தமிழோவியம்
டெலிவுட் : 'லகலக' ஜோதிலகா
- சில்லுண்டி

எந்த சானலுக்கு திருப்பினாலும் 'லகலக' ஜோதிலகா ஸ்பெஷல்தான். சைடு கேரக்டரில் நடித்தவர் எல்லோரையும் சைடு வாங்கி சூப்பர் ஸ்டாரினியாகி இருப்பது பற்றி விஜய் டிவியில் டாக்குமெண்டரி காட்டினார்கள். டாக்குமெண்டரின்னா மண்டையை பிராண்டி, தாடியை சொறிஞ்சுக்கிற மாதிரிதான் இருக்கணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?! பரவாயில்லை, டாக்குமெண்டரி ஜோவின் முகபாவங்களை அளக்கும் ஜோமெண்டரியாகத்தான் இருந்தது. சூர்யா சின்ன கிளிப்பிங்கிஸில் கூட வராததுதான் பெரிய குறை. வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்கணும்னு மாதவன் விவரிக்கும்போது படபடவென்று எக்ஸ்பிரஷனை அள்ளிவிட்டு 'நீங்க உளறினா நானும் உளறித்தான் ஆகணுமா'ன்னு போட்டுத்தாக்குற ஸீனை பார்த்தா. சத்தியமா குஷ்பூவுக்கு அப்புறம் லகலகதான்.....ஹி...ஹி!

கெட்டி மேளம் சீரியலை பார்த்துட்டு (அட, போட்டின்னா நிறைய சோதனை இருக்கத்தான் செய்யும்!) கேட்குற கேள்விக்கு பதில் சொன்னா கமல் கூட மும்பை எக்ஸ்பிரஸ்ல ஜாலியா ஒரு டிரிப் போகலாமாம்! வழக்கம் போல இந்த கேரக்டருக்கு என்ன பேரு, என்ன உறவுங்கிற மாதிரியான கஷ்டமான கேள்விதான்! மும்பை எக்ஸ்பிரஸா இருந்தாலும் இது மும்பைக்கு போகாது. ஒரு சேஞ்சுக்கு கன்னியாகுமரியிலிருந்து மெட்ராசுக்கு வருமாம். கூடவே கமல் கூடவே நீங்களும் வரலாம். கமலே ஒவ்வொரு கோச்சுக்கும் வந்து உங்களை குசலம் விசாரிப்பாராம். ஏதோ ஒரு டிவியில் ஏதோ ஒரு காம்பியரு பண்ணின மாதிரி ஞாபகம் வருதா? எனக்கும் வருது. கமலுக்கு இதெல்லாம் தேவைதானான்னு ஒரு கேள்வி நெஞ்சுக்குழி வரைக்கும் வந்து நெளியது. எதுக்கு வம்பு?

தினமும் ராத்திரி பத்தரை மணியிலிருந்து ஒரு இரண்டு மணி நேரம் வரை இது நடக்கிறது. யாராவது ஒரு நாலு பேர் பேசிக்கொண்டே அல்லது கவிதை படித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாற்பது பேர் அடிக்கடி சிரித்து வைக்கிறார்கள். நம்மூர் நகைச்சுவை மன்றம் மாதிரியான சங்கதி போலிருக்கிறது. தூர்தர்ஷன் சாயல் தெரிந்தாலும் சிரிக்க வைப்பதால் மன்னிக்கலாம். நம்முரில் காமெடி ஷோ என்றாலே சினிமா காமெடி காட்சிகளின் தொகுப்பு என்பதாக அர்த்தம். தினமும் ஒரு அரை மணி நேரம் பார்த்தா சிரிக்க முடிகிறதோ இல்லையோ நிச்சயம் ஒன்ணு ரெண்டு இந்தி வார்த்தைகள் பரிச்சயம் ஆகும்னு நிச்சயமா சொல்லிடலாம்.

இரண்டு வருஷத்துக்கு முந்தி விஜய் டிவியில் லட்சுமி பண்ணிக்கொண்டிருந்த புரோகிராம் கொஞ்ச நாளாய் ஜெயா டிவியில் வருகிறது. இப்படித்தான் சும்மா இருந்த யூகி சேதுவை திரும்பவும் ஜெயாவுக்கு அழைத்துவந்து ஓரேயடியாக அனுப்பி வைத்தார்கள். லட்சுமியின் நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான். சினிமாவில் நடிக்கிற மாதிரியே லட்சுமியின் நடிப்பு பிரமாதம்னு சொல்ல வைப்பதுதான் நிகழ்ச்சியின் பெரிய மைனஸ் பாயிண்ட். அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்படுவது அல்லது ரியாக்ஷனே காட்டாமல் அடுத்த சப்ஜெக்டிற்கு ஜூட் விடுவதையும் இதில் சேர்த்துக்கலாம். வீட்டை விட்டு ஓடிவந்த பையனை லட்சுமி டீல் பண்ணுகிற விதமே அலாதி.


'ஏம்பா உங்க அப்பா அம்மாவையெல்லாம் தவிக்க வுட்டுட்டு வீட்டை விட்டு ஓடிப்போனே?'

'பிடிக்கலை.. அதான் போனேன்'

'ஆனா, அவங்களுக்கு உன்னை பிடிச்சுருக்கே...'

'அதுக்கு நான் என்ன பண்றது?'

நீதி - உச்சி வெய்யில் மண்டையை பிளக்கும் மத்தியான நேரத்தில் ஜெயா டிவி பக்கம் சேனலை திருப்பவே கூடாது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors