தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : பகை மூலம் பயன் கொள்
- எஸ்.கே

ஒரு எதிரியை உருவாக்குவது எங்ஙனம் என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஒரு அறிஞர், “இது மிகச் சுலபம். உங்கள் சமநிலையிலுள்ள ஒரு நண்பருக்கு ஒரு உதவி செய்யுங்கள். பிறகு பொதுவில் அதை ஓரிருமுறை எடுத்துக் கூறுங்கள். அவ்வளவுதான். ஒரு எதிரி முளைத்தாயிற்று! ஏனெனில் யாரும் தான் பிறரின் உதவியால்தான் எதையும் பெற்றொம் என்பதை அவர்தம் ஆழ்மனம் ஒப்புக் கொள்ளாது. இது நான் முன்னமையே விளக்கிக் கூறியபடி நம் ஈகோவின் செயல்பாடு. அதுபோல் முழுமனத்துடன் ஒப்புக் கொள்வது நம் இயற்கை இயல்புக்கு ஒவ்வாது. நம் மனம் நம் மேல் ஒருசார்பாகத்தான் செயல்படும். ஆகையால் நம்மைப் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் நம் உதவியைப் பெற்றவரிடத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மை பொங்கும் அதனால் அவர் மனம் மருகுவர். நாளடைவில் உங்களுக்கு ஏதாவது இடர் செய்து, மூளியான தன் ஈகோவை இட்டு நிரப்ப அவர்தம் மனம்  “நம நம”வென்று இடித்துக் கொண்டிருக்கும். இந்த நிலையில் நீங்கள் ஒரு முழுதான பகைவனைப் பெற்றிருப்பீர்கள்”  என்றார்.

வெளிப்படையாக தம் சொல்லாலும் செயலாலும் நம் பகையாக அடையாளம் காணப்பட்டவர்கள் முன் நாம் மிக்க எச்சரிக்கை உணர்வுடன் இருப்போம். ஆனால் உட்பகை உணர்வுடன் கூடிய உங்களால் நண்பர்களாக வரிக்கப்பட்டவர் எதிரில் உங்களுக்கு எந்தவித பாதுகாப்புமில்லை. அவர்கள்தான் மிக ஆபத்தானவர்கள் என்பதை என் உட்பகை பற்றிய முந்தைய கட்டுரையில் விளக்க முற்பட்டிருக்கிறேன். நம்மைச் சுற்றி நிற்கும் நம் நண்பர்கள் உண்மைநிலை நம் கவனத்துக்கு எட்டாமல்  ஒரு அரணை எழுப்பி விடுவர். பிறகு நீங்கள் அவதானிப்பது எல்லாம் அந்த குழுவினர் கையினால் அளிக்கும் பதப்படுத்தப்பட்ட செய்தியே. அது அந்தக் கோஷ்டியினருக்கு இணக்கமானதாக அமைந்தாலும், உங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆபத்தான நிலையே. இரானில் முன்பு ஆட்சி செய்த ஷா என்பவர்  “அரசர்களுக்கு அரசன், ஆரியர்களின் விடிவெள்ளி, ஷா-இன்-ஷா முகமமது ரீஸா ஷா பஹலவி” என்று தன்னை அழைத்துக் கொண்டு தன் நாட்டு மக்கள் தன்னை மிகவும் கொண்டாடுவது போல் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய அதிகாரம் முழுதும் விலகிப் போய் அடிப்படைவாதிகள் கையில் சென்றடைந்ததை அவர் அறிந்தாரில்லை.  தன்னைச் சுற்றியுள்ள  துதிபாடிகளையே நம்பிக் கொண்டிருந்தவர் கடைசியில் தன் நாட்டைவிட்டே ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது நமக்கெல்லாம் தெரியும்.

சாதாரணமாக நல்ல நண்பர்கள்கூட தன்னறியாமல் நமக்கு ஒரு வகையில் தீங்கு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. நண்பர்கள் பெரும்பாலும் உங்களெதிரே அப்பட்டமான உண்மையை உரைக்க மாட்டார்கள். என்னதான் திருக்குறளிலும் வேறுபல வாழ்க்கை நெறிகளை வலியுறுத்தும் நன்னூல்களிலும் நட்புக்கு இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் கடைப்பிடிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை. “மிகுதிக்கண் மேற்சென்று இடித்துக்” கொண்டிருக்கும் நண்பர்கள் நிச்சயம் நம் மனத்திற்கு இசைந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். அவர்களை நாம் தவறாகத்தான் முதலில் புரிந்து கொள்வோம். அவர்களின் உன்னத, பழுதில்லாத நோக்கினைப் புரிந்து கொள்ளும்போது நட்பு முறிந்திருக்கும். இதனால்தான் நண்பர்கள், நண்பர்களாகவே தொடர்வதற்காக கூடியவரையில் பிணக்குக்கு இடம் கொடுக்காமல் பேசுவார்கள். நல்லிணக்கத்திற்காக உங்கள் மனத்திற்கு இசைந்தவற்றையே பேசுவார்கள். அதனால் அவர்கள் மூலம் உங்கள் சூழலின் உண்மை நிலையை உங்களால் முழுதுமாக அறியமுடியாது. “அவர்கிட்ட இதை எப்படிப்போய் சொல்வது. நம்பளைப் போய் தப்பா நினைச்சுக்கிட்டா என்ன செய்யறது? நமக்கெதுக்கு பொல்லாப்பு?” இப்படிப்பட்ட பேச்சுக்களை நீங்கள் நிறையக் கேட்டிருப்பீர்கள்.

உண்மையில் நீங்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய ஒரு பக்கத்தைதான் உங்கள் அவதானிப்புக்கு அளித்திருப்பார்கள். அவர்களுடைய மறுபுறம் தெரிய வேண்டுமா? அவர்களை உங்கள் கீழ் வேலையிலமர்த்துங்கள். அல்லது நீங்கள் அத்தகைய ”நெருங்கிய” நண்பரொருவர் கீழ் வேலயிலமருங்கள். பிறகு தெரியும் உண்மை நிலை. 

 எனக்கு அறிமுகமான தொழிலதிபர் ஒருவர் தன்னுடன் அடிநாளில் படித்தவர் ஒருவர் மிக ஏழ்மையான தோற்றத்துடன்  சாலையில் நடந்து செல்வதைக் கண்டிருக்கிறார். அவரைச் சந்தித்து குசலம் விசாரித்ததில், அந்த நபர் வேலையில்லாமல் ஒரு வேளை சாப்பாட்டிற்கே சிரமப்படுவதாகவும், தன் இரத்தத்தை மருத்துவ மனைகளுக்கு விற்று சமாளிப்பதாகவும் கூறினார். அவர்மேல் இரக்கப்பட்ட தொழிலதிபர், தன் நிறுவனத்திலேயே வேலை கொடுத்தார். சில மாதங்கள் கழித்து அவருடைய அலுவலகம் ஒன்றில் ஒரு தொழிலாளர் தகராறு நடந்து, அது முற்றி “கேரோ”, வேலை நிறுத்தம் வரை சென்றது. அந்தக் கலவரங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வம்பு செய்தது அவர் இரக்கப்பட்டு வேலையிலமர்த்திய அவருடைய முன்னாள் நண்பன் தான். அவன் மறுபடியும் தன் முந்தைய  “இரத்த தானம்” செய்யும் நிலைக்கு சீக்கிறமே திரும்பினான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. பழைய நண்பர்கள் தம் ஒப்பு நோக்கும் தன்மையால், “இவனுக்கெல்லாம் வந்த வாழ்வைப் பாருய்யா. என்னோட படிக்கும்போது என் பலப்பத்தை வாங்கித் தான் எழுதுவான். இப்ப இவன்கீழ நான் வேலை செய்யவேண்டிய நெலமை. ம்ம்ம்” என்று மருகுவரேயன்றி உங்களிடம் நன்றியுடையவராக இருப்பார்கள் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் மனித மனத்தின் செயல்பாட்டினை அறிந்தவரில்லை என்றே பொருள்!

உங்கள் குறைநிறைகளை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டுமானால் உங்களுடைய வெளிப்படையான  பகைவர்களை அணுகிக் கேளுங்கள். புட்டுப் புட்டு வைப்பார்கள். ஏனெனில் உங்கள் நன்மதிப்பைப் பெறும் நோக்கோடு அவர்கள் உரையாட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. உங்களை எந்த அளவுக்கு மனம் புண்படுத்தும்படி உரைக்கலாம் என்பதுதான் அவர்தம் உந்துதலாக இருக்கும். அந்த அணுகுமுறை கட்டாயம் உங்கள் மனத்தைக் காயப்படுத்தும் என்றாலும் அதையே உங்கள் உண்மை முகத்தைக் காண்பிக்கும் கன்னாடியாக ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏதேனும் தேர்தலில் நின்றால், உடனே உங்கள் எதிரிகள் கூர்மாவதாரம் எடுத்து உங்களைப் பற்றியும் உங்கள் பின்புலம் பற்றியும் நீங்களே அறிந்திராத பல உணமைகளை அகழ்வாராய்ச்சி செய்து வெளிக்கொணர்வார்கள்!

ஒரு அரசனின் எதிரி அவனிடம் “உன் வாய் சாக்கடைபோல் நாற்றமடிக்கிறது” என்று இகழ்ச்சியுடன் கூறினான். “இவன் கூற்று ஒருவேளை உண்மையாக இருக்குமோ? ஆனால் இதுவரை இந்த விவரத்தை யாரும் என்னிடம் கூறவில்லையே” என்று எண்ணிய அரசன், யாரிடம் கேட்டு இது விவரமாகத் தெளிவு பெறலாம் என்று யோசித்தான். தன் மந்திரி பிரதானிகளிடம் கேட்கலாமென்றால், அவர்கள் அரசனை மகிழ்வடையச் செய்வதற்காக, “மன்னா, தங்கள் திருவாய் மலர்த்தோட்டம்போல் மணக்கிறது. அந்த எதிரி மன்னனின் கூற்று விஷமத் தன்மையானது. உடனே அவன் நாட்டின்மேல் படையெடுப்போம். இந்த அவமானத்தை சகியோம்” என்று ஜால்ரா தட்டுவார்கள். இப்படியெல்லாம் யோசித்த மன்னன் கடைசியில் கற்பில் சிறந்தவளான தன் மனைவிடம் சென்று, “உண்மையிலேயே என் வாய் நாறுகிறதா” என்று வினவினான். “ஆம்” என்றாள் அவள். “ஏன் இத்தனைநாள் இதனை என்னிடம் கூறவில்லை?” என்று கோபமாகக் கேட்டான். அதற்கு அந்தப் பேதை, “எனக்கென்ன தெரியும்; ஆண்கள் வாயே இப்படித்தான் நாறும் என்று எண்ணினேன்” என்றாள்!

பகைவர் மூலமும் நாம் நன்மை பெறலாம் என்பதைத்தான் வள்ளுவர்,

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி பெறும்

என்ற குறளில் நடித்துச் சிரிக்கும் நண்பர்களைவிட, நேருக்கு நேர் நிற்கும் பகைவர்களால் பத்துக் கோடி  மடங்கு நன்மை விளையுமென்கிறார்.

உட்பகையை விட வெளிப்பகை மேல் என்பதைக் கண்டோம். வள்ளுவர் “பகைத்திறம் தெரிதல்” எனும் அதிகாரத்தில் “பகை நட்பாக் கொண்டொழுகும்” பண்பைப் பற்றி விளக்குகிறார். ஆனால் பகையும் நட்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா? தரம் பார்த்து இனம் கண்டு, அதனை யொத்து ஒழுகுதல் நம் கடன் அல்லவா!

Copyright © 2005 Tamiloviam.com - Authors