தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : அலுவலக தகைவை (stress) குறைக்க சில வழிகள்
- பத்மா அர்விந்த்

உலக மயமாக்கப்பட்ட சந்தையில் நடக்கும் போட்டியில் நாம் நேரடியாகவோ அல்லது பணியாற்றும் நிறுவனம் மூலமாகவோ பங்கு கொள்கிறோம். போட்டியில் முதலில் வர, செய்யும் காரியங்கள் பல. குறைத்த நேரத்திலும்,   அதையும் திறமையுடன் செய்யவேண்டிய அவசியத்திலும் இருக்கிறோம்.  இதைத்தவிர்க்க அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் அதன்பின் தினசரி வாழ்க்கையை தொலைக்கிறோம். எப்படி ஆயினும் இது தேவையில்லாத ஒரு அழுத்தத்தை தருகிறது.

அதிக காலம் வேலை செய்து மனமும் மூளையும் தளர்வடையும் போது நல்ல திறத்துடன் செய்த முடிவுப்பொருள் (outcome, product) கிடைப்பதில்லை. இதனால் மேலாளர் சினம் கொள்ள கூடும். அல்லது பணியில் அதிக கவனம் செலுத்தி வீட்டில் உல்ளவரிடம் சினம் கொள்வதும், பல வேலைகளை கவனிப்பின்றி ஒதுக்குவதும் நடக்கும்.

இதற்கு மாற்று என்ன என்பதை பார்த்தால் நல்ல சூட்சுமத்துடன் பணியாற்றுவதே ஆகும். மெய்வருத்தம் பாராமலும், கண் துஞ்சாமல் வேலை செய்வதை காட்டிலும் நல்ல திட்டமிடல், பகுத்தறிதல் (analysis) போன்றவற்றுடன் காலத்தை சரிவர நிர்வகிக்க கற்று கொள்வது அவசியமாகும்.

நல்ல முறையில் சிறப்பாக பணியாற்ற மேலாளரின், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திறணாய்வு , தகைவின் முழுமுதற் காரணியான அதிக படியான வேலை பளுவை அறிய உதவும்.

1. பணியில் வேலைகளை அதன் முக்கியத்துவத்தின் படி எப்போது முடிக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டயாப்படி பிரித்து ஒரு அட்டவணை செய்து கொள்ளுங்கள்.  அதிலிருந்து உங்களுக்கு அதிக பலன் தரக்கூடிய வேலைகளை இனம் கண்டு அதை முந்நிலை படுத்துங்கள். இந்த வேலைகள் அதிக சிரமம் தருமானாலும் அதில் கவனம் செலுத்துங்கள். மற்ற சில்லறை வேலைகளை , தனிப்பட்ட வகையில் உங்களுக்கு பேரும் புகழும் அதிகம் தாராத வேலைகளை பிரித்து  அதில் கவனம் சற்றே குறைந்தாலும் செய்ய பழகுங்கள். “focus on one that gives maximum return and reward”

2. உங்களுடைய திறன்களில் அதிக திறமை வாய்ந்ததாக நீங்கள் கருதுவதை  சற்றே மனம் களைத்திருக்கும் போது கூட செய்யலாம். அதே சமயம் நிறுவனத்திற்கு முக்கியமான கடினமான வேலைகளை அதிக கவனத்துடன் செய்வதும், செய்ய சில எளிய வழிகளை கற்று கொள்ளவும் செய்தால் அது பணிகளை நன்றாக பகுத்து செய்ய வழிவகுக்கும்.

3. வேலை செய்யும் இடத்தில் அதிக காகிதங்களை அடுக்கி, பரத்தி வைக்காமல் இருக்க முயற்சிக்கவும். நல்ல முறையில் காகிதங்களை வகை படுத்தி வைப்பதும் உடனுக்குடன் போதிய இடத்தில் தொகுத்து  வைப்பதும் மீண்டும் தேடி காலத்தை விரயமாக்காமல் இருக்க வழிவகுக்கும். நிறங்கள் கொண்டு பிரித்து வைத்தால் எடுப்பதும் கண்டு கொள்வதும் எளிது.

இவை சற்றே வேலை செய்யும் போது ஒருமித்த கவனம் செலுத்தவும், விரைவாக முடிக்கவும் உதவுகிறது.
வேலையை எப்படி பகுத்துணர்ந்து ஆராய்வது? அலுவலகத்தின் வேலை, திட்டங்களில் காலவரையறை போன்றவை கொடுக்க பட்டிருந்தால் அது குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டிய கட்டயத்தில் இருப்பதால், பல வகை சின்ன சின்ன படிகளும் அதற்கான காலமும் பகுத்தல் எளிதாகும். எடுத்துக்காட்டாக ஒரு நிதி உதவி கேட்டு அனுப்பவேண்டிய படிவம் ஜுன் 8 கடைசி தேதி என்று வைத்து கொள்வோம். அதில் வேலை செய்பவர்களின் ஊதியம், அலுவலக தேவைகள் (காகிதம் எழுதுகோல் போன்றவை) ஆ  ன  செலவு என பட்ஜெட் அல்லது நிதிதிட்டம் மே 2 வாரத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த திட்டத்திற்கான தேவை (Needs assessment) யும், குறிக்கோள்களும் (goals and objectives) எழுதி முடிப்பது மே 3ஆ   ம் வாரத்திற்குள் முடித்து அனைத்தையும் மீண்டும் படித்து தேவையற்றதை நீக்கி(edit), தேவையான படிவங்கள் (copy) எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இது ஜூன் 7ஆம் தேதிக்கான மன அழுத்தத்தையும் அதிகப்படி தகைவையும் தடுக்க வழி செய்யும். என்னுடைய வேலையில் ஜூன் மாதம் 8 நிதி நிறுவன  ங்களுக்கு வருடந்தோறும் நான் படிவங்கள் அனுப்புவேன். இது நிலையான செயல் என்பதால் முன் கூட்டியே திட்டமிட வசதியாக இருக்கிறது.

1. முதலாவதாக பணியின் தேவைகளை அறிந்துகொள்ளுங்கள்:

 வேலையின் கூறிய கருத்துக்களையும் முடிவுப்பொருளின் எதிர்பார்ப்பையும் நன்றாக கவனமாக படிக்க வேண்டும்.

 உங்கள் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேலையாளரின் பணியாற்றும் திறன் குறித்து ஆய்வு படிவங்கள் (performance review) நிரப்பபடின் அ  தன் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள். பல நிறுவனங்களில் இது ஊதிய உயர்வையும், பணிசெய்யும் திறனுக்கான ஊக்க பரிசுகளையும் தீர்மானிக்கிறது. இதன் மூலம் எந்த வேலைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதி முக்கியம் என்று அறிய முடியும்.

 ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க எந்த தொழில் நுட்ப முறை சிறந்தது, உங்களுக்கு அந்த வசதி உள்ளதா, அதை பெற முடியுமா என்று பார்த்து தேவையான பொருட்களை வாங்கும் துறைக்கு சொல்ல வேண்டும். உங்களுக்கு இந்த திட்டத்தை முடிக்க உதவக்கூடைய சக பணியாளருக்கு தேவையான பயிற்சி தர வேண்டும்.

2. நிறுவனத்தின் கொள்கை, குறிக்கோள் அதன் கலாசாரத்தை அறிந்து கொள்ளுதல் முக்கியமாகும். நிறுவனத்தின் எதிர்கால திட்டமும் அதன் நிதி நிலைமையையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். நீங்கள் மென்பொருள் பொறியியல் வல்லுனராக இருப்பினும் நிறுவனத்தின் முக்கிய பொருளுக்கான  சந்தை நிலவரம், மற்றும் நிதி நிலைமை, பங்குதாரரின் கருத்துக்களை நிறுவன செய்தி அறிக்கை படித்தோ அல்லது சந்தை துறை (Marketing), நிதிதுறையினருடன் பேசியோ அறிந்து கொண்டு உங்களை தயார்படுத்திக்கொள்ளுதல் அவசியம். நான் முன்பு வேலை பார்த்த ஒரு நிறுவனம் , கலிபோர்னியாவில் உள்ள நிறுவனத்தால் வாங்க பட இருக்கிறது என்ற பேச்சு வார்த்தை துவங்கிய போதே பலர் வேலை தேட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் ஒரு நிறுவனம் வாங்க படும் போதோ, அல்லது நிர்வாகம் மாற்றப்படும் போதோ (reorg) ஒரு வித தேக்க நிலை ஏறப்டுகிறது.முடிவுகள் எடுப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால் நிறுவன பணியாளாரிடம் ஒருவித முரண்பாடான போக்கு (demoralaized) ஏற்படும். இது ஆரோகியமான மன நிலை தருவதில்லை. அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்து வாழ்க்கையை துவங்கியவருக்கு பலவித அச்சத்தை தரும். உதாரணமாக விசா என்னவாகுமோ, காப்பீடு என்ன ஆகும், வாகன கடன் போன்ற பிரச்சினைகளும் தகைவை அதிகரிக்கும்.திடீரென வேலை விட்டு நீக்கியபின், வேறு வேலை தேடுவதைவிட, பணியில் இருக்கும் போதே மாற்றங்கள் அறிந்து செயல்பட்டால் அது உங்களுக்கு பேரம் பேச (better bargaining power) உதவும்.

3. குறிக்கோள்கள் மாற்றுவதை அறிந்து செயல் படுவது மேலாளரின் பாராட்டையும் பெற்றுத்தரும்.

4. உங்களுடைய செய்கைகளை அவற்றின் தேவையை அறிந்து அட்டவணைபடுத்தியபின், உங்கள் மேலாளரிடம் ஒப்புதல் பெற்றுக்கொள்ளுங்கள். இடையே வேறு வேலைகள் வருமாயின் அதை மறுதலிக்க இது உதவும்.

5. மேலாளரிடம் பேசும் போது முடிக்க வேண்டிய காரியத்தில் ஏதேனும் இடடயூறுகள் வரும் என்று நீங்கள் எதிர்நோக்கினால் அதையும் விவாதிப்பது நல்லது. அவரளவில் முடிந்த உதவியும் காலத்தில் கிடைக்கும். எங்கள் அலுவலகத்தில் சில வேலைகளை மருத்துவமனையில் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். சில சமயம் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள போதிய இடவசதி இல்லத நிலை வரும். இதை முன்கூட்டியே பேசினால், மருத்துவமனைகள் மற்ற சின்ன மருத்துவமனிகளை தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை செய்ய முடியும். திடீரென நோயாளிகளை வைத்துக்கொண்டு மருத்துவமனை தேட வேண்டிய அவசியமும் தகைவும் வராது.

6. உங்களுக்கு உதவிசெய்யும் பணியாளரிடமும் முன்கூட்டியே சொல்வது அவசியம். ஒருவர் உங்களுக்கு புள்ளியியல் விவரங்களை தருவார் என்று எண்ணி இ ருக்க, நீங்கள் அவரிடம் சொல்லவில்லை என்று வைத்துக்கொள்வோம். இரண்டு மாதம் கழித்து அவரை தேடி நீங்கள் செல்ல அவர் விடுமுறையில் சென்றுவிட்டால் அது ஒரு பிரச்சினையாகி தகைவை அதிகரிக்கும். முன்கூட்டியே அவரிடம் உங்கள் உதவியை நான் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி இருப்பீர்கள் என்றால் அவர் விடுப்பு எடுக்கும்முன் உங்கள் வேலையை முடித்து தருவார்.

7. சிலவேலைகளை செய்ய உதவி வேண்டுமெனில் தயங்காமல் சொல்லுங்கள். பல  ஆசியர்களுக்கு உதவி செய்ய மற்றவர்களை நாடுவதில் தயக்கம் இருக்கிறது. அதேபோல வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு செலவழிக்க திட்டம் இருப்பின், அலுவலகத்தில் உங்களை எதிர்பார்த்தால் தயங்காமல் உங்கள் திட்டத்தை சொல்லுங்கள். பலர் அதை மறைத்து வேலை செய்து முடிக்கிறேன் என்று விருப்பமின்றி வேலை செய்வதும், வீட்டில் சந்தோஷமான சூழ்நிலையை போக்குவதும், விடுப்பு எடுத்து சென்ற நபர்மீது விரோதம் பாராட்டுவதும் நடக்கிறது.மனதில் உள்ளதை தயங்காமல் பேசுங்கள்.

இதுபோன்ற சின்ன சின்ன செயல்கள் அலுவலக தகைவை குறைக்க வழி செய்யும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors