தமிழோவியம்
தராசு : பா.ஜனதா வெற்றி - தமிழகத்தின் நிலை
- மீனா

கர்நாடகாவில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பானமை கிடைக்க இன்னும் ஒரு சில இடங்களே தேவை என்ற நிலையில் பா.ஜனதா கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகியுள்ளது. இதுவரை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு இந்த முடிவு நிச்சயம் ஒரு பேரிடி தான். வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றுவந்த பா.ஜனதா முதல்முறையாக தென் மாநிலம் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் காங்கிரஸ் கட்சி கடந்த 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்த பல மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில் கூட வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் நிலை இப்படி இருக்க - பா.ஜனதா பெற்றுள்ள இவ்வெற்றி தமிழகத்தை நிச்சயம் பாதிக்கும் - அதிலும் குறிப்பாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிச்சயம் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சில வாரங்களுக்கு முன்பாக ஒகேனக்கல் கூட்டிக்குடிநீர் திட்டத்தை பா.ஜனதா தலைவர் எடியூரப்பா விமர்சனம் செய்ததையும் அது தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களையும் - கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும்; அதன் பிறகு இத்திட்டத்தை நிறைவேற்றுவதைப் பற்றி நாம் விரிவாக பேசுவோம் என்று தமிழக முதல்வர் அறிவித்ததையும் மக்கள் யாரும் மறக்கவில்லை..

கர்நாடகத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் - பிறகு மத்தியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி நல்ல ஒரு முடிவை எடுக்கலாம் என்ற நினைப்பில் தான் தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பாக அத்தகைய ஒரு அறிக்கையை விட்டார் என்பது அரசியல்வல்லுனர்களுக்கு மட்டுமல்லாமல் சாதாரண குடிமகனுக்கும் தெரியும். முதல்வர் அத்தகைய நிலைபாட்டினை எடுத்தது தேவையே இல்லாத ஒன்று - நமக்கென்று உள்ள உரிமையை கர்நாடகாவிற்கு விட்டுக்கொடுக்க அவர் வகை செய்கிறார் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குறை கூறினாலும் முதல்வர் இப்பிரச்சனையில் நிச்சயம் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் மேற்கொண்டு போராட்டம் மற்றும் மறியல்களில் ஈடுபடாமல் அமைதி காத்து வந்தனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக ஆகியுள்ள இந்நிலையில் - யார் இத்திட்டத்தை முதலில் எதிர்தாரோ அவரே கர்நாடக மாநில முதல்வராகியுள்ள இந்நிலையில் தமிழக முதல்வர் மேற்கொண்டு எவ்வாறு செயல்பட்டு இத்திட்டத்தை நிறைவேற்றப்போகிறார் என்பதே மக்கள் மத்தியில் எழுந்துள்ள முதன்மையான கேள்வி;எதிர்பார்ப்பு.. மேலும் மத்திய கூட்டணி அரசில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்வியை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் உயர்ந்து வரும் விலைவாசி - மாநிலத்தில் பெறுகிவரும் தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளுடன் மக்களின் மிக அத்தியாவசியமான பிரச்சனைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனையை தமிழக முதல்வர் சமாளிக்கப்போகும் விதத்தில் தான் தமிழகத்தில் தி.மு.கவின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை நிச்சயம் முதல்வர் உணர்ந்திருப்பார். பிரச்சனைகளில் இருந்து குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றுவதில் காட்டும் சாமர்தியத்தை ஒகேனக்கல் பிரச்சனையிலும் காட்டுவாரா என்பதைப் பொறுத்துதான் அவரது கட்சியின் எதிர்காலம் அமையப்போகிறது.. தமிழக சாணக்கியர் இந்நிலையை சமாளிக்க என்ன செய்யப்போகிறார் என்பதை வெகு சீக்கிரத்தில் பார்க்கலாம்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors