தமிழோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ் : சில்லிக்குள் விரலை வைத்தால்
- திருமலை ராஜன்


 
எல்லோரும் ஒருவிரல் கிருஷ்ணா ராவ் பார்த்திருப்பீங்க. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது, கிருஷ்ணாராவ் யார், அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது, ஒரு விரல் படம் யார் எடுத்தது என்பதை பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. ஏனோ,  விரல் என்றதும் முதலில் ஏனோ கிருஷ்ணாராவ் நினைவுக்கு வந்து விட்டார். இரா முருகனின்
மூன்றாவது விரல் நினைவுக்கு வருகிறது, அப்புறம் விரல்னா, விரலுக்குத் தகுந்த வீக்கம், ஒரு விரல் பிறரைச் சுட்டினால் நாலு விரல் உன்னைச் சுட்டும், ஐந்து விரலும் ஒண்ணாவா இருக்கு, என்பது போன்ற பிற விரல் சம்பந்தமான பழமொழிகளும் நினைவுக்கு வரும்.

சின்ன வயசில் இந்த லேடீஸ் பிங்கரைச் (அதாங்க வெண்டைக்காய்) சாப்பிட்டால் கணக்கு நல்லா வரும்னு என் அம்மா சொல்லுவாங்க,  லேடீஸ் பிஙகர் சாப்பிட்டா கணக்கு வரலாம்தான்  (எனக்கு வரல்ல) அதுக்கா யாராவது சாப்பாட்டுல நிஜ லேடீஸ் பிஙகரப் போடுவாளோ? சாப்பாட்டுல ஆட்டுக் விரலைப் போடுவா, மாட்டுக் விரலைப் போடுவா, மனுச விரலைப் போடுவாளோ?  போட்டே போட்டுட்டாளே!!  பெண்களின் விரலுக்குப் பாலீஷ் போட்டு அழகு பார்க்கலாம், மோதிரம் போட்டு அழகு பார்க்கலாம், மருதாணி போட்டு அழகு பார்க்கலாம், கவிதை எழுதி அழகைப் பாடலாம், கதாசிரியர்கள் விரலைப் பற்றி தங்கள் விரல் வலிக்கும் அளவுக்கு வர்ணிக்கலாம், விரலை வெட்டி விரல் கறி போடுவார்களோ? போட்டுட்டாஙகளே!

லாஸ் வேகாஸில் இருந்து சான் ஓசேக்கு ஓட்டி வந்த களைப்பில் ஆயாலா என்ற அம்மாள் இங்குள்ள வெண்டீஸ் (இதில ஒரு பேர் பொருத்தம் இருக்கு, அதுக்கு அப்புறமா வரேன்) என்ற உணவகத்துக்குச் சென்று சாப்பிட ஒரு பவுல் சில்லிஸ் என்ற பதார்த்தத்தை ஆர்டர் செய்துள்ளார். கம கமவென சில்லிஸ்ஸ¤ம் வந்தது, ஸ்பூனில் சில்லிஸ்ஸை எடுத்து வாயில் போட, நறுக், முறுக்கென வாய்க்குள் ஒரே சத்தம், பதறிப் போன ஆயாலா அம்மையார் வாயில் விரலை விட்டுத் துப்ப, வெளியே வந்து விழுந்ததோ, மனுச விரல் ஒன்று, நடு விரல், அழகாக பாலீஷ் போடப் பட்ட நங்கையின் விரல், நகப் பாலீஷின் புதுக் கருக்குக் குலையாத,வேகாத நிஜ விரல், நிஜமான லேடீஸ் ·பிஙகர்.

அப்புறம் நடந்ததுதான் இப்போ அமெரிக்காவின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். கூகுளுக்குப் போனால் உங்கள் விரல் நுனியில் இந்த சில்லி விரல் பற்றிய விபரங்கள், லட்சக்கணக்கில் கிடைக்கும்.  நடுவிரல் சாப்பாட்டில் எப்படி வந்தது என்று போலீசும், பொதுமக்களும்  விரல் நகத்தைக் கடித்துக் கொண்டோ, விரல்களை பிணைத்துச் சேர்த்துக் கொண்டோ, தவிக்க ஆரம்பித்தார்கள்.

சில்லி பவுலில் இருந்த நடு விரல் வாய்க்குள் போய் வெளி வந்தவுடன், தாம் தூம் எனக் குதித்து ஆயலா அம்மையார் ஊரைக் கூட்டி விட்டார். எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்திக் கொண்டு வேடிக்கைப் பார்க்க கூடி விட்டனர். போலீஸ¤ம் வந்தது. முதலில் ஹோட்டலில் இருப்பவர் அனைவரையும் ஒன்று வரை பத்து வரை எண்ணச் சொல்லியிருக்கிறது. எல்லோரும் சரியாக எண்ணிக் காண்பித்தவுடன் ஹோட்டலில் இருந்த யாருடைய விரலும் அல்ல என்ற அரிய உண்மையைக் கண்டு பிடித்தனர். (No employees lost their digits) என்றது சான் ஓசே மெர்குரி நியூஸ் பத்திரிகை. செய்தி கலி·போர்னியாக் காட்டுத் தீ (எல்லே ராம் கட்டுரை நினைவில் இருக்கிறதா?) போலப் பரவ, பதறி விட்டது வெண்டீஸ் சங்கிலித் தொடர் உணவக நிறுவனம். விரல் கெட்டதுமல்லாமல் பெயரும் கெட்டு விட்டது. பங்குச் சந்தையில் அதன் மதிப்பு ஒரு விரல் எண்ணிக்கைக்கு வந்து விட்டது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே குறைந்தனர். விரல்களைப் பிசைந்து கொண்டு நின்றனர் வெண்டீஸ் நிறுவனத்தினர். எந்த வேளையில் வெண்டீஸ் என்று பெயர் வைத்தனரோ!! வெண்டீஸ் வெண்டைக்காய்க்குப் பதிலாக லேடீஸ் ·பிங்கரைப் போடுகிறார்கள் என்று செய்தி பரவி விட்டது.

வெண்டீஸ¤ம் விரலை நாங்கள் சமைக்கவில்லை என்று பத்து விரலாலும் சத்தியம் செய்தார்கள். யார் போட்டது என்று துப்புத் தருபவர்களுக்கு முதலில் பத்தாயிரம் பரிசாக அறிவித்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி இப்பொழுது ஒரு லட்சம் டாலருக்கு வந்து நிற்கின்றார்கள். நடுவிரலின் ரேகை எங்குமே பதிவாகவில்லையாதலால், போலீஸாலும் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. பரிசைப் பார்த்ததும் தகவல் வந்தது நெவடாவில் ஒரு அம்மணியின் நடு விரலை ஒரு சிறுத்தைப் புலி கடித்து விட்டது என்ற செய்தி. அந்த அம்மணி வீட்டுப் பிராணிகளாக நாய் பூனை கிளி வளர்ப்பது இல்லையாம். புலி சிங்கம், சிறுத்தை, கரடிதானாம். ஒரு சிறுத்தைக்கு உணவு கொடுக்க கொஞ்சம் தாமதமாக, அவசரத்தில் அந்த அம்மணியின் விரலைக் கடித்து விட்டிருக்கிறது அந்த சிறுத்தை. அந்த விரல்தான் இந்த விரலா என்று போலீசார் துப்புத் துலங்க, கடைசியில் அந்த விரல் இந்த விரல் அல்ல என்ற பேருண்மையைக் கண்டு பிடித்தனர். அதற்குள் அந்த அம்மணியும் ஒரு மூன்று நாள் மீடியாக்களில் புகழ் பெற்றுச்சென்றார்.

முதலில் கேஸ் போடப் போவதாக மிரட்டிய விரலைக் கடித்த ஆயலா, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் பம்ம ஆரம்பித்தார். போலீஸ் விரைந்து விசாரிக்க, ஆயாலாவின் வண்டவாளங்கள் அனைத்து விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு வெளியாயின. அந்த அம்மாளின் முழு நேரத் தொழிலே யார் மேலாவது கேஸ் போட்டு காசு வாங்குவதுதான்.  அமெரிக்காவில் இது போன்று பெரிய நிறுவனங்களின் மீது வழக்குப் போட்டுப் பணம் பண்ணுவது சகஜம்தான் என்றாலும் இதில் மனித விரல் வந்ததுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இது வரை மொத்தம் 13 கேஸ் போட்டுள்ளார். 13 அமெரிக்கர்களுக்கு நல்ல நம்பர் இல்லை என்பது வாஸ்தவம்தான் போலும். இப்பொழுது மாட்டிக் கொண்டார். விரலுக்குத் தக்க வீக்கம் இல்லாமல் வருமானத்துக்கு மேல் செலவு செய்ய இந்த வழிதான் இவருக்குக் கிடைத்தது போலும்.

இவர்தான் விரலைப் உணவில் புதைத்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லாதபடியால், நம்ம ஊர் அம்மா பாணியில் (அதாங்க சுதாகரன், ஜெரினா, சுந்தரேச ஐயர் மேல் எல்லாம் கஞ்சா கேஸ் போட்டு, பிடிச்சி உள்ள வைச்சு விசாரிக்கிறாங்க இல்ல அது போல) ஆயாலா மேல இருந்த பழைய ·போர்ஜரி கேஸ், அவர் கடலை மிட்டாய் வாங்கி கிட்டுக் காசு கொடுக்காம போனது போன்ற கேஸ்களில் அவரை பிடித்து உள்ளே தள்ளி விட்டார்கள். ஆயலாவும் நான் எவ்விதத் தவறும் செய்யவில்லை, வெண்டீஸில் சாப்பிடச் சென்றதைத் தவிர என்று கூறி, எனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று கண்ணகி போல் சிறையில் இருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவரது இரண்டாவது கணவன் மீதும் ஒரு பழைய கேசைத் தூசி தட்டி போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள். சில்லிக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, இப்படி கம்பி எண்ணும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று இருவரும் பாடிக் கொண்டு சிறையில் உள்ளனர். உலகப் போலீஸ் அனைவரும் நம்ம ஊர் அம்மாவின் கஞ்சா டெக்னிக்கைத்தான் பின்பற்றுகிறார்கள் போலும்.

இதற்கிடையில் வெண்டீஸ் தாங்கள் குற்றமறவர்கள் நரமாமிசம் எல்லாம் பொடுவது கிடையாது என்று முழுப்பக்க அறிக்கை, ஓசில ஐஸ் கிரீம், பர்கர் எல்லாம் கொடுத்து மீண்டும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். விரலை அடுத்து தலைக் கறி, மூளை, கண், காது ஏதாவது கிடைக்குமா என்ற ஒரு நப்பாசையில் ஒரு கூட்டம் வெண்டீஸ¤க்கு விடாமல் போகிறது. இதற்கிடையில் அந்தமானிலிருந்து, அமோசான் வரை நரமாமிச சமையலில் எக்ஸ்பெர்ட்டுகளான காட்டுவாசிகள் வெண்டீசுக்கு அப்ளிகேஷன் போட ஆரம்பித்துள்ளதாகக் கேள்வி.

பரபரப்பான விஷயங்களுக்குப் பஞ்சமான அமெரிக்காவின் பத்திரிகைகள் எல்லாம் இப்பொழுதுக்கு வெண்டீஸீன் விரலை வைத்துக் கொண்டு சப்பிக் கொண்டிருக்கின்றன. அடுத்த பரபரப்பு செய்தி வரும் வரை முதல் பக்கத்தில் நடு விரல்தான் (அட அந்த அர்த்தத்தில் இல்லைங்க). இந்த பெண்மணியும் அவரது கணவனும் சேர்ந்து, தொழிற்சாலை ஒன்றில் விபத்தில் ஒருவர் இழந்த விரலை சில்லிக்குள் வைத்து வெண்டீசை மிரட்டி பல மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்கச் சதி செய்ததாக இப்பொழுது போலீசார் வழக்கை ஆரம்பித்திருக்கின்றனர்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors