தமிழோவியம்
ஆன்மீகக் கதைகள் : முடி தந்த விளக்கம்
-

சீதையின் தந்தையான ஜனகர், அரண்மனையில் மிக சொகுசாக, சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார் என்றால் அது பொய். அவர் இல்லறத்தில் இருந்தாலும், துறவியாகத்தான் வாழ்கிறார் என்றே சொன்னார்கள். ஆனால் மிதிலை நகரில் அப்போதிருந்த சில ரிஷிகள் இந்தக் கூற்றை நம்பவில்லை ! ராஜபோகங்களுக்கு நடுவே வாழ்பவர் மன்னர். அவராவது, துறவு வாழ்க்கை வாழ்வதாவது என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர் !

விஷயம் மன்னர் காதுகளுக்கு எட்டியது.

அப்படியா விஷயம் என்று யோசித்த மன்னர், மறுநாள் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். 'கசமுசா' என்று பேசிய முனிவர்களை அந்த விருந்துக்கு வரும்படி வேண்டிக் கொண்டார். முனிவர்களுக்கு ஆச்சர்யம். எதற்காகத் தங்களைக் கூப்பிடுகிரார் என்று ?

மறுநாள், அரண்மனைக்குப் போனார்கள். அருமையான விருந்து தயாரிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அமர்ந்தனர். பெரிய பெரிய வாழையிலைகளில் அறுசுவை பதார்த்தங்கள் பறிமாறப்பட்டுத் தயாராக இருந்தன. முனிவர்கள் இலைகளின் எதிரில் அமர்ந்தனர். ஆனாலும் எல்லோர் முகங்களிலும் ஒரு கேள்விக்குறி.

காரணம், ஒவ்வோர் இலைக்கு மேலே ஒரு நீளமான தலைமுடி தொங்கிக்கொண்டிருந்தது ! 'அது எப்போது சாப்பாட்டில் விழுமோ ?' என்று பார்த்துக்கொண்டே முனிவர்கள் சாப்பிடத் தொடங்கினர். பணியாளர்கள், பரிந்து பரிந்து பரிமாறினார்கள். ஆனால் முனிவர்கள் எல்லோரும் மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

விருந்து முடியும் தருவாயில், மன்னர் அங்கு வந்தார். "முனிவர்களே, வயிறார திருப்தியாகச் சாப்பிட்டீர்களா ? விருந்து எப்படியிருந்தது ? என்று கேட்டார்.

முனிவர்களில் ஒருவர் தைரியமாக "எப்படியிருந்தது என்பதற்கு எப்படி பதில் சொல்ல முடியும் ? எங்கள் கவனம் சாப்பாட்டில் இருந்தால் அல்லவா, பதில் சொல்ல முடியும் ? இதோ, இலைக்கு மேலே தொங்கும் இந்தத் தலைமுடி எப்போது சாப்பாட்டில் விழுமோ என்ற பயத்துடன், அதைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டோம். கவனம் முழுக்க அதன்மேலேதானே இருந்தது!'  என்றார் சோகமாக !

ஜனகர் புன்சிரிப்புடன் சொனார் :

"முனிவர்களே அது போலத்தான் நான் இருக்கிறேன். பரம்பொருளை, பிரும்மத்தையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு, இந்த ராஜபோகங்கள் சுகமாக இருக்கிறதா, இல்லையா என்று கேட்டால், பதில் சொல்லத் தெரியுமா  எனக்கு ?" என்றா அமைதியாக.

முனிவர்களுக்கு அதன் பிறகுதான் மன்னரைப் பற்றிய தெளிவு ஏற்பட்டது.

ஒருவர் எங்கேயிருந்தால் என்ன ? நினைப்பு எதைப் பற்றியிருக்கிறது என்பது தானே முக்கியம் ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors