தமிழோவியம்
தராசு : என்ன செய்யப்போகிறார்கள் இடதுசாரிகள்?
- மீனா

பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் அதிகரித்துள்ளன. மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்த 2 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் தினந்தோறும் உயர்ந்து வரும் எண்ணெய் விலையேற்றத்தால் தவிர்க்க முடியாத நிலையில் எடுக்கப்பட்ட முடிவு இது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். வழக்கம் போலவே இந்த முறையும் எதிர்கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரிகளும் அரசின் இந்த விலையேற்றத்தை எதிர்த்து போராட்டங்களை அறிவித்துள்ளன. மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் தி.மு.க தலைவர் வழக்கம் போலவே இப்பிரச்சனையில் நறுக்கென்று ஒரு வார்த்தை பேசாமல் வழவழா கொழகொழா என்று அறிக்கை விடுகிறார்.

தங்களை மக்களின் காவலனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இடதுசாரிகள் ஒவ்வொரு முறை இத்தகைய விலையேற்றத்தை மத்திய அரசு அறிவிக்கும்போதும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தும். நாட்டு மக்கள் தங்களின் பரபரப்பான வாழ்க்கையில் இத்தகைய போராட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மத்திய அரசும் இடது சாரிகளின் போராட்டத்தை பொருட்படுத்துவதே இல்லை. இடதுசாரிகள் மக்களுக்கு உண்மையிலேயே ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தால் உருப்படியான ஏதாவது ஒரு பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு தாங்கள் சாதிக்க நினைப்பதை நிஜமாகவே சாதிக்க முற்படலாம். இதை விட்டுவிட்டு மக்கள் மத்தியில் வெறுமனே ஒரு இமேஜை ஏற்படுத்திக்கொள்ள இடதுசாரிகள் ஒன்றுக்கும் உதவாத சில போராட்டங்களை நடத்துகின்றன. இது முழுக்க முழுக்க சுயநல செயலே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

ஏதோ மக்களின் நலன் ஒன்றே தங்கள் குறிக்கோள் என்று காட்டிக்கொள்ளும் இடது சாரிகளின் உண்மையான குறிக்கோள் எந்த அரசு ஆண்டாலும் அந்த அரசுக்கு தங்களால் முடிந்த வரை குடைச்சல் கொடுப்பது ஒன்றே. இதற்கு ஏற்றவகையில் ஆட்சியில் தங்கள் கட்சியினர் பங்கேற்காதவாறு பார்த்துக்கொள்ளும் இந்த இடதுசாரிகள் சில நேரங்களில் மக்களின் ஆதர்ச அத்தியாவசிய தேவைகளுக்கு குரல் கொடுத்தாலும் பல நேரங்களில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் பல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் போடுவதும், ஆளும் அரசை "கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்" என்று கூறி மிரட்டுவதும் மக்கள் மத்தியில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

கம்யூனிச கொள்கைகள் உலக அளவில் மங்கி வரும் இந்நாட்களில் இந்திய இடதுசாரிகள் தொட்டதெற்கெல்லாம் ஆர்பாட்டம் என்ற நிலையை விட்டொழித்து, நாட்டு மக்களின் உண்மையான நலனில் அக்கறையுள்ள நிஜமான மக்களின் தோழன் என்ற நினைப்பில் மக்களின் அத்தியாவசிய தேவை எதுவோ அதை மட்டும் மத்திய மாநில அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் அமைப்பாக செயல்படவேண்டும். இல்லையென்றால் கம்யூனிஸ்டுகளின் கலாட்டாவிற்கு மதிப்பே இருக்காத நிலை வெகுவிரைவில் உருவாகும்.

ஆளும் கட்சி எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும் - எந்த ஒரு விலையேற்றத்தை அறிவித்தாலும் அதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது எதிர்கட்சிகளின் வேலையாகப் போய்விட்டது. ஆனால் ஆளும் கட்சியில் ஒரு அங்கமாக விளங்கும் இடதுசாரிகள் தொட்டதெற்கெல்லாம் வெறும் போராட்டம் மட்டும் நடத்துகிறார்களே தவிர இவர்களது போராட்டத்தால் மக்களுக்கு ஒன்றும் உருப்படியாக நடந்தது இல்லை. இடதுசாரிகளின் இந்த இரட்டைவேடத்தை மக்கள் என்று உணர்ந்து அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களை மண்ணைக் கவ்வச் செய்யப்போகிறார்களோ அன்று தான் இவர்களின் ஆர்ப்பாட்ட கொட்டம் அடங்கும்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors