தமிழோவியம்
தராசு : என்று தீரும் இந்தப் பிரச்சனை?
- மீனா

பருவ மழை பொய்ததால் இந்த வருடம் ஜூன் மாதத்தில் மேட்டூர் மற்றும் பெரியார் அணைகளை திறப்பது சாத்தியம் இல்லை என்று பொதுப்பணி த்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார். பக்கத்து மாநில அரசாங்கத்துடன் பேசி தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர இந்த ஆட்சிக்கும் வழியில்லை என்பதைத் தான் துரைமுருகன் தன் அறிக்கையில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

தங்களுக்குத் தேவையான இலாக்காவைப் போராடிப் பெறத்தெரிந்த தமிழக முதல்வருக்கு - வேண்டாதவர்களை ஒரு நிமிடத்தில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறியத்தெரிந்த தமிழக முதல்வருக்கு - தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையானவைகளை கேட்டு கேட்டு மத்திய அரசிடமிருந்து வாங்கத் தெரிந்த தமிழக முதல்வருக்கு - எதிர்கட்சியினருக்கு தன் கையில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விதவிதமாக குடைச்சல் கொடுக்கத்தெரிந்த தமிழக முதல்வருக்கு - தமிழக மக்களின் தாகம் தீர்க்க - ஜீவாதாரமான உழவுத்தொழில் நடக்கத் தேவையான தண்ணீரை மட்டும் மற்ற மாநிலங்களிலிருந்து பெறத் தெரியவில்லை. கேரளா மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களிலுமே ஆட்சி செய்பவர்கள் முதல்வரின் கூட்டணிக் கட்சியினர் தான். ஆனால் அவர்களிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீர் வாங்க நம் முதல்வரால் முடியவில்லை.

கருணாநிதியால் மக்களுக்குத் தேவையான தண்ணீரை அண்டை மாநிலத்திலிருந்து பெற்றுத்தர முடியவில்லை, எனவே அவரை பதவியிலிருந்து தூக்கியெறியுங்கள் என்று அறிக்கை மேல் அறிக்கையாக இன்று விடும் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா தான் முதல்வராக இருந்தபோது இந்த விஷயத்தில் என்ன உருப்படியாக செய்தார் என்று ஆராய்ந்தால் அவரும் ஒன்றுமே செய்யவில்லை. ஆக மொத்தத்தில் முன்னாள் இன்னாள் முத
ல்வர்கள் இருவருமே மக்களின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க தவறிவிட்டார்கள்.

மற்ற மாநிலங்களிலில் எல்லாம் எலியும் பூனையுமாக இருக்கும் ஆளும் கட்சி - எதிர்கட்சித் தலைவர்கள் தண்ணீர் பிரச்சனையில் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஒற்றுமை உணர்வுடன் செயல்படுகிறார்கள். ஆனால் நம் மாநிலத்திலோ ஆளும் கட்சி நடத்தும் கூட்டத்திற்கு போக மறுக்கும் எதிர்கட்சித் தலைவர் 'இப்படி ஒரு கூட்டம் நடந்ததே வெறும் கண்துடைப்பு..' என்ற ரீதியில் அறிக்கை விடுகிறார். இந்த லட்சணத்தில் இருவரிடை
யே ஒருமித்த கருத்து எங்கிருந்து உருவாகும்?

தங்கள் செல்வாக்கையும் அனுபவ அறிவையும் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் பழிவாங்கும் எண்ணத்தை மனதில் தேக்கிவைத்திருக்கும் முன்னாள் இன்னாள் முதல்வர்கள் தங்கள் அனுபவங்களையும் மத்தியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் உரிய முறையில் தமிழக மக்களின் உயர்விற்கு பயன்படுத்தினால், அது தமிழகம் அனைத்து நலன்களையும் பெற வழி வகுக்கும் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors