தமிழோவியம்
திரைவிமர்சனம் : கனாகண்டேன்
- மீனா

கடல் நீரை குடிநீராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்சி மாணவர் ஸ்ரீகாந்த். இவரது நெருங்கிய தோழி கோபிகா. கோபிகா தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளையின் நடத்தைப் பிடிக்காமல் திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஸ்ரீகாந்துடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வருகிறார். இளம் வயதிலிருந்தே நண்பர்களாக இருந்த இருவரும் தம்பதிகளாக மாற முடிவு செய்கிறார்கள்.

இதற்கிடையே ஸ்ரீகாந்தின் ஆராய்சி வெற்றி பெறுகிறது. இந்த முயற்சியின் முழுப்பயனும் மக்களை மட்டுமே போய் சேரவேண்டும் என்று ஆசைப்படும் ஸ்ரீகாந்த் அதற்கான வேலைகளில் இறங்குகிறார். ஆனால் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து யாரும் ஸ்ரீகாந்தின் முயற்சிக்கு ஆதரவளிக்க மறுக்கிறார்கள். இந்நிலையில் தனது கல்லூரித் தோழனான ப்ருதிவிராஜை சந்திக்கும் கோபிகா அவர் ஸ்ரீகாந்தின் ஆராய்சிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்கிறார். இதற்கு தாராளமாக உதவுவதாகக் கூறும் ப்ருதிவி அதற்கான டாக்குமெண்டுகளில் ஸ்ரீகாந்திடமிருந்து கையெழுத்து வாங்கிக் கொண்டு முதல் தவணையாக ஒரு தொகையைக் கொடுக்கிறார். இரண்டாவது தவணைப் பணத்தை வாங்கச் செல்லும் போதுதான் ப்ருதிவியின் கொடூரமான கந்துவட்டி தாதா முகம் ஸ்ரீகாந்திற்கும் கோபிகாவிற்கும் தெரியவருகிறது.  ஸ்ரீகாந்த் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தை தனியாரிடம் ஒரு பெரும் தொகைக்கு விற்றுவிட ப்ருதிவி முயற்சி செய்கிறார். இதற்கு மறுக்கும் ஸ்ரீகாந்திற்கும் கோபிகாவிர்கும் ஏகப்பட்டத் தொல்லைகளை உண்டாக்குகிறார். இதையெல்லாம் சமாளித்து ஸ்ரீகாந்த் எப்படி வெளியே வருகிறார் என்பதே மீதிக்கதை.

ஆராய்சி மாணவராக ஸ்ரீகாந்த். கோபம், காதல், வெறுப்பு என்று அனைத்துவித குணங்களையும் அருமையாக வெளிப்படுத்துகிறார். தன்னையும் தன் தாயையும் ஜாதிப் பெயர் சொல்லி கோபிகாவின் அண்ணன் திட்டும்போது மனதுக்குள் குமுறும் காட்சி - அருமை. அதே போல கோபிகாவுடன் காதல் காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். ப்ரிதிவியின் கபட எண்ணம் புரியாமல் முதலில் அவர் தனக்கு ஏகப்பட்ட உதவிகள் செய்வதாக நினைத்துக் கொண்டு அவருக்கு நன்றி செலுத்துவதும் - பிறகு அவரது சுயரூபம் புரிந்து கொண்டு அடித்து துவைப்பதும் - கடைசியில் அடிதடியால் பிரயொஜனம் ஒன்றும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு ப்ருதிவியை அவர் மடக்கும் விதமும் ஓஹோ! ஸ்ரீகாந்திற்கு இப்படம் நிச்சயம் ஒரு மைல்கல்.

வெறும் நடிப்பை மட்டும் நம்பிப் பயனில்லை என்று கோபிகாவிற்கு யார் சொன்னார்களோ படத்தில் படு தாராளமாய் நடித்துள்ளார். அதற்காக நடிப்பில் ஒன்றும் குறைவைக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். தனக்கு மாப்பிள்¨ளையாகப் போகிறவன் செய்யும் அயோக்கியத்தனத்தைப் பார்த்துக் குமுறி வீட்டை விட்டு வெளியேறும் காட்சியிலும் நல்லவன் என்று நம்பிய ப்ருதிவியின் சுயரூபம் தெரிந்து மருகும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பாராட்டப்படவேண்டியவர்களின் வரிசையில் ஒரு முக்கியமான இடத்திப் பிடிக்கிறார் வில்லன் ப்ருதிவிராஜ். பார்க்க ஹீரோ மாதிரியான தோற்றம். வில்லன்களுக்கு சாதாரணமாக தமிழ் சினிமாக்களில் இருக்கும் இமேஜைத் தூள் தூளாக்கியிருக்கிறார். முதல் பாதிவரை கதாநாயகனைப் போல - இரண்டாம் பாதி கொடூர வில்லனாக.. அப்பப்பா அசத்தியிருக்கிறார் மனிதர். அதிலும் கோபிகாவின் மீது அவர் காட்டும் கனிவும் பணிவும்... அருமை.

ஸ்ரீகாந்த் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரராக விவேக்.. டி.வி ஸ்டேஷனில் சாதாரண பியூன் ரேஞ்சிற்கு வேலை பார்க்கும் விவேக் தன் மனைவி மற்றும் மாமனாரிடம் கலைஞர், ஜெ போன்றவர்களை பேட்டியெடுப்பதாக விடும் புருடா சூப்பர்.. என்றாலும் படத்தில் கொஞ்சம் ஜாஸ்தியாகவே ஏ டயலாக்குகள்.. கவனம் தேவை விவேக்.. கோபிகாவின் அம்மாவாக கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் கதாபாத்திரம் வனிதா..

சுபாவின் வசனம் பாராட்டுதல்களுக்குரியது. சுனாமியின் கொடுமையை ஒரு வார்த்தையில் விளக்கும் விதமாக ஒரு சிறுமி ஸ்ரீகாந்திடம் தண்ணி மொத்தத்தையும் உறிஞ்சிடுங்கண்ணா.. அப்போதான் கடல் பொங்காது என்பது ஒரு சின்ன சாம்பிள். வித்யாசாகரின் இசை அருமை. 

ஒளிப்பதிவாளர்கள் டைரக்டராகும் வரிசையில் சேர்ந்திருக்கும் கே.வி. ஆனந்த் முதல் படத்திலேயே சபாஷ் பெறுகிறார். தொடர்ந்து இந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வாழ்த்துவோம். கடல் நீரை குடிநீராக மாற்றி மக்களின் தாகத்தைத் தீர்க்கும் அருமையான காட்சியைக் கனா காணவைத்திருக்கிறார். இது சீக்கிரமே நிஜமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

Copyright © 2005 Tamiloviam.com - Authors