தமிழோவியம்
மஜுலா சிங்கப்புரா : தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்கச்செய்வாய்!
- எம்.கே.குமார்

Rajaratnam.சிங்கப்பூரை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெற்றிபெற திரு. லீ குவான் யூ போராடியது போல, சமூக கலாச்சார ரீதியாக பல இன, பன்மொழி, வேறுபட்ட கலாச்சார மக்களிடையே ஒருமித்த கலாச்சார ஒழுங்கையும் இன்றும் சலசலப்பற்று சிறப்புடன் விளங்கும் சமூக ஒற்றுமையுணர்வையும் ஏற்படுத்த பலவாறு போராடி, தனது திறம்பட்ட விரிவான திட்டங்களின் மூலம் அவற்றை ஒருங்கிணைத்த பெருமை, 'எஸ்.ராஜா' எனப்படும் திரு. சின்னத்தம்பி ராஜரத்தினம் அவர்களைச் சேரும். சிங்கப்பூரின் ஆளுமை அரசியலில் வெளிச்சத்திற்குட்பட்ட சூழலில் இருந்த முதல் தமிழர் அவராவார்! திரு. லீ குவான் யூ அவர்களின் நெருங்கிய நண்பர்; அன்றும் இன்றும் என்றும்!

"திரு. லீ குவான் யூவிற்கு ஒரு 'ராஜா' போல, எனக்கு இவர்!" என்று சிங்கப்பூரிலிருக்கும் சீனவர் ஒருவர், தனக்கு நெருக்கமாக இருக்கும் தமிழர் ஒருவரை கை காட்டும் அளவிற்கு அவர்களின் நட்பும் உறவும் இரு இனத்திற்கும் அடையாளமாய் இருந்திருக்கிறது; இன்றும் இருக்கிறது.

சிங்கப்பூரின் "ஓல்ட் கார்டு" (The Old Guard) என்றழைக்கப்படும் 'நால்வரில் ஒருவர்' திரு. எஸ்.ராஜரத்தினம். திரு. லீகுவான் யூ, திரு. கோ கெங் சுவீ, திரு. டோ சின் சை மற்றும் திரு. ராஜரத்தினம் ஆகிய நால்வருமே அந்த 'பழைய பாதுகாவலர்கள்!' 1959ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி (People's Action Party) ஆரம்பிக்கப்பட்டபொழுது அந்த நால்வருமே (திரு. கே. எம். பைன்னும் உடனிருந்தார்! ஆக ஐவர்) முக்கிய தூண்களாக நின்றிருந்தார்கள். இவர்களே அன்று, குழந்தையாய் இருந்த சிங்கப்பூரை இன்று, செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியதன் அடிப்படையாளர்கள்.

இலங்கையின் யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்தவர் திரு. சபாபதி சின்னத்தம்பி பிள்ளை. மலாயாவின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தனது குடும்பத்துடன் மலாயா வந்தார். ஐரோப்பியர்களின் உடமையாயிருந்த மலாயாவின் ரப்பர் தோட்டங்களில் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கும் பொறுப்பு வந்தது. சில நாட்களுக்குப்பிறகு இத்தம்பதியினருக்கு அழகிய ஆண்குழந்தை ஒன்று பிறக்க, பிறந்த சில நாட்களில் அது இறந்துபோனது. "அடுத்த குழந்தை பிறப்பதாக இருந்தால், அக்குழந்தையை நான், எனது ஊரில், எனது நாட்டில் தான் பெற்றுக்கொள்வேன்" என்று அடம் பிடித்த அவரது மனைவிக்காக, அடுத்த குழந்தைக்கு அவர், யாழ்ப்பாணம் செல்ல நேர்ந்தது. அங்கு, இலங்கையின் யாழ்ப்பாண கிராமமொன்றில், 1915 பிப்ரவரி 23 அன்று பிறந்தார் திரு. சின்னத்தம்பி ராஜரத்தினம் அவர்கள்.

பிறந்த குழந்தையுடன் அவர்கள் மீண்டும் மலாயா திரும்பிவிட, மலாயாவின் 'செரம்பன்' பகுதியில் அக்குடும்பம் வசித்து வந்தது. செரம்பனிலிருந்து பத்து மைல்களுக்கு அப்பாலிருந்த 'ஜெமிமா' ரப்பர் தோட்டத்தில் திரு. ராஜாவின் தந்தை வேலை பார்த்து வந்தார். சில வருடங்கள் கழித்து ரப்பர் தோட்டத்தொழில்களை நன்கு அறிந்துகொண்டதின் வழி அவரே தனியாக ஒரு தோட்டத்தை உருவாக்கி செல்வந்தராகவும் ஆனார்.

செரம்பனிலிருந்த 'குழந்தை இயேசு' ஆங்கிலப்பள்ளியிலும் பிறகு 'செயிண்ட் பால்' பள்ளியிலும் அதற்குப்பிறகு கோலாலம்பூரில் இருந்த விக்டோரியா பள்ளியிலும் படித்தார் ராஜா. கல்லூரிப்படிப்பைத் தொடர்வதற்கு சிங்கப்பூரிலிருந்த ரா·பிள்ஸ் கல்விக்கூடத்திற்கு வந்தார். அங்கு கல்லூரிப்படிப்பை முடித்த அவர், சட்ட நிபுணராகும் ஆசையுடன் 1937ல் லண்டனுக்குச் சென்றார். கிங்'ஸ் கல்லூரியில் சேர்ந்த அவர், அங்கு பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இடையில் மலாயாவில் நிகழ்ந்த இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளால் அவருக்கு வந்து சேரவேண்டிய படிப்புப்பணம் அவரது தந்தையிடமிருந்து வராததால் அப்படிப்பைப் பாதியில் நிறுத்தவேண்டி வந்தது.

இதற்கிடையில், இங்கிலாந்தின் உலக நாடுகள் மீதான காலனி ஆதிக்கத்தின் விளைவுகள் பற்றி பேச்சுகளும் போராட்டங்களும் அடிக்கடி லண்டனில் நடைபெற்றுவந்தன. அவற்றில் தனது கவனம் லேசாகத் திரும்பியதை உணர்ந்த திரு. எஸ். ராஜரத்தினம் தொடர்ந்து அவைகளில் ஈடுபட்டார். அதன் விளைவாக முழு மார்க்ஸிஸ்ட் சிந்தனை உள்ளவனாக மாறத்தொடங்கினார். லண்டனில் இருந்த 'இடதுசாரிகளின் புத்தக கிளப்'பிலும் உறுப்பினரானார். இங்கிலாந்தில் கம்யூனிச ஆட்சி நிறுவுவதின் அவசியத்தை அங்குள்ள முக்கியமானவர்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது அவருக்குப் பணம் வருவது தடைபட்டதால் பத்திரிகையாளனாக ஆனார். பிழைப்புக்கு அது உதவத்தொடங்கியது.

சுமார் 12 ஆண்டுகள் லண்டனிலிருந்த அவருக்கு, இந்நேரத்தில் ஹங்கேரியிலிருந்து வந்திருந்த '·பிரோஸ்கா ·பெஹர்' என்ற பெண்ணிடம் காதலரும்ப, அப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். மலாயாவில் போர் முடிந்திருந்த அத்தருணத்தில் இருவரும் மலாயாவிற்கு வந்தனர். அங்கு 'மலாயன் டிரிபுயூனலில்' 1948லிருந்து 1950 வரை வேலை பார்த்தார். பிறகு 1950ல் "சிங்கப்பூர் ஸ்டாண்டர்டு" பத்திரிகையில் துணை ஆசிரியராக வேலை கிடைத்தது. 4 வருடங்கள் அதில் பணிபுரிந்த அவர், 'மலாயன் இந்தியன் காங்கிரஸ்' செயலராகவும் 'சிங்கப்பூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தை' தோற்றுவித்தும் சிறப்பாகச் செயல்பட்டார்.

பிறகு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த அவர், தனது மனைவியோடு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். அவரது இரு சீன நண்பர்கள் அவர்களுடன் அந்த வீட்டைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். உடைந்து தொங்கும் அந்த வீட்டில், தனது நண்பர்களுடன், ஆங்கிலேய அரசைக் களைவது பற்றிய பேச்சு அடிக்கடி நடைபெறுமாம். நான்கு வருடங்கள் அந்த வீட்டிலிருந்த பொழுதுதான் ஆங்கிலேய அரசுக்கெதிரான பல நண்பர்கள் அவருக்கு கிடைத்தனராவாம். அப்படி நெருக்கமானவர்களில் ஒருவர்தான் நாம் ஏற்கனவே பார்த்த சிங்கப்பூரின் மூன்றாவது அதிபர் திரு. தேவன் நாயர்.

ஆங்கிலேய அரசைக் கடுமையாக விமர்சித்தும் இடதுசாரிகளின் கருத்தை ஆதரித்தும் எழுதி வந்த திரு. எஸ்.ராஜா, கம்யூனிச கொரில்லாக்களின் தாக்குதல்களையும் மக்களைக் கொன்று குவிக்கும் போராட்டங்களையும் கடுமையாக எதிர்த்தார். ஏற்கனவே லண்டனில் 'மலாயன் கருத்தரங்கு'களை நடத்திவந்த திரு. கோ கெங் சுவீ மற்றும் லண்டனில் வழக்கறிஞருக்குப் படித்து சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த
திரு. லீ குவான் யூ ஆகியோர்களுடன், ஆங்கிலேய ஆட்சியையும் அப்போதைய ஆட்சியாளர் திரு. டேவிட் மார்ஷலின் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்து வந்ததில் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாக, இவர்களைனைவரும் ஒரு உணவருந்தும் விடுதியின் அடியில் அமர்ந்து அடிக்கடி அரசியல் நடவடிக்கைகள் பேச ஆரம்பித்திருந்தனர்.

ஆங்கிலேய எதிர்ப்பிலும் அதே சமயம் கம்யூனிசக்கொள்கைகளில் அதிருப்தியும் கொண்டு புது அரசை உருவாக்க மிகுந்த மனத்திட்பத்தோடு இருந்த வழக்கறிஞர் திரு. லீ குவான் யூ, பொருளாதாரத்தில் பட்டம் பெற்று அவற்றில் மிகுந்த புரட்சிக் கருத்துகளைக் கொண்டிருந்த திரு. கோ கெங் சுவீ, இடதுசார, காலனிய எதிர்ப்பு மற்றும் மேற்கத்திய அரசியலின் எல்லாவகைகளிலும் பல்வேறு வாழ்க்கை முறைகளிலும் தத்துவத்திலும் 'கருத்துக்களஞ்சியமாக' விளங்கிய திரு. எஸ்.ராஜரத்தினம் மற்றும் இவர்களைப்போலவே ஆங்கில மொழியிலும் சிறந்துவிளங்கிய மற்ற நண்பர்களும் இணைந்திருந்த அந்தக்கால கூட்டங்களில் 'சாதிக்கும் தீ' உருவாகிக்கொண்டிருந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

ஆங்கில மொழியிலும் புதுக்கருத்துக்களிலும் அதிகத் திறமை கொண்டிருந்த இவர்களுக்கு ஆங்கில அறிவு குறைந்திருந்தாலும் மக்களிடம் செல்வாக்கு மிகுந்த சில தலைகளும் தேவைப்பட்டனர். அப்படி இவர்களுடன் இணைந்தவர்கள் தான் கம்யூனிசக் கொள்கைகளின் தீவிரரர்களாயிருந்த திரு. சமத் இஸ்மாயில் மற்றும் திரு. சி.வி. தேவன் நாயர்! இவர்களைனைவரும் இணைந்து 1954ல் புதிய கட்சி (மக்கள் செயல் கட்சி) ஆரம்பித்ததும் அது பிறகு பல்வேறு தீக்குளிப்புகளுக்குப்பிறகு இன்றும் புத்துயிர் பெற்று விளங்குவதும் நாம் அறிந்ததே!

1959 ல் அக்கட்சி முதல் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்தபின் திரு. லீ குவான் யூ பிரதமராகவும், திரு. கோ கெங் சுவீ உள்துறை மற்றும் ராணுவ அமைச்சராகவும் திரு. எஸ். ராஜரத்தினம் கலாச்சார அமைச்சராகவும் ஆனார்கள். ஆங்கிலேயரான 'சிம்மன்ஸ்' என்பவர் நடத்தி வந்த 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழில் பணிபுரிந்துகொண்டே தேர்தலில் நிற்கமுடியாது என்பதால் அப்பதவியை உதறித்தள்ளிவிட்டு தேர்தலில் நின்றார் ராஜா. 'கம்போங் கிளாம்' என்ற தொகுதியிலிருந்து 1959ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தனது அரசியல் வாழ்வின் முடிவு வரை அத்தொகுதியிலேயே நின்றார்; ஜெயித்தார்!

1959ல் கலாச்சார அமைச்சரானவர், 1965ல் நாடு மலேசியாவிலிருந்து பிரிந்தபோது, சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரானார். அப்போது உலகின் மிக இளைய நாடாக விளங்கிய சிங்கப்பூருக்கு உலகின் எல்லா பகுதிகளிலும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்ததில் வெளியுறவுத்துறை அமைச்சரான திரு. ராஜாவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. 'ஐ.நா' சபையிலும் 'காமன்வெல்த் நாடுகள்' அமைப்பிலும் உறுப்பினரானது முதல், சீன-மலாய் மக்களிடையே அக்காலத்தில் கொழுந்துவிட்டு எரிந்த இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்த பெரு முயற்சி எடுத்து அவைகளை ஒழுங்குபடுத்தியதிலும் பெரும்பங்கு திரு. ராஜா அவர்களுக்கு உண்டு.

சிங்கப்பூரின் 'தேசிய உறுதிமொழியை' இயற்றியவர் திரு. ராஜா அவர்கள்தான். அவர் கலாச்சார அமைச்சராக இருந்தபொழுதுதான் அது முதன்முதலில் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்த பெண்போகதொழில்களும் இவரது பெருமுயற்சி மற்றும் நடவடிக்கைகளால்தான் முற்றிலும் ஒழிக்கப்பட்டு கலாச்சார மேம்பாடு நிகழ்த்தப்பட்டது. வானொலி நிலையம் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களும் இவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

1973ல் 'இரண்டாவது துணைப்பிரதமராய்' ஆன இவர், தொடர்ந்து பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 'ஆசியான்' என்ற தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கி நடத்திய திரு. ராஜா, ஆசியான் சம்பந்தபட்ட கல்வியமைப்பிற்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார். 1988ல் மூத்த அமைச்சராக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

சிங்கப்பூர் மலேசியா பிரிவிலும் இன்னும் சில விஷயங்களிலும் திரு. லீ குவான் யூ அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் கடைசிவரை அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். "அடிப்படையில் தன்னை மாபெரும் ஒரு தலைவராக்கிக்கொள்ள பெரும் முயற்சி எடுத்தவர் திரு. லீ குவான் யூ. 'எனது பாதைக்கு குறுக்கே எவர் வந்தாலும் அவர்களை தள்ளிவிட்டுச் சென்றுவிடுவேன்' என்றும் அடிக்கடி சொல்வார் அவர்! நான் அவருடன் சில விஷயங்களில் கருத்துவேறுபாடு கொள்ளும்போது, 'சரி, நீங்கள் என் கருத்தில் மாறுபடுகிறீர்கள் ஆனால் நான் நம்புவதை எப்போதும் நான் நம்புவனாயிற்றே!' என்று தனக்கொரு தெளிவான பாதையும், 'அது அப்படித்தான் இருக்கும்; இருக்கவேண்டும்!' என்ற உறுதியான குணத்துடனும் வாழ்ந்து சாதித்தவர். ஏகப்பட்ட 'லீ குவான் யூக்கள்' இருக்குமிடமாய் இவ்விடம் இருந்தால் தேனிக்கூட்டங்களின் இரைச்சல் தான் மிஞ்சும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்" என்றும் அவரைப் பற்றிக் கூறுகிறார்.

மிக ஆழமான விசுவாசியாய், திரு. லீ குவான் யூ அவர்களுக்கு கடைசிவரை இருந்த முக்கியத்தோழர்களில் திரு. எஸ்.ராஜரத்தினம் சின்னத்தம்பியும் ஒருவர். இவரது பரிந்துரையின் பேரிலேயே நாட்டின் நான்காவது அதிபராக காலஞ்சென்ற திரு. வீ கிம் வீ அவர்களும் நியமிக்கப்பட்டார். தமிழர்களும் தமிழும் இன்று சிங்கப்பூரில் மேன்மையுற்றிருக்கும் வாழ்க்கை நிலைக்கு, சாதனைகோபுரத்திற்கு ஒரு உறுதியான அஸ்திவார செங்கல்லாய் இருந்தவர் திரு.ராஜா என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை!

தொடரும்..!


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

கணவனைக் கதற கதறக் கொலை செய்த பெண்!

இந்தியா. ஜூன்.4. தமிழ் நாட்டின் அருப்புக்கோட்டை பகுதியைச்சேர்ந்தவர் கணேசன். வயது 35. இவருக்கு பக்கத்து ஊரைச்சேர்ந்த 'கண்ணகி' என்ற இளம்பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு இவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். சிறிது காலம் சந்தோசமாக வாழ்ந்த அவர்களுக்கிடையே அண்மைக்காலமாக அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது.

'சம்பவத்தன்று' வேலைக்குச்சென்று வீட்டிற்கு வந்த தனது கணவர் கணேசனிடம், கண்ணகி ஏதோ வாக்குவாதம் செய்ததாகவும் அதற்குப்பிறகு சிறிது கைகலப்பு நடந்ததாகவும் பிறகு சத்தம் அடங்கிவிட்டதாகவும் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள்.

சிறுது நேரத்திற்குப்பின் 'கணவனின் குடலை கழுத்தில் போட்டுக்கொண்டு' 'கண்ணகி' வெளியில் வந்ததாகவும் ஊர்க்காரர்கள் மிரண்டு போலீசுக்குத் தகவல் சொல்லியதாகவும் அதற்குப்பிறகு 'தாங்கள் வந்ததாகவும்' போலீசார் தெரிவித்தனர். கணவனை கத்தியால் 'சதக் சதக்'கென்று குத்திய கண்ணகி, போலீஸ் விசாரணையின் போது மயங்கி விழுந்துவிட்டார் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

கொலைக்குக் காரணம் இன்னும் சரிவரத்தெரியவில்லையெனினும் 'தனது கணவர் தன்னை வெளியில் கூட்டிச்செல்வதே இல்லை' என்ற கடுப்பிலும் கோபத்திலுமே அவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என்று அவரது பேச்சில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors