தமிழோவியம்
திரைவிமர்சனம் : 6'2
- மீனா

பெற்றவர்களை அநியாயமாகக் கொன்ற கும்பலை மகன் பழிவாங்கும் புளித்துப் போன கதைதான் 6'2 வின் கதை என்றாலும் அதைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.

கால் சென்டர்  ஒன்றில் வேலை பார்க்கும் சத்யராஜ் ரெயிலில் போகும்போது அவர் பயணிக்கும் அதே பெட்டியில் பயணம் செய்யும் அஜய் ரத்னம் கொலை செய்யப்படுகிறார். அதை நேரில் பார்த்த சாட்சி தான் என்று போலீசிடம் சொல்லும் சத்யராஜ் கொலைகாரனை அடையாளம் காட்டுவதாக உறுதியளிக்கிறார். இன்ஸ்பெக்டர் ராஜ்கபூர் சத்யராஜிற்கு உதவி செய்ய போலீஸ் இன்பார்மரான சுனிதாவை நியமிக்கிறார். மேலும் அஜய்ரத்னத்தின் வீட்டிற்கு எதிரிலேயே சத்யராஜ் - சுனிதாவை தம்பதிகளாக குடிபோக ஏற்பாடு செய்கிறார்.

குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க சுனிதா பலமாக முயன்று கொண்டிருக்கும்போது அஜய்ரத்னத்தின் அப்பா மனோபாலாவை கொலை செய்கிறார் சத்யராஜ். அப்போதுதான் அஜய்ரத்னத்தையே கொலை செய்தது சத்யராஜ்தான் என்று தெரியவருகிறது. அஜய்ரத்னத்தின் மனைவியை கொலை செய்யும் போது சத்யராஜ் கூறும் பிளாஷ்பேக்கை ஒட்டுக்கேட்கும் சுனிதா, சத்யராஜைக் காட்டிக்கொடுக்காமல் அவருக்கு உதவி செய்கிறார். இறுதியாக அஜய்ரத்னத்தின் அண்ணன் ரவீந்தரைக் கொலை செய்ய சத்யராஜ் முயலும்போதுதான் போலீஸ¤க்கு உண்மை தெரிகிறது. ரவீந்தரின் உயிரை போலீசார் காப்பாற்றினார்களா? இல்லையா என்பதே மீதிக்கதை.

சமீபகாலமாக தன் பேவரிட் டிரேட் மார்க்கான லொள்ளை மட்டுமே வைத்து சமாளிக்கும் சத்யராஜ் இந்தப் படத்தில் வித்தியாசமாக நடித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதிலும் நான் தான் கொலையை நேரில் பார்த்த சாட்சி என்று கூறிவிட்டு ஒவ்வொரு முறையும் சாட்சி சொல்ல போலீஸ் கூப்பிடும் போது செய்கிறாரே ஒரு அலும்பல்.. போலீஸ் குறித்த சத்யராஜின் நக்கலும் குத்தலும் அருமை. தமிழுக்காக போராடுபவர்களைக் குறித்த சத்யராஜின் கமெண்டுகள் நிச்சயம் சம்மந்தப்பட்ட நபர்களை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஹீரோயின் புதுமுகம் சுனிதா வர்மா. நடிப்பு ஓக்கே என்றாலும் சத்யராஜை வார்த்தைக்கு வார்த்தை "வாய்யா!! போய்யா!!" என்று அழைப்பது கொஞ்சம் ஓவர். சத்யராஜின் நண்பராக வரும் வடிவேலுவின் காமெடி ரொம்பவும் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லை. தன்னுடைய வசனங்களில் வடிவேலு கவனம் செலுத்தவேண்டிய கட்டம். இல்லையென்றால் ரிபீட்டட் காமெடியாகிவிடும்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜ்கபூர். சத்யராஜை நல்லவன் என்று நம்பி ஏமாந்து போகும் காவல்துறை அதிகாரி. அஜய்ரத்னம், மனோபாலா இருவரும் ஏதோ இரண்டு காட்சிகளில் வந்து தலையைக் காட்டிவிட்டு போகிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் வந்திருக்கும் ரவீந்தர் நடிப்பில் - வில்லத்தனத்தில் பெரிதாக எதையோ சாதிக்கப்போகிறார் என்று ஏகமாய் எதிர்பார்த்தல் சப்பென்று ஆகிவிடுகிறது அவரது பாத்திரப் படைப்பு.

இமான் பின்னணி இசையில் தூள் கிளப்பினாலும் பாடல்களில் ஏமாற்றியிருக்கிறார். கதையின் கரு என்னவோ அரதப்பழசான ஒன்று என்றாலும் அதைச் சொல்லியிருக்கும் விதத்தில் நம்மை சபாஷ் போடவைக்கிறார் இயக்குனர் செந்தில் குமார். படத்தில் பல ஓட்டைகள் ஆனாலும் இடைவேளை வரை படத்தில் வரும் சஸ்பென்ஸ¤க்காக அவைகளை மன்னிக்கலாம். 6'2 சத்யராஜிற்கும் செந்தில்குமாருக்கும் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors