையத்திடம் அனுமதி கேட்கிறது . இத்தகவலுக்குப் பெயர் இருப்பிடப் பதிவு வேண்டல் (Location Registration Request ) என்ப்படும். சரி என்ன சொல்லிச் சேர்க்க அனுமதி கேட்கும் ? ஸிம் அட்டையின் பயனாளர் அடையாள எண்ணைப் ( IMSI) பயன்படுத்தித்தான். இத்தகவலைப் பெற்ற தள நிலையம் பதில் தகவல் அனுப்பும் . எப்படி? " சரி , உன்னைச் சேர்த்துக்கறேன். அதற்கு முன் நீ சரியான ஆள் தானா அல்லது ஏமாற்றுக்காரனா ? எனது நெட்வொர்க்கைச் சேர்ந்த ஆசாமியா என்று நிரூபிக்க வேண்டும் " என்று கூறி , செல்பேசியை ( அதாவது ஸிம் அட்டையை) உறுதிப்படுத்தும்படி கேட்கிறது. ஏற்கனவே பழைய பதிவில் இதனைப்பற்றி நாம் படித்துள்ளோம். அதை மீண்டும் நினைவு கூறுவோம். உறுதிப்படுத்தும் தகவலை ( Authentication request) தள நிலையம் அனுப்புகிறது . இத்தகவலுக்குள் ஒரு தற்போக்கு எண் (Random Number )அனுப்பப் படும். இந்தத் தற்போக்கு எண்ணை ஸிம் அட்டைக்கு அனுப்புகிறது கைக்கருவி . ஸிம் அட்டையானது , கைக்கருவியிலிருந்து பெற்ற தற்போக்கு எண்ணைக் கொண்டும் தன்னிடமுள்ள ஒரு உறுதிப்படுத்தும் ரகசிய எண் -(Ki)ணைக்கொண்டும் சில கணக்கீடுகள் செய்து ஒரு எண்ணை உருவாக்குகிறது . அந்த எண்ணுக்கு குறியீட்டுப் பதிலெண் (Signed Response , SRES ) என்று பெயர். இந்த எண் கைக்கருவிக்கு அனுப்பப் பட்டு மீண்டும் தள நிலையத்திற்கு அனுப்பப் படுகிறது , இந்த எண்ணைச் சுமந்து செல்லும் நேரத்துண்டுத் தடத்துக்கு உறுதிசெய்யும் பதில் தடம் ( Authentication Response) என்று பெயர். குறியீட்டுப் பதிலெண்ணைப் பெற்ற தள நிலையம் அவ்வெண்ணை உறுதி செய்யும் மையத்துக்கு (Authentication Center, AuC) அனுப்புகிறது . உறுதி செய்யும் மையத்தில் அந்தக் குறிப்பிட்ட ஸிம் அட்டையின் ரகசிய எண் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தள நிலையம் அனுப்பும் தற்போக்கு எண்ணைக் கொண்டு உறுதிப்படுத்தும் மையமும் ஸிம் அட்டை போல் ஒரு குறியீட்டுப் பதிலெண்ணைக் கணக்கிட்டு வைத்திருக்கும். இந்த இரு எண்களும் , அதாவது செல்பேசியிலிருந்து பெறப்பட்ட எண்ணும், உறுதி மையத்திலிருந்து பெறப்பட்ட எண்ணும் ஒரே எண் எனில் ஸிம் அட்டை அந்த வலையமைப்பைச் சேர்ந்ததுதான் என்று முடிவு செய்யப்படுகிறது. சற்றுக் குழப்பமாக இருக்கிறதா? கீழுள்ள படத்தினைக் கவனியுங்கள்!

இந்தக் கைப்பேசியை வலையமைப்பில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்படுகிறது. பின்னர் தள நிலையம் அனுப்பும் தகவல் மறையீட்டுத் தகவல் (Ciphering Request). அதாவது , செல்பேசியை உபயோகித்து நாம் பேசும் போது நாம் பேசும் தகவல்களைப் பிறர் இடைமறித்துக் கேட்காமலிருக்க , அனுப்பப்படும் பேச்சினை குறியீடு செய்தே அத்தகல்கள் அனுப்பப் படுகின்றன, இத்தகவல்களைப் பிறர் இடைமறித்தாலும் அவர்களால் அத்தகவலை மறையீடு நீக்கம் (Decrypt or Decipher) செய்ய இயலாது , ஏனெனில் எந்த முறையைப் பயன்படுத்தி தகவலைக் குறியீடு செய்தோம் என்பது கைப்பேசிக்கும் தள நிலையத்திற்கும் தான் தெரியும். தள நிலையம் அனுப்பும் தகவல் மறையீட்டுத் தகவலுக்கும் மறுமொழி அனுப்புகிறது செல்பேசி. இத்தகவலுக்கு மறையீட்டு பதில்தகவல் (Ciphering response) என்று பெயர் .

இறுதியாக, செல்பேசியை நெட்வொர்க்கினுள் பதிவு செய்கிறது. நெட்வொர்ர்க்கின் தகவல் தரவுத்தளங்களான முதன்மை இருப்பிடப் பதிவேடு (Home Location Register) மற்றும் வருகை இருப்பிடப் பதிவேடு (Visitor Location Register) , இரண்டிலும் செல்பேசியின் இருப்பிடம் பதிவு செய்யப் படுகிறது . செல்பேசிக்கு ஒரு தற்காலிக எண் (Temporary Mobile Subscriber Identity , TMSI) வழங்கப்பட்டு அந்த எண்ணும் நெட்வொர்க்கின் அனைத்து தரவுத்தளங்களிலும் பதிவு செய்யப் படுகிறது. இந்தத் தற்காலிக எண்ணைக் கொண்டே ஒரு குறிப்பிட்ட செல்பேசியை வலையமைப்பு அடையாளம் காணுகிறது . ஒவ்வொரு ஸிம் அட்டைக்கும் சர்வதேச செல்பேசிப் பயனாளர் அடையாள எண் (IMSI)இருக்கும் என்று பார்த்தோமல்லவா ? பின்னர் ஏன் இந்த தற்காலிக எண்ணைக் (TMSI) கொண்டு செல்பேசி அடையாளம் காணப்படுகிறது ? பாதுகாப்புக் காரணம் கருதியே. பரிவர்த்தனையின் போது இந்த சர்வதேச எண் பயன்படுத்தப் பட்டால் பிறர் அந்த எண்ணை அறிந்து தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்படலாம் .இப்படியாக எந்த விதத்திலும் தவறு நேர்ந்துவிடவோ, தவறாகப் பயன்படுத்தவோ அனுமதிக்காமால் ஒரு உயர்வகைப் பாதுகாப்பு முறை இந்த ஜி எஸ் எம் திட்டத்தில் கடைப்பிடிக்கப் படுவது இதன் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம் .

சரி, செல்பேசிக்குத் தற்காலிக எண் ஒன்றை உருவாக்கியாயிற்று. ஸிம் அட்டையின் அடையாள எண் (IMSI) மற்றும் செல்பேசி எண் (Mobile Number ) ஆகியவற்றுடன் இந்தத் தற்காலிக எண் (TMSI)தொடர்பு படுத்தப்படுகிறது (mapping) . அதாவது உங்கள் செல்பேசி எண்ணை எவரேனும் அழைத்தால் செல்பேசி எண்ணை வைத்து , நெட்வொர்க் தற்காலிக எண்ணை அடையாளம் காண்கிறது.

இருப்பிடப் பதிவின் இறுதி நிகழ்வாக , இந்தத் தற்காலிக எண் செல்பேசிக்குத் தெரிவிக்கப் படும். இந்தத் தற்காலிக எண்னைச் சுமந்து செல்லும் தகவல் இருப்பிடப் பதிவு அனுமதித் தகவல் (Location update accept) எனப்படுகிறது, இந்த எண்ணைத் தன்னுள் குறித்து வைத்துக் கொள்கிறது செல்பேசி . பின்னர் ஏதேனும் அழைப்பு வந்தாலும் தள நிலையம் இந்தத் தற்காலிக எண்ணைக் கொண்டே செல்பேசியைத்தேடும் . இந்தத் தற்காலிக எண்ணோடு , செல்பேசி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் இருப்பிட எண் (Location Area Identity) -ணும் செல்பேசிக்குத் தள நிலையம் அனுப்புகிறது

இவ்வாறாக செல்பேசி தன்னை வலையமைப்பில் இணைத்துக் கொண்டவுடன் தனக்கு வழங்கப்பட்ட நேரத்துண்டை விடுவிக்கிறது. பின்னர் முடக்க நிலைக்குச் (Idle mode) செல்கிறது.
 


குறுஞ்செய்தி:

ஜி எஸ் எம் கைக்கருவி விறபனையில் முன்னணி நிறுவனங்கள் : தற்போதைய சந்தை நிலவரப்படி

முதலிடம்  : நோக்கியா

இரண்டாமிடம் : மோடரோலா

மூன்றாவது : ஸாம்ஸங்

நான்காவது : எல்ஜி

ஐந்தாவதிடம் : ஸோனி எரிக்ஸன்

ஆறாவது : ஸீமன்ஸ்

Copyright © 2005 Tamiloviam.com - Authors