தமிழோவியம்
திரைவிமர்சனம் : ஜித்தன்
- மீனா

அசட்டு அம்மாஞ்சியாக உள்ள ஒருவனுக்கு அதிசய சக்தி கிடைத்தால் அவன் என்ன செய்வான் என்பதுதான் ஜித்தனின் 1 வரிக்கதை. சாமர்த்தியம் என்பது துளிக்கூட இல்லாமல் எல்லா இடங்களிலும் கெட்ட பெயர் வாங்கும் அரிய யோகக்காரர் ரமேஷ். ஏற்கனவே அடங்காப்பிடாரியான ரமேஷின் அம்மா நளினி, ரமேஷின் அசட்டுத்தனத்தால் அவரை அடி அடியென்று விளாசித் தள்ளுகிறார். அதைத் தடுக்க முயலும் பக்கத்து வீட்டு பெண்ணான பூஜாவின் மீது ரமேஷிற்கு சிறு வயது முதலே காதல். ஆனாலும் தன்னுடைய வழவழா கொழகொழா நடவடிக்கையால் பூஜாவிடம் ஒரு வார்த்தைகூட பேச முடியாமல் ரமேஷ் தவிக்க - இடையில் வரும் பணக்கார இளைஞரான முகேஷ் பூஜாவின் காதலனாகிவிடுகிறார்.

இந்நிலையில் ஒரு ரெஸ்டாரண்டில் பூஜாவைப் பார்த்து சிரிக்கும் ரமேஷை பூஜாவின் காதலன் முகேஷ் அடித்து அவமானப்படுத்துகிறார். இவர்கள் சண்டையை விலக்க வரும் பூஜா ரமேஷை பைத்தியக்காரன் என்று சொல்லிவிட, மனம் உடைந்து கடற்கரையில் அழுகிறார் ரமேஷ். அப்போது அவர் கையில் சிலை ஒன்று கிடைக்க, மனக்குமுறுலாக அந்தச் சிலையிடம் "நான் யார் கண்ணிலும் படாமல் தொலைந்து போகிறேன்!!" என்று கூறுகிறார். சிலை அருள் செய்ய, ரமேஷ் யார் கண்ணிலும் படாத மாய மனிதராக மாறுகிறார்.

தன்னிடம் உள்ள புது சக்தியைக் கொண்டு தன்னை இகழ்ந்தவர்களையெல்லாம் ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் ரமேஷ், ஒரு கட்டத்தில் பணம் இருந்தால் தான் பூஜாவின் காதலைப் பெறமுடியும் என்று கற்பனை செய்து கொண்டு ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். இந்தக் கொள்ளையைத் துப்புத் துலக்க போலீஸ் அதிகாரியான சரத்தும் கலாபவன் மணியும் வருகிறார்கள். அப்போதுதான் ரமேஷின் அதிசய சக்தி பற்றி சரத்திற்கு தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் பூஜாவும் முகேஷ¤ம் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும்போது வெகுண்டு எழும் ரமேஷ் பூஜாவை அடைய ஊரையே அரூபமாக இருந்துகொண்டு ஆட்டிப்படைக்கிறார். ரமேஷின் ஆர்பாட்டங்களையும் மீறி பூஜாவும் முகேஷ¤ம் திருமணம் செய்து கொண்டார்களா? சட்டத்தின் பிடியில் ரமேஷ் சிக்கினாரா என்பதே மீதிக்கதை.

நாயகன் ரமேஷ் பல காட்சிகளில் காதல் கொண்டேன் தனுஷை நினைவுபடுத்துகிறார். அம்மாஞ்சியாக வந்து அனைவரிடமும் அவமானப்படும்போதும், சிறு வயது முதல் காதலித்த பூஜாவிடம் காதலை நேருக்கு நேர் நின்று சொல்லத் தயங்கும் போதும், தனக்கு சூப்பர் பவர் கிடைத்தபின் தனக்கு பிடிக்காதவர்களை புரட்டி எடுக்கும்போது வித்தியாசமாக நடித்திருக்கிறார்.  மொத்தத்தில் நடிப்பில் ஓக்கே ரகம் தான் என்றாலும் இது இவரது முதல் படம் என்பதால் மன்னிக்கலாம். இன்னும் சிறப்பாக சாதித்தால் மட்டுமே திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்பதை அப்பா செளத்ரி தான் இவருக்கு புரியவைக்க வேண்டும். அழகு பொம்மையாக மட்டும் இருக்காமல் அவ்வப்போது நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார் பூஜா. யாருக்குமே அடங்காத அடங்காப்பிடாரியாக நளினி. மகனையும் கணவர் லிவிங்ஸ்டனையும் இவர் படுத்தும் பாடு -யப்பா!! பூஜாவின் அப்பாவாக எஸ்.வி. சேகர். பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. பூஜாவின் காதலனாக வரும் முகேஷ் நடிப்பில் ரொம்பவும் சுமார்.

காவல் துறை அதிகாரியாக கெளரவ தோற்றத்தில் சரத். அளவான நடிப்பு. கெளரவ தோற்றம் என்பதால் பாதி படத்திற்கு மேல் தான் வருகிறார். இவருக்கு கீழே பணிபுரியும் அதிகாரியாக கலாபவன் மணி வழக்கம் போல மிமிக்ரி செய்துகொண்டே கொஞ்சம் வில்லத்தனம் செய்கிறார். சரத்திற்கே சீன்கள் ரொம்ப கம்மி என்பதால் இவருக்கும் சான்ஸ் கம்மிதான்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் மற்றும் ரமேஷ்பாபுவின் ஒளிப்பதிவு ஓக்கே ரகம். கண்ணை உறுத்தாத கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவே இவருக்கும் இயக்குனருக்கும் ஒரு பெரிய சபாஷ். இயக்குனர் வின்சென்ட் செல்வா ராம்கோபால் வர்மாவின் மூலக்கதையை வைத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்றவாறு ஜித்தனை உருவாக்கியுள்ளார். மொத்தத்தில் ஜித்தன் முதலுக்கு மோசமில்லாமல் தேறிவிட்டது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors