தமிழோவியம்
தராசு : மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை
- மீனா

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் இவ்வேளையில் உண்மையிலேயே இந்த அரசு சாதித்திருப்பது என்ன என்று ஆராய்ந்தால் பதில் ஒன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.

ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் சமாளிக்க முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது. அரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.  இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மேலும் பெருகிவரும் உள்நாட்டு பயங்கரவாதம் மக்களின் அமைதியான வாழ்விற்கு கடும் பங்கம் ஏற்படுத்திவருகிறது. அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, ஜம்மு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இதில் சம்மந்தப்பட்டவர்களை இன்னமும் பிடிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை. போதாத குறைக்கு கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் குறித்து வாயைத் திறக்கவே மத்திய அரசு தயங்குகிறது. மதானி என்ன சுதந்திரப்போராட்ட தியாகியா கருணை காட்ட? இவ்வளவு ஏன் தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இவைகள் எல்லாம் மத்திய அரசு தீவிரவாதத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்தின் உதாரணங்கள்..
 
முன்பு எப்போதும் இருந்திராத அளவிற்கு மத்திய அமைச்சரவையில் மந்திரிகளாக இருப்பவர்கள் கொலை - கொள்ளை போன்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஜெயில் வாசம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளைவிட ஆக்ரோஷமாக அரசை எதிர்க்கும் தோழமைக் கட்சிகள் தரும் ஆதரவில் மத்திய ஆட்சி நடக்கிறது. அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையேயும், அமைச்சகங்களுக்கு இடையேயும் ஒருங்கிணைந்த செயல்பாடும் இல்லை - மக்களின் பிரச்சினைகளை இந்த அரசு தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு இல்லை. இதுதான் தற்போது நடந்த முடிந்த மாநில தேர்தல்களில் மக்களின் முடிவாக பிரதிபலித்தது. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் முடிந்தவரை காலம் தள்ளுவோம் என்ற நினனப்பில் தான் இந்த அரசில் இடம்பெற்றுள்ளவர்கள் செயல்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

எனவே ஆட்சியாளர்கள் தாங்கள் செய்ய நினைத்ததை எல்லாம் செய்துவிட்டதாக சொல்லி போலியான சாதனைப் பட்டியலை மக்களுக்குக் காட்டாமல் உண்மையில் ஏதாவது நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் மாநில அளவில் செய்ததை மக்கள் மத்திய அளவிலும் செய்துவிட நேரும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors