தமிழோவியம்
தராசு : ஆள்வோர் கையில் அதிகாரம்
- மீனா

தாஜ்மகால் அருகே வணிக வளாகம் கட்டுவதில் நடந்த ரூ.175 கோடி ஊழல் வழக்கில் உத்திர பிரதேச முதல்வர் மாயாவதிக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு சி.பி.ஐ.க்கு மாநில கவர்னர் டி.வி.ராஜேஸ்வர் அனுமதி தர மறுத்ததைத் தொடர்ந்து இவ்வழக்கில் இருந்து மாயாவதியை சி.பி.ஐ. விடுவித்து உள்ளது. மேலும் மாயாவதியின் அமைச்சரவையில் அமைச்சராக உள்ள  நசீமுதீன் சித்திக்குக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாயாவதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி கவர்னர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார் என்று தெரிவித்த சி.பி.ஐ அதிகாரிகள் இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடரவோ விசாரணை செய்யவோ தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மட்டும் மாயாவதி தோற்றுப் போயிருந்தால் தற்போது அவர் மீது வழக்கு போட்டு கூண்டில் ஏற்றியிருப்பார்கள். ஆனால் அவர் ஜெயித்தால் வந்த விளைவு - அவர் தயவு பலவிதங்களிலும் மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது. அதனால் சி.ஐ.யின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டது மத்திய அரசு. ஆள்வோர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காக உதாரணங்களில் மாயாவதி வழக்கும் ஒன்று. 

என்னதான் காவல்துறையும் சி.பி.ஐயும் கட்சி சாராமல் நடக்கிறார்கள் என்றாலும் ஆட்சியாளர்களுக்கு இவர்கள் பல நேரங்களில் பகிரங்கமாகக் காட்டும் ஆதரவை மறைக்கமுடிவதில்லை. மாயாவதியை வழக்கிலிருந்து விடுவித்ததன் பலன் - இனி ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி காட்டும் வேட்பாளருக்கு அவர் மனமுவந்து ஆதரவு கொடுப்பார். நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போடும் தகுதி வாய்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மாயாவதி கட்சியுடன் காங்கிரஸ் மறைமுகமான அல்லது நேரடியான கூட்டணி வைக்கும்.

சுயநலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசியல்வாதிகளிடமிருந்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளைத் தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்? பல காலமாக அரசியல்வாதிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்த நீதித்துறை சமீபகாலமாகத்தான் அவர்கள் பிடியிலிருந்து வெளிவர முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இதற்கான உதாரணம் மத்திய அமைச்சரான சிபு சோரன் செய்த குற்றங்களுக்காக மத்திய சிறைக்குப் போனது. மேலும் ஆள்வோருக்கும் நீதிபதிகளுக்குள்ளும் அடிக்கடி நடக்கும் வாக்குவாதங்களும் தகராறுகளும் இதை உறுதி செய்வதாகவே அமைகின்றன. நீதித்துறைக்கு தற்போது வந்திருக்கும் வீரமும் ரோஷமும் கடமை உணர்சியும் காவல்துறை மற்றும் சி.பி.ஐக்கு எப்போது வரப்போகிறதோ தெரியவில்லை. அதுவரை அப்பாவி மக்களாகிய நாம் இந்த சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கி சீரழியவேண்டியதுதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors