தமிழோவியம்
டெலிவுட் : உங்க கிட்ட இ-கலப்பை இருக்குதா...
- சில்லுண்டி

சாதாரணமா சீரியலில் காதலர்கள் பார்க், பீச், சினிமா தியேட்டரில்தான் கண்ணீர் வடித்து காதல் வளர்ப்பார்கள். கெட்டி மேளத்துக்காரர்கள் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். சினிமாவில் வர்ற மாதிரி பிரளெசிங் சென்டரும் ஒரு காதல் களம்தான். ஆனா, இங்கே யாரும் சாட் பண்றதில்லை. இகலப்பை, முரசு வைச்சு தமிழ் எழுதுறாங்க! சாம்பிளுக்கு ஒரு டயலாக்...

'வழக்கமா லவ் லெட்டரை எல்லோரும் கையால எழுதி தான் குடுப்பாங்க.. நான் கொஞ்சம் வித்தியாசமா மெயில்ல அனுப்பலாம்னு வந்தேன்.... இங்கிலீஷில மெயில் அனுப்பினா இன்ட்ரஸ்டிங்கா இருக்காது.. உங்க கிட்ட இ-கலப்பை இருக்குதா...'

ஒரு நாலு பேராவது இ-கலப்பைன்னா என்னான்னு பக்கத்துல இருக்குற கம்ப்யூட்டர் கிளாஸ் போறவங்களை கேட்டுருப்பாங்க. சீரியல் கில்லர்கள் அப்படியே வலைப்பூ, தமிழோவியம், டெலிவுட்டுன்னு சீரியலில் நம்மையும் காட்டி சில்லுண்டியை சிலிர்க்க வைச்சா நல்லாயிருக்கும்...ஹி...ஹி..!

நம்ம ஊரு ஸ்ரீதேவி, மிஸஸ் மாலினி ஐயரா சவுத் இண்டியன் மாமியா நடிச்சாலும் நடிச்சார்.... எல்லா இந்தி சீரியல்லேயும் கட்டாயம் ஒரு சவுத் இண்டியன் கேரக்டர் இருந்தே ஆகணும்னு ·பார்முலா மாதிரி ஆகிவிட்டது. சீரியலில் வரும் எல்லா சவுத் இண்டியன் பெண்களும் மடிசார் கட்டிக்கொண்டு அய்யராத்து பாஷை பேசுகிறார்கள். பெரும்பாலும் பக்கத்து வீட்டு ஆன்டி, எதிர் வீட்டு ஆன்டி என்று ஏதாவது ஒரு சைடு கேரக்டர். இங்கே யாரும் அழுறதோ அழ வைக்கிறதோ கிடையாது. ஏதோ ஒரு குசும்பு நடக்கிறது; பின்னணியில் கொஞ்சம் சிரிப்புக் குரல்கள். இந்தி டயலாக் நடுவே அவ்வப்போது தமிழ் டயலாக்கும் உண்டு. ஐயோ.. என்ன பண்றது... அட கடவுளே.... அச்சச்சோ... பயப்படாதீங்க. இதெல்லாம் இந்திக்காரங்க கடிச்சு துப்பும் தமிழ் டயலாக்! எப்படியோ தமிழ் வளர்ந்தால் (வளர்த்தால்?) சரி.

பேரு ஸ்ரீவித்யாவாம்.  படிப்பு பத்தாம் கிளாஸ்.  வேலை மீட்டர் போடுவது. அதாங்க சீரியலில் நடிப்பது. எங்கேயோ கான்வென்டில் பார்த்தமாதிரி முகம். சிரத்தையாக பரதநாட்டியம் கற்றுக்கொள்கிறாராம். சுத்தி வளைத்து வரும் பதில் சொல்லும் செய்தி, அம்மிணி சினிமாவில் நடிக்க தயார் என்பதுதான். ஜோதிக, அசின், நமீதாக்கள் ஜாக்கிரதை! படிப்பு? அது கிடக்குது கழுதை. சினிமா நடிகைங்க மாதிரி தபால் மூலமாக படிச்சுக்க வேண்டியதுதான். ஸ்ரீவித்யா மாதிரியான பேபிக்கள் சின்னத்திரையில் ஜாஸ்தி. பார்த்து வழியும் என்னை மாதிரியான பாவிகள் அதைவிட ஜாஸ்தி!
 ஒரு செல்போன் ஜில்பான்ஸ். மதுரை பக்கம் ஒரு சப் கோர்ட்.

'வழக்கை ஆரம்பிக்கலாம்'

'மை லார்ட், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் கோர்ட்டுக்குள் வர மாட்டேங்கிறார்'

'என்ன காரணமாம்?'

'சன் நியூஸிலிருந்து கவரேஜ் பண்ண ஆள் வரவில்லையாம், மை லார்ட்'

'இன்னிக்கு என்ன கேஸ்?'

'ஜெயலட்சுமி கேஸ்'

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors