தமிழோவியம்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : ஹெல்மெட் சந்தேகம்
-

"டேய் மணி என்ன ஹெல்மட் இல்லாம வர்ற?" ஸ்கூட்டரில் வந்திறங்கிய மணியைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார் அண்ணாச்சி.

Helmet -TN"அண்ணாச்சி. ஹெல்மட் விஷயத்துல குழப்பமோ குழப்பம். இதுல தலைய பிச்சுக்காம இருக்க புதுசா ஹெல்மட் வேணும்போல இருக்கு."

"அப்டி என்ன குழப்பம்பா?"

"மொதல்ல 1ஆம் தேதி பைக்குல போற எல்லாரும் வாங்கணும்னு சொல்லிட்டாங்க."

"ஆமா."

"நம்ம மாமா கடையில பயங்கர சேல்ஸ்."

"சரி."

"அடுத்ததா. ஹெல்மெட் போடலண்ணா வார்ணிங் மட்டும் குடுப்போம்னு சொன்னாங்க."

"ஆமா."

"இப்ப வண்டில பின்னால இருந்து போற பெண்கள் குழந்தைகளுக்கு அவங்க விருப்பப்பட்டா ஹெல்மெட் போட்டுக்கலாம்னு சொல்றாங்க."

"அடடா செய்தி இப்படி போயிடுச்சா."

"அண்ணாச்சி சட்டம்னா எல்லாத்துக்கும் பொதுதானே?"

"இத அவ்வளவு பெரிய விஷயமாக்காதப்பா."

"ஹெல்மெட் கம்பெனிக்காரங்கிட்ட காசு வாங்கிட்டு இதெல்லாம் செய்றானுங்களோன்னு தோணுது."

"அதெப்டிப்பா இது கோர்ட் ஆர்டர் ஆச்சே." அண்ணாச்சி சிரித்தபடியே சொன்னார்.

"அப்ப கோர்ட் ஆர்டர அரசு முழுசா பின்பற்றாதா? என்னமோ போங்க. வெறுப்புல மாமா கடையில ஹெல்மட்ட திரும்பக் குடுத்திட்டு வந்துட்டேன்."

"என்னக் கேட்டா அவன் அவன் உசுரக் காப்பாத்துறது அவனவன் விருப்பம். என்ன சொல்ற?"

"சரிதான். ஹெல்மெட்ட விடுவோம். தலபோற விஷயம் ஆயிரம் இருக்குமே?" மணி பீடிகையுடன் துவங்கினான்.

"ராஜஸ்தான்ல ஒரு கலவரம். ரெண்டு ஜாதிக்காரங்களுக்குள்ள."

"அங்கேயும் ஜாதிக் கலவரமா.?" மணி கேட்டான்.

Rajasthan Communal Clash"ஜாதி எங்க மணி இல்ல? ஒலகம் பூரா இருக்குது. கதையக் கேளு. அங்க குஜ்ஜர்னு ஒரு சாதிக்காரங்க அவங்கள OBCலேந்து STக்கு மாத்தணும்னு போர்க்கொடி தூக்கியிருக்காங்க. தொடர்ந்து போராட்டமெல்லாம் நடத்தி கலாட்டாவாயிடுச்சு. பிரச்சனை முத்திப்போனதுக்கு காரணம் அங்க மீனாண்ணு இன்னொரு சாதிக்காரங்க குஜ்ஜர் சாதிக்கு ST குடுக்குறத எதிர்க்கிறாங்க. இதுல ஒருத்தருக்கொருத்தர் சண்டையில போலிஸ் துப்பாக்கிச் சூடெல்லாம் சேத்து ஒரு 26பேர் எறந்துட்டாங்க."

"அடப்பாவமே."

"இப்ப பேச்சுவார்த்தையெல்லாம் நல்லபடியா முடிஞ்சு போராட்டமெல்லாம் அமைஞ்சாச்சு."

"முடிவா என்ன சொல்லியிருக்கு?"

"மூணு முன்னாள் நீதிபதிங்க சேர்ந்த குழு ஒண்ணு இந்த குஜ்ஜர்கள ST ஆக்குறது பத்தி ஆராயணும்னு முடிவாயிருக்கு."

"பரவாயில்ல அண்ணாச்சி. ஒரு கமிஷனப் போட்டதும் மக்கள் அடங்கிப்போறாங்க."

"ஜனநாயகமாச்சேப்பா."

"ஆமா என்ன நம்ம ஊர்ல கட்டிடங்கள இடிச்சு இடிச்சு அரசியல் பண்ணுறாங்க?"

"அத ஏன் கேக்குற. முதல்ல விஜயகாந்த் கட்டிடம். அப்புறம் ஜெயலலிதா எஸ்டேட், இப்ப அதிமுக தலமைச் செயலகம். ஆனா டைமிங் மிஸ் ஆகி கோவத்துக்கு ஆளாகிட்டாரு கலைஞர்.  பிறந்த நாள் அதுவுமா."

"திமுகவ அழிச்சே தீருவேண்ணெல்லாம் அதிகமான பேச்சுதான் அண்ணாச்சி."

"இந்தமாதிரி பேச்செல்லாம் இதுவா முதல்தடவ. இன்னும் நடக்கும்பா. திமுகவுல இருக்கிற பிரச்சனையெல்லாத்தையும் மக்கள் மறக்கணும்னா புதுசா ஒண்ண உருவாக்குறதுதானே சரியான ஐடியா"

"இதுக்குத்தான் அண்ணாச்சி நீங்க வேணும். இப்டி ஒரு கோணம் இருக்குறத நீங்கத்தான் சொல்வீங்க."

"இப்ப ஜெ திமுகவ அழிப்பேன்னு சொன்னா திமுக தொண்டர்கள் உள்பிரச்சனையெல்லாம் மறந்துட்டு ஒண்ணாயிருவாங்கல்ல."

"ஆமா. கொஞ்சம் மாத்தம் வரத்தான் செய்யும்."

"சன் டிவிக்கு ஆதரவு போனதுல ராஜ் டிவிக்கு கொண்டாட்டம்னு சொன்னேன்லயா?"

"ஆமா."

"இப்ப ராஜ் டிவி உரிமையாளர் திமுகவுல இணைஞ்சிருக்கார்."

"ஓகோ எல்லாமே அஃபிசியல் ஆயிடுச்சா."

"அரசியலுக்கும் மீடியாவுக்கும் அப்டி ஒரு முடிச்சு."

"ஆமா ஆமா."

"கலைஞர் ஆட்டுக்குட்டி, சில்வர் யானையோட சேத்து இதையும் பிறந்தநாள் பரிசா ஏத்துகிட்டாராம்."

"சரி சரி."

"நீ எப்பவும் கேப்பியே உலக செய்திகள். இப்ப நிறைய இருக்குதுப்பா."

"சொல்லுங்க."

"G8 நாடுகள்னு ஒரு வளர்ந்த நாடுகள் கூட்டமைப்பு இருக்குது. அவங்கெல்லாம் ஜெர்மெனியில சந்திக்கிறாங்க. அதுக்கு பலத்த எதிர்ப்பு. ஆர்ப்பாட்டத்துல போலீஸ் அடிதடிவரைக்கும் போயிடுச்சு."

"எதுக்கு ஆர்ப்பாட்டம்?"

"உலகமயமாக்கல் கூடாதுண்ணு."

"வெளிநாட்டுக் காரனே இதுக்கு எதிர்ப்பு சொல்றானா?"

"ஆமா. நம்ம ஊர்ல சொன்னா கம்யூனிஸ்ட்டுன்னு முத்திர குத்திடுவான். உலகமயமாக்கல்ல பிரச்சன என்னண்ணா தனக்கு சாதகமாவே எல்லா முடிவுகளையும் பெரிய நாடுங்க எடுத்துக்கிறாங்க. ஏழை நாடுகளப் பத்தி கவலப் படுறதே இல்ல. மஞ்சளோட மருத்துவக் குணத்துக்கும், வேப்பிலைக்கும், யோகாவுக்கும் அமெரிக்க காரன் காப்புரிமை வாங்குறது எந்த விதத்துல நியாயம்?"

"சரிதான்."

"இன்னொரு செய்தி அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் திரும்பவும் மனக்கசப்பு வந்திருக்கு."

"திரும்பவும்னா?"

"பனிப்போர் காலத்துக்கப்புறமா."

"பிரச்சன என்ன?"

"செக் குடியரசுல அமெரிக்கா ஒரு பாதுகாப்பு தளம் போடவிருக்குது. இது ரஷ்யாவுக்கு பிடிக்கல. ஐரோப்பிய நாடுகள பாதுகாக்க இது தேவைன்னு அமெரிக்கா சொல்லுது. ஆனா இந்த திட்டத்த செஞ்சா திரும்பவும் பனிப்போர் வரும்ணு ரஷ்ய அதிபர் புட்டின் சொல்லிட்டாரு. ஆக ஒரு புதுக் குழப்பம் புஷ்ஷுக்கு வந்திருக்கு."

"யாரு ஜெயிப்பா?"

"இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது. ஆனா ரெண்டுபக்கமும் நல்லா அரசியல் பண்ணிருவாங்க."

"இப்ப இலங்கை பக்கத்துல அமெரிக்கா மிலிட்டரி தளம் வச்சதுண்ணா நாம ஒத்துப்போமா அண்ணாச்சி."

"ம் சரிதான் பழசக் கிண்டாத. அதுபோலத்தான் ரஷ்யாவும் இந்த பிரச்சனைய அணுகுது. முன்னால ஸ்கூட்டர் லிபின்னு ஒருத்தனப் பத்தி சொன்னேன் நியாபகம் இருக்கா?"

"ஆமா அந்த டிக் சேனியோட உதவி ஆளு ஏதோ சிஐயே உளவாளிய காட்டிக்குடுத்துட்டார்னு..."

"ஆமா அவனுக்கு 30 மாசம் சிறைன்னு தீர்ப்பாயிடுச்சு."

"சரி தொலையட்டும்."

"சரி மணி. இன்னும் நிறைய சேதி இருக்குது ஆனா நேரமில்ல. அப்டியே கொண்டு ஸ்டேசன் பக்கம் விட்டுர்றியா?"

"ஹெல்மெட்?"

அண்ணாச்சி முறைக்க, சிரித்துக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான் மணி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors