தமிழோவியம்
தராசு : தமிழக மக்கள் செய்த துர்பாக்கியம்
- மீனா

Jaya - MKதமிழக மக்கள் செய்த துர்பாக்கியம் என்னவென்று தெரியவில்லை.. நமது தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் எடாகூட ஏகாம்பரங்களாகவே இருந்து வருகிறார்கள். அரசியல் நாகரீகம் என்பதை முற்றிலுமாக மறந்து வன்மத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு திரிகிறார்கள் நம் தமிழக அரசியல்வாதிகள்.

2001 - 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலமாக எந்த ஒரு சட்டமன்றக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள வெறுமனே சட்டமன்றம் கூடும் நாட்களில் வந்து கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிட்டார். இவர் வெறுமனே வந்து கையெழுத்துப் போடத்தான் அந்தத் தொகுதி மக்கள் இவரைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளைக் குறித்து பேசவேண்டியவர் M.G.R எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டம்னறத்திற்கு வந்தாரா? என்று எதிர் கேள்வி கேட்டுவிட்டு சட்டமன்றத்தை 5 வருடங்களாக புறக்கணித்து வந்தார். ஒரு வேளை சட்டமன்றத்திற்கு வந்தால் முதல்வராகத்தான் வருவேன் என்று நினைத்துக்கொண்டாரோ என்னவோ..

அப்போது அவர் என்ன செய்தாரோ அதையேதான் தற்போது ஆண்டிப்பட்டித் தொகுதியில் ஜெயித்திருக்கும் ஜெயலலிதாவும் செய்கிறார். தான் அவைக்கு வரப்போவதில்லை என்றும், தனக்கு பதிலாக பன்னீர்செல்வம் எதிர்கட்சித்தலைவராக இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்ற முறை கருணாநிதி சட்டமன்றத்திற்கு வராததற்கு அவரைக் கடுமையாக சாடிய ஜெயலலிதாவே தற்போது சட்டமன்றத்தைப் புறக்கணிப்பதுதான் இதில் முக்கிய விஷயம். "சட்டமன்றத்தில் உள்ளவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்.. அங்கே வந்தால் எனக்கு பாதுகாப்பில்லை.." என்ற ரீதியில் ஜெயலலிதா பேசியிருப்பது வேதனைக்குரியது. ஒரு முன்னாள் முதல்வர் - எதிர்கட்சித் தலைவருக்கே சட்டமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் அந்த மாநிலத்தில் மக்களின் பாதுகாப்பு எவ்விதம் இருக்கும் என்ற கேள்வியை மற்ற மாநிலங்கள் எழுப்பும் விதத்தில் அவர் கருத்து கூறியிருப்பது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம்.

மொத்தத்தில் தி.மு.க தலைவரும் அ.தி.மு.க தலைவரும் வந்தால் முதல்வராகத்தான் தாங்கள் சட்டமன்றத்திற்கு வருவோம். இல்லாவிட்டால் புறக்கணிப்போம் என்ற போக்கை கடைபிடிப்பது வேதனையிலும் வேதனை. சட்டமன்றத்திற்கு இத்தகைய தலைவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்களுக்கு இவர்கள் செய்யும் கைமாறு இதுதானா?

இத்தகைய அணுகுமுறையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைவியோ அல்லது பி.ஜே.பி உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்களோ கொண்டிருந்தால் நம் நாட்டின் நிலை என்ன ஆகும்? ஏற்கனவே மத்தியில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் நட்புணர்வோடு பழகும் விதத்தைக் கண்டு நம் தமிழகத் தலைவர்களும் இவ்வாறு நட்புறவோடு பழக மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். நட்பாக பழகுவதா? ஒருவர் இருக்கும் திசையிலேயே அடுத்தவர் இருக்க மாட்டோம் என்ற ரீதியில் பழகி வருகிறார்கள் நம் தமிழக தலைவர்கள். எப்போதும் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கும் இவர்கள் எல்லாம் என்றுதான் ஓட்டுப்போட்டு தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றி நினைக்கப்போகிறார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors