தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : 'பழி ஓரிடம், பாவம் ஓரிடம்' (இறுதி பாகம்)
- என். சொக்கன்

பாடல் 109

'பழி ஓரிடம், பாவம் ஓரிடம்', என்று நம் ஊரில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி சொல்வார்கள். (இதையே, நேரெதிராய்த் திருப்பி, 'வெல்லம் தின்பவன் ஒருவன், விரல் சூப்புகிறவன் இன்னொருவன்', என்று சொல்வதும் உண்டு.)

பாண்டியனைக் காதலிக்கும் இந்தப் பெண்ணின் கதையும், கிட்டத்தட்ட அதைப்போன்றதுதான் - கண்கள் செய்த தப்புக்கு, எந்தப் பாவமும் அறியாத அவளுடைய தோள்கள் மெலிந்து வாடுகின்றன.

உழுது, பயிரிட்ட நிலத்தில், பயிர்கள் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்தன. அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த ஒரு கன்று, அந்தப் பயிர்களைப் பார்த்தது - பச்சைப்பசேலென்று செழித்திருந்த அந்தப் பயிர்களைக் கண்டதும், அதன் நாக்கில் எச்சில் ஊறியது - பின்விளைவுகளைப்பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல், சட்டென்று வயலினுள் புகுந்து, பயிரை மேய்ந்து தின்றுவிட்டது.

இந்த கலாட்டாவெல்லாம் நடந்து முடிந்தபிறகு, மறுநாள் அந்த வயலின் சொந்தக்காரன் வந்தான் - இந்த அநியாயத்தைப் பார்த்ததும், 'ஐயோ, ஐயோ !', என்று கதறித் துடித்தான், 'யார் செய்த அநியாயம் இது ?', என்று கோபமாய்க் கத்தியபடி, வயலைச் சுற்றிச்சுற்றி வந்தான்.

அப்போது, பக்கத்து வயலில் ஒரு அப்பாவிக் கழுதை மேய்ந்துகொண்டிருந்தது - அந்தக் கழுதைதான், இந்த வயலையும் மேய்ந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டான் அந்த விவசாயி. கோபத்துடன் அந்தக் கழுதையின்மீது பாய்ந்து, அதை நன்றாக அடித்துத் துவைத்து, அது செய்த தவறுக்கு தண்டனையாக, அதன் காதையும் வெட்டிவிட்டான்.

பாவம் அந்தக் கழுதை, எந்தத் தவறும் செய்யாமலேயே, அநியாயமாய் தண்டனையை அனுபவித்தது - ஆனால், உண்மையில் தப்புச் செய்த ஊர்க் கன்று, எந்தக் கவலையும் இல்லாமல் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

- இந்தக் கதையைச் சொல்லி, அதோடு தன்னுடைய இப்போதைய நிலைமையை ஒப்பிடுகிறாள் இந்தப் பெண்.

'தோழி, என் காதலன் பாண்டியனை முதன்முதலில் பார்த்தது, என்னுடைய கண்கள்தான். ஆனால், அவன் என்னைப் பிரிந்து சென்றபோது, இந்தக் கண்களுக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், என்னுடைய அகன்ற, பெரிய தோள்கள்தான், பசலை நோய் கொண்டு, வாடி, மெலிந்துவிட்டன. அந்த விவசாயி, தன்னுடைய வயலை மேய்ந்த கன்றை விட்டுவிட்டு, எந்தத் தவறும் செய்யாத கழுதையின் காதை அறுத்ததுபோல், என்னுடைய காதலுக்கு முதல் காரணமான கண்கள் தப்பித்துவிட்டன, எந்தப் பாவமும் அறியாத என்னுடைய தோள்கள் அதற்கு தண்டனை அனுபவிக்கின்றன !'


உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவிஅரிந் தற்றால் வழுதியைக்
கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு.

(உழுத்தஞ்செய் - உழுத வயல்
அரிந்தற்றால் - வெட்டியதைப்போல
இருப்ப - இருக்க
பணைத்தோள் - பெரிய / அகன்ற தோள்கள்
பசப்பு - பசலை நோய்)


பாடல் 110

வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையை அணிந்த பாண்டியன், கம்பீரமாய் வீதியில் வலம் வருகிறான்.

அப்போது அவனைப் பார்த்தாள் ஒரு பெண் - அந்த அழகனைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள் அவள், மறுவிநாடி, அவளுடைய நெஞ்சம் அவன்பின்னே சென்றுவிட்டது.

மாலை வந்தது, இரவு வந்தது - இந்தப் பெண்ணுக்கோ இருப்புக்கொள்ளவில்லை, எந்நேரமும் பாண்டியன் நினைவுதான், அவனைத் தேடிச் சென்ற தன்னுடைய மனதை எண்ணி, ஏக்கத்தோடு பாடுகிறாள்.

'என் காதலன் பாண்டியனை விரும்பி, அவன் பின்னே சென்ற என்னுடைய நெஞ்சுக்கு என்ன ஆனது ? இந்நேரம் அவனுடைய அரண்மனையைச் சென்றுசேர்ந்திருக்குமா ? அல்லது, இன்னும் வழியில் சென்றுகொண்டுதான் இருக்கிறதா ?'

- இப்படிச் சந்தேகப்பட்டாலும், தன்னுடைய மனம், அவனுடைய இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டது என்று ஏதோ ஒரு நிச்சயமான எண்ணம் அவளுக்குத் தோன்றுகிறது - ஆகவே, மேலும் சில கேள்விகளை அடுக்குகிறாள் :

'அவன் பெரிய அரசன் - அவனைப் பார்ப்பதற்கு யார் யாரோ வந்திருப்பார்கள், அவர்களுக்கு நடுவே, என் நெஞ்சு அவனைச் சந்தித்துப் பேச நேரமும், வாய்ப்பும் கிடைக்குமா ? அப்படிக் கிடைக்கும்வரை, என் நெஞ்சு எங்கே காத்திருக்கும் ? அவன் வீட்டு வாசலில் நின்றபடி, இடுப்பில் கை வைத்துக்கொண்டு, என்னைப்போலவே ஏக்கத்தோடு காத்திருக்குமா ?'

'காதலனிடம் நெஞ்சைப் பறிகொடுத்தேன்', என்று கதைகளில், கவிதைகளில் சம்பிரதாயமாய்ப் படித்திருக்கிறோம் - ஆனால், இந்த முத்தொள்ளாயிரக் காதலி, அதை ரொம்பவும் தீவீரமாய் எடுத்துக்கொண்டு, தன்னுடைய நெஞ்சை, பாண்டியனுக்கு அவள் அனுப்பிய தூதாகவே நினைக்கிறாள், 'சீக்கிரம் அவனைச் சந்தித்து, என் காதலைச் சொல்லி, நல்ல பதிலை வாங்கிக்கொண்டு திரும்பி வா !', என்று தன் நெஞ்சுக்கு அழைப்பு அனுப்பியவண்ணம் இருக்கிறாள் !


சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெருந்துணையும்
நின்றதுகொல் நேர்மருங்கில் கைஊன்றி முன்றில்
முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு
உழந்துபின் சென்றஎன் நெஞ்சு.

(போந்தது - போய்ச்சேர்ந்தது
செவ்வி - சரியான சந்தர்ப்பம் / தருணம்
பெறுந்துணை - கிடைக்கும்வரை
மருங்கு - இடுப்பு
முன்றில் - முற்றம்
கடாயானை - மதம் பிடித்த யானை
மொய்ம்மலர்த்தார் - (வண்டுகள்) மொய்க்கும் மலர் மாலை
உழந்து - ஆசைப்பட்டு)

       (முற்றும்)திரு. என்.சொக்கன் அவர்கள், கடந்த ஒரு வருடமாய் 'முத்தொள்ளாயிரம்' பாடல்களை எளிய தமிழில் சுவையாகவும், நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடனும் எழுதி வந்துள்ளார். ஒவ்வொரு வாரமும் 'நினைவூட்டல் இல்லாமல்' சரியான நேரத்திற்கு படைப்பினை அனுப்பி வைத்தமைக்கு ஒரு சபாஷ்.

இவர் இதுவரை ஐம்பது சொச்சம் சிறுகதைகளும், அதில் பாதியளவு கட்டுரைகளும், மூன்று குறுநாவல்களும்,  எட்டு புத்தகங்களும் எழுதியுள்ளார்.

http://www.kamadenu.com/cgi-bin/authour_search.cgi?authname=N.Chokkan

எழுத்தாள நண்பர் பா. ராகவன், இவருக்குத் தந்துவரும் ஊக்கமும், தொடர்ச்சியான வாய்ப்புகளும்தான் தமிழிலக்கியத்துக்கு என். சொக்கன் கிள்ளிப்போட்டிருக்கும் துரும்புக்கு முதல் மற்றும் முக்கியக் காரணம் என்று சொல்லலாம் !

ஒரு புதிய படைப்புடன் உங்களை விரைவில் சந்திப்பார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆர்

Copyright © 2005 Tamiloviam.com - Authors