தமிழோவியம்
தராசு : தி.மு.கவின் மண்டல மாநாடுகள்
- மீனா

தமிழக மற்றும் இந்திய அரசியல் அரங்கில் என்ன நடந்தாலும் நடக்கட்டும் - யார் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் - நாங்கள் போடும் மாநாடுகள் நிற்காது என்ற ரீதியில் தி.மு.கவினர் கோவை மண்டல மாநாட்டு நிகழ்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். இம்மாநாட்டிற்கு வரும் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்க ஏகப்பட்ட ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தி.மு.க சார்பில் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தி.மு.கழகத்தினர் மண்டல மாநாடு என்ற பெயரில் நடத்தி வரும் ஆர்பாட்டமான கூட்டங்களும், அம்மாநாடுகளில் தி.முக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசும் பேச்சுகளும் மக்கள் மத்தியில் நிச்சயம் வெறுப்பை வளர்த்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை. ஒவ்வொரு மாநாட்டிற்கும் அதற்குப் பொறுப்பேற்கும் தி.மு.க தலைவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். இதற்கு பணம் வசூலிக்கிறேன் என்ற போர்வையில் இவர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொடுக்கும் துன்பங்களை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணம் ஒரு புரியாத புதிர் என்றால், ஊரை அடைத்து பந்தல் போடுவதும், ஆர்பாட்டமான ஊர்வலங்கள் நடத்துவதும், இந்தக் கூட்டங்கள் அனைத்திற்கும் தவறாமல் ஆஜராகும் அனைத்து மத்திய மந்திரிகள் மற்றும் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் மாநில அரசைத் தாக்கிப் பேசும் நாராசப் பேச்சுகளும் - தாங்க முடியாத சித்ரவதைகள். இந்த அழகில் நடக்கும் எந்த மாநாட்டிற்கும் போலீஸ் பந்தோபஸ்தை மாநில அரசு வழங்குவதில்லை என்ற வெட்டிப் புலம்பல் வேறு.

இப்படி மாதந்தோறும் மாநாடு நடத்தினால் மட்டுமே மக்கள் மனதில் நாம் நிற்க முடியும் என்று தி.மு.க தலைவர் கணக்கு போட்டிருந்தால் அவரது கணக்கு தப்புக்கணக்கு என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. மத்திய அரசில் 12 அமைச்சர்கள் இருந்தும் நம்மால் சாதிக்க முடியால் உள்ள பிரச்சனைகள் பலப்பல. இவைகளைப் பற்றியெல்லாம் பேசாமல் தாங்கள் செய்த ஒருசில பணிகளைப் பற்றியே ஊர் ஊராக மாநாடு போட்டு தம்பட்டம் அடிக்கும் இத்தகையத் தலைவர்களை என்ன செய்யலாம்? இந்த லட்சணத்தில் ஒவ்வொரு மாநாட்டிலும் ஏதாவது ஒரு தலைவரின் ஒப்பாரிப் படலம் நிச்சயம் இருக்கும்.

ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றக் கதையையே சொல்லி இன்னும் எத்தனை நாட்களுக்கு ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கப்போகிறார் கருணாநிதி? வரப்போகும் சட்டமன்றத் தேர்தலைப் பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து இதைப் போன்று மாநாடுகள் நடத்தி பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக ஏதவது செய்ய தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்வரவேண்டும். இல்லையென்றால் தற்போது இடைத்தேர்தலில் நடந்த கதைதான் சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors