தமிழோவியம்
உடல் நலம் பேணுவோம் : இரும்பு சத்து: தொடர்ச்சி
- பத்மா அர்விந்த்

உலக சுகாதார மையம் உணவினால் வரும் குறைபாடுகளிலேயே இரும்புச்சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அ  திகம் என்று கூறுகிறது. 80%  இக்குறைபாட்டால் அவதியுறுவ  தாகவும் அதில் 33% இதனால் ஏற்படும் இரத்த சோகையால் தவிப்பதாகவும் கூறுகிறது. முதலில் இரும்பு சத்து நமது தேவையை விட நாம் உட்கொள்ளும் அளவு குறைவாக இருப்பதால் குறைபாடு ஏற்படும். ஆரம்பத்தில் இரத்த சோகையய தவிர்க்க, ஏற்கெனவே இருக்கும் சேமிப்பிலிருந்து இரும்பை உபயோகித்து கொள்ளும். ஆகையால் இரத்த சோகை என்பது மிக அதிகமான இரும்பு குறைபாட்டையே குறிக்கும். இவ்வகை இரத்த சோகை உள்ளவர்கள் ஹீமோகுளோபின் சாதாரண உடல் நல மேன்மை நிலையைவிட மிகவும் குறைவாக இருக்கும்.

முதலில் இரும்பு குறைபாட்டால் வரும் இரத்த சோகை என்ன காரணங்களால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். அதிக அளவு இரத்த போக்கு, இரும்பினை சிறுகுடல் உறிஞ்சுவதில் தடை, மாதவிலக்கு காலங்களில் இரத்த போக்கு இவற்றால் இரும்பு அதிக அள வில் வெளியேறி இரத்த சோகை வருகிறது.

சிறுநீரக குறைபாடு இருந்தால், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய தூண்டும் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாதாகையால், இரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் இரத்த சோகை ஏற்படும்.

வைட்டமின் A இரும்பு சேமிப்பில் இருந்து மெல்ல திசுக்களுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது. இதனால் வைட்டமின் A குறைபாடு இருந்தாலும் இரத்த சோகை வரும். இது வளரும் நாடுகளில் அதிகம் காணப்படும்.


இரும்பு குறைபாட்டால் வரும் இரத்த சோகைக்கான அறிகுறிகள் :

அதிக தளர்ச்சி, சுறுசுறுப்பின்மை,சிறு வயதில் மூளை வளர்ச்சியும் புரிந்து கொள்ளும் திறனும் குறைவாக இருத்தல்,  நாக்கில் வீக்கம், குறைந்த நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் உடல் வெப்ப நிலையை சமனாக்கி பாதுகாக்கும் தன்மையில் குறைவு இவை அறிகுறிகளாகும்.

மண் சாம்பல் போன்றவை உண்ணுதல் ஒருவகை இரத்த சோகையை குறிபதாக சிலரும், இவற்றை உண்ணுதலால் இரத்த சோகை ஏற்படுவதாக சிலரும் கூறுகின்றனர்.

குடலில் வீக்கம், அயற்சி இருந்தால் அல்லது புற்றுநோய் இதனால் ஏற்படும் சோகை, இரும்பு அதிகமாக உட்கொள்ளுதலால் சரியாவதில்லை.

இரும்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்கள்: கருவுற்றிருக்கும் பெண்கள், சிறு குழந்தைகள், குறைந்த காலத்தில் பிறந்த குழந்தைகள், பருவ வயதை எட்டும் பெண்கள், மாதவிலக்கு காலத்தில் உள்ள பெண்கள், சிறுகுடல் உபாதை உள்ளவர்கள் தங்கள் உணவோடு அதிகம் இரும்பு சத்து நிறைந்த கீரை போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.

தாவர உணவை மட்டுமே உண்பவர்கள் உணவில் உள்ள இரும்பு சத்து, மாமிச உணவில் உள்ளதைவிட குறைவாக உள்ளது. அதிலும் ஹீம் அல்லாத வகையில் குறைபாடு அதிகம். எனவே தாவர உணவை மட்டுமே உண்பவர்கள் இன்னும் அதிகமாக ஹீம் உள்ள உணவையும் அத்துடன் அதிக வைட்டமின் C இருக்கும் பழங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும். இது ஹீம் அல்லாத வகை இரும்பை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

கரு உ ற்றிருக்கும் இளம் பெண்களுக்கு அதிக இரும்பு சத்து தேவையா ? பெண்களுக்கு சாதாரண நாட்களை காட்டிலும் கருவுற்றிருக்கும் போது இரண்டு மடங்கு இரும்பு தேவையாய் இருக்கிறது. குழந்தை நல்ல முறையில் வளரவும், செயல் திறனோடு பிறக்கவும் பெண்களுக்கு இரத்த சோகை வராமல் இருக்கவும் இரும்பு அதிகம் தேவை. இரும்பு சத்து குறைவாக இருந்தால் குறை பிரசவங்கள் ஏற்படலாம். கருவிற்கு தேவையான் இரத்தம், பிரசவத்தின் போது வெளியேறும் இரத்தம் இவற்றிற்கு ஈடு செய்ய அதிக இரும்பு சத்து அவசியம்.

ஒரு நாளைக்கு 27 மில்லி கிராம் அதிகம் இரும்பு கர்ப்பவதிகளுக்கு அவசியம்.

இரும்பு மாத்திரைகள் : எப்போது உணவின் மூலமாக மட்டும் குறுகிய காலத்திற்குள் இரும்பின் தேவையை பூர்த்தி செய்ய முடியாதோ அப்போது இரும்பு மாத்திரைகள், டானிக் போன்ற மருந்துகள் தேவையாகிறது. இதில் இரும்பு ஒரு அயனி குறைவாக ஃபெர்ரஸ் அல்லது ஃபெர்ரிக் வடிவில் கிடிக்கிறது. இரத்ததின் சீரத்தில் உள்ள ஃபெர்ரிட்டின் என்ற இரும்பின் கூட்டு பொருள்  ஒரு லிட்டருக்கு 15 மைக்ரோ கிராமிற்கு குறைவாக இருந்தால், இரும்பு டானிக்குகள் பரிந்துரைக்க படுகிறது. இர்தில் ஃபெர்ரஸ் வடிவம் சுலபமாக உறிஞ்சப்படுகிறது. கீழே உள்ள அட்டவணை எத்தனை சதவிகிதம் இரும்பு தனிமம் இந்த கூட்டு பொருட்களில் உள்ளது என்பதை குறிக்கிறது.

Iron Percentage

ஒரே நேரத்தில் அதிக இரும்பு எடுத்துக்கொண்டால், அத்தனையும் உறிஞ்சிக்கொள்ளப்படுவதில்லை. எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 45 மில்லிகிராம் இரும்பு எடுத்து கொள்ள வேண்டும் என்றால், அதை 15 மில்லிகிராமாக மூன்று தடவை எடுத்து கொள்வது அதிக பலனை தரும்.
இரும்பை டானிக்காக எடுத்து கொள்பவரின் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், ஃபெர்ரிடின் அளவு மூலம் பலன் கிடைக்கிறதா என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். அவ்வாறு பலன் இல்லாமல் சிறுகுடலில் உறிஞ்சுவதில் பிரச்சினை இருந்தால், ஊசி மூலம் மருந்தை உட்செலுத்துவார்கள்.

அதிகமாக உடற்பயிற்சி செய்வோர் இரத்தம் சிவப்பணுக்களை விரைவில் இடமாற்றாம் செய்யும். அதாவது பழைய சிவப்பணுக்களை அழித்துவிட்டு புதியதை உற்பத்தி செய்யும். இதற்கு கூடுதலாக இரும்பு தேவை. அதிலும் தாவர உணவை மட்டுமே உண்டு அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் சீக்கிரம் களைப்படவதை தடுக்கவும் இரத்த சோகை வராமல் தடுக்கவும் கூடுதல் இரும்பு சேர்த்து கொள்வது அவசியம்.

தேவைக்கும் அதிகமாக, சேர்த்து வைப்பதும் முழுமையடைந்த நிலையில் இரும்பு நச்சாக மாற முடியும். ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக குழந்தைகள் இரும்பு சேர்த்து கொண்டால் இறந்து போக வாய்ப்பு இருக்கிறது. எனவே இரும்பு மருந்துகளை பத்திரமாக வைக்க வேண்டும்.

கீழே உள்ள அட்டவணை வயதுக்கேற்ற இரும்பின் அதிக பட்ச அளவை குறிக்கிறது. இதற்கு மேல் அது நச்சாக மாறும்.

வயது ஆண்(mg/day) பெண்(mg/day) கருவுற்ற பெண்கள்(mg/day) பாலூட்டும் அன்னை(mg/day)
7 to 12 months 40 40 - -
1 to 13 years 40 40 - -
14 to 18 years 45 45 45 45
19 + years 45 45 45 45

கீரையில் அதிக இரும்பு சத்து உண்டு. பேரீச்சை போன்ற பழங்களிலும் அதிக இரும்பு சத்து உண்டு. மேலும் எந்த வகை உணவில் இரும்பு சத்து அதிகம் என்பதை இந்த http://www.usda.gov/cnpp/DietGd.pdf சுட்டியில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

ooOoo


கிட்டதட்ட ஒராண்டுக்கும் மேலாக எனக்கு ஆதரவு தந்த வாசகர்களுக்கும், தமிழோவியம் கணேஷ் சந்திராவிற்கும் என் நன்றிகள். அலுவலக பணி மிகவும் அதிகமாகி விட்டதாலும், வார இறுதிகளிலும் பணி நிமித்தம் திட்டமிட வேண்டியிருப்பதாலும் இந்த தொடரை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கிறேன். மீண்டும் வாய்ப்பு இருந்தால், சந்திப்போம். அதுவரை எல்லோருக்கும் நல் வாழ்த்துகள்.

அன்புடன்
பத்மா

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors