தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : அமீரகத்தின் குரல் - கேள்வி ஒன்று பதில் நான்கு
- சுரேஷ் பாபு

தமிழ் இணையத்தில் அமீரகத்தின் பங்கு சதவீதம் போட்டுப்பார்க்கும் அளவுக்கு அதிகமாக இல்லைதான். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பதிவர்கள் இருந்தாலும், உலகளாவிய அளவில் தென்படும் அத்தனை வகையான சிந்தனைகளுக்கும் ஒரு பிரதிநிதியாவது இங்கே இருப்பது ஆச்சரியமே.

ஒரே வகையான கேள்விகளுக்கு, வெவ்வேறு சிந்தனைத் தளங்களில் இருக்கும் பதிவர்கள் எப்படிப்பதிலளிப்பார்கள் என்று அறிய வந்த ஆசையில், கேள்விகளைத் தயாரித்துவிட்டு, ஆட்களைத் தேடினேன்.

வேறுபட்ட கண்ணோட்டங்களைப் பெற, இவர்களைத் தேர்வு செய்தேன். இணையத்தில் சுற்றுபவர்களுக்கு அறிமுகம் தேவைப்படாத பெயர்கள்தான்.

கவிப்பகைவனாக அறியப்பட்ட ஆசீப் மீரான்,
மெல்லிய உணர்வுகளை கவிதையாக்கும் ரசிகவ் ஞானியார்,
தமிழுணர்வை வெளிப்படுத்தும் எழுத்துகளைப் பதியும் முத்துக்குமரன்,
தன் கருத்தை நேர்மையாகவும் நேரடியாகவும் சொல்லும் ராமச்சந்திரன் உஷா.

Can you get a conflicting group than this ?

தமிழோவியத்துக்காக, ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாமா என்ற சிந்தனையை நடைமுறைக்காரணங்களுக்காக ஒதுக்கி, பெரும்பாலும் தொலைபேசியிலேயே இக்கலந்துரையாடலை நிகழ்த்த வேண்டி வந்தது.

இனி, கேள்விகளுக்கு:

1. இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகள் 2005-இல் ஏறத்தாழ 100 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதை வளர்ச்சி என்று கருதுகிறீர்களா? வீக்கம் என்று கருதுகிறீர்களா?

ஆசீப் :எண்ணிக்கை மட்டுமே வள்ர்ச்சியென்று கருதமுடியாது. அதற்காக இதை வீக்கமென்று ஒதுக்கி விடவும் முடியாது.  நல்லவை நிற்கும். அல்லவை தோற்கும். சாத்தான்குளத்தானும் ஒரு கட்டத்தில் புதிதாக வலைப்பதிய வந்தவன் தான். அதற்காக வீக்கமென்று ஒதுக்கி விட்டார்களா அல்லது வள்ர்ச்சி என்று ஏற்றுக் கொண்டார்களா? இதெல்லாம் காலத்தின் கட்டாயம் :-)

ரசிகவ்: முதலில் கேள்வியே என்னைக் குழப்புகின்றது. வலைப்பதிவுகள் 2005 ம் ஆண்டை விடவும் 100 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது வளர்ச்சிதானே தவிர எந்த வகையில் வீக்கமாகும் என்று தெரியவில்லை? இணையத்தில் தமிழைக்காணுவதே அதிசயமாகக் கருதப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது எங்கும் தமிழாகவே சுற்றிக்கொண்டிருப்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வளர்ச்சிதான்.

வலைப்பதிவுகள் என்பது ஒரு திறந்தவெளி அல்லது கட்டுப்பாடுகள் இல்லாத பத்திரிக்கை போலத்தான். தங்களுக்கு தோன்றியதை தைரியமாக சொல்லுகின்ற தைரியம் பத்திரிக்கைச் சுதந்திரம் இதில் இருப்பதாகவே உணர்கின்றேன். தினமலர் - குமுதம் போன்ற பத்திரிக்கைகள் வலைப்பதிவுகளை குறிப்பிட்டு சொல்ல ஆரம்பித்திருப்பது வலைப்பதிவின் வளர்ச்சியையே காட்டுகின்றது.  வலைப்பதிவர்கள் நாம் கண்காணிக்கப்பட்டு வருகின்றோம். உலகெங்கிலும் இத்தனை தமிழர்கள் அதுவும் தமிழை மறக்காமல் பல அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வது கண்டிப்பாக நாம் வளர்ச்சியை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதற்கு அத்தாட்சி.

இன்னும் சில காலங்களில் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் இருப்பது போல அனைவருக்கும் ஒரு வலைப்பதிவுகள் வந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.

முத்துக்குமரன்: தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை இணையத்தமிழின் வளர்ச்சியாகவே கருதுகிறேன்.பல புதிய அனுபவங்கள், புதிய பார்வைகள் கிடைக்க இது உதவியே இருக்கிறது.

உஷா: வளர்ச்சி என்றே கருதுகிறேன். வீக்கம் என்னும் நினைக்குமளவு நாள்தோறும்  புதிது புதியதாய்  வலைப்பதிவுகள் தோன்றினாலும் நாளாவட்டத்தில் சிறந்தவை மட்டுமே நிற்கும். வலைப்பதிவாளர்கள் சிறந்த படைப்புகளைக் கொடுத்து வாசகர்களின் பார்வையை தன்பால் இழுக்க  முயற்சிக்க வேண்டும்.


2. இலக்கியவாதிக்கும் எழுத்தாளனுக்கும் என்ன வித்தியாசம்?

ஆசீப் : இலக்கியவாதி எழுத்தாளனா இருக்கலாம். ஆனால், எழுத்தாளன் இலக்கியவாதியா இருக்கணும்னு கட்டாயமில்லை. 'இலக்கிய எழுத்தாளன்'னு சொல்றவங்க கூட நமக்குப் பேச்சு வார்த்தை இல்லை.:-)

ரசிகவ்: இலக்கியவாதி என்றால் அவனை எந்த தரத்தில் வைக்கின்றீர்கள். அல்லது எழுத்தாளன் என்றால் அவனை எந்த தரத்தில் வைக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. அரசியலில் இருப்பவன் அரசியல்வாதி - சமூக சிந்தனை உடையவன் சமூகவாதி இப்படி வாதிக்களை வகைப்படுத்துவதைப் போல இலக்கியத்தை பற்றி சிந்திப்பவன் அதனுடன் தொடர்புடையவனை இலக்கியவாதி எனலாமா..?

எழுத்தாளன் இலக்கியவாதியாய் இருந்தால் அவனுடைய படைப்புகள் வரவேற்கப்படும். ஆனால் இலக்கியவாதி எழுத்தாளனாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.

முத்துக்குமரன்: இலக்கியவாதிக்கும் எழுத்தாளனுக்கும் எந்த வித வித்தியாசத்தையும் நான் உணரவில்லை.

உஷா: எழுத்தாளர் என்றால் நேரத்தை வீணடிக்காமல் எழுதி, நாலு காசும் பார்ப்பார். தேவையில்லாமல் மற்ற எழுத்தாளர்களுடன் மல்லுக் கட்டமாட்டார்.  குழு சேர்த்துக் கொண்டு வம்பு சண்டைக்குப் போக மாட்டார்.  இலக்கியவாதி என்றால் வந்து.. வந்து தெரியாதுங்க.


3. கவிதை எழுதுபவன் கவிஞனா, கவிஞன் எழுதுவது கவிதையா?

ஆசீப் : சபாஷ்! இது கேள்வி. சுருக்கமா எப்படி பதில் சொல்ல முடியும் இதுக்கு?

கவிதைதான் கவிஞனை உருவாக்குகிறது.  கவிஞனான பிறகு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஏன், கவிஞன் எளக்கியவாதியாகக் கூட மாறிவிடலாம். எல்லாவற்றிற்கும் அடிப்படை கவிதைதான் :-(

ரசிகவ்: கவிதை எழுதுபவர்கள் எல்லாரையுமே கவிஞன் என்றுதான் அழைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கவிதை எழுதுபவன் கவிஞன்தான். ஆனால் எழுதுவது கவிதையாக இருந்தால். கவிஞன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தமக்கு மட்டும் புரியும்படி எதையாவது கிறுக்கும் கவிஞர்களின் கவிதைகளை கவிதை என்று ஏற்றுக்கொள்ள முடியாது அவர்கள் மற்றவர்களால் கவிஞர்கள் என்று அழைக்கப்பட்டால் கூட.

சமூகத்தின் பாதிப்புகள் - தன்னைசுற்றிய நிகழ்வுகள் - இயற்கையின் அதிசயங்கள் - இவற்றையெல்லாம் மற்றவர்கள் எளிதில் பரியும் வண்ணம் வார்த்தைகளில் கையாளுபவன் கவிஞன். யாருக்குமே புரியாமல் தன்னிலை விளக்கம் தந்து தமது கவிதைகளை புரியவைக்க கூடிய கவிதைகள் எழுதி தம்மை உயர்ரக இலக்கித்தரமாக எழுதுவதாய் நினைத்துக்கொண்டு எழுதப்படுகின்ற கவிதைகளால் யாருக்கும் எந்தப்பிரயோசனுமுமில்லை.

கவிதைகள் என்றால் வாசிக்கப்பட்டவுடன் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிய நடையில் இருக்கவேண்டும். சூழல்தான் கவிதைகளை உருவாக்குகின்றது.கவிதைகளுக்காக சூழலை நிர்ப்பந்தமாய் உருவாக்கிக் கொள்ளத் தேவையில்லை .

முத்துக்குமரன்: கவிதை எழுதுபவன்தான் கவிஞன். கவிதை படைக்க கவிஞனின் உழைப்பு தேவையாக இருக்கிறது.

உஷா: என்ன கேள்வி இது? முட்டையில் இருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா என்றுக் கேட்பதுப் போல! முதலில் நல்ல கவிதைகள் எழுதி கவிஞன் என்ற பட்டம் வாங்கிவிட்டால், பின் எழுதுவதெல்லாம் கவிதைதாங்க.


4. கலைச் சொல்லாக்கம் தமிழில் போதுமான அளவு வளர்ந்து வருகிறது என நினைக்கிறீர்களா?
 
ஆசீப் : நோ. டெஃபனட்லி  நாட்.  விய் ஷுட் இம்ப்ரூவ்

ரசிகவ்: தற்பொழுது தமிழ் வலைப்பதிவுகள் - தமிழ் யுனிக்கோடுகள் போன்ற தமிழ் மயமாக்குதலால் புதிய புதிய பிறமொழிச் சொற்களுக்கு கலைச்சொல்லாக்கம் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். கலைச் சொல்லாக்கலை ஆராய்ந்து அவற்றை அனுமதியளிக்கின்ற பொறுப்பு தமிழ் பாதுகாவலர்களுக்கு உண்டு.

கலைச் சொல்லாக்கத்தில் பெருன்பான்மையானோர் ஆர்வம் காட்டவில்லை எனினும் ஆர்வலர்களால் கூடிய அளவிற்கு வளர்ந்து வருகின்றது என்பதுதான் உண்மை.

முத்துக்குமரன்: கலைச்சொல்லாக்க வளர்ச்சி ஓரளவு வளர்ந்துதான் இருக்கிறது. ஆனால் முழுமை பெற இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது என்பதை மறுப்பதற்கியலாது

உஷா: இருக்கு, ஆனால் போதாது என்று நினைக்கிறேன்.


5. பின்னூட்டங்கள் தரத்தின் அளவுகோலா? தேவைப்படும் போதையா? தேவையற்ற திசைதிருப்பல்களா?

ஆசீப் : இது எதுவும் இல்லை. தெரிந்தவர்கள் வந்து 'அண்ணாச்சி நல்லா இருக்கியளா?' என்று நலம் விசாரிக்கும் இடம். தரமான பதிவுகள் விதிவிலக்கு.

ரசிகவ்: தேவைப்படும் போதை என்பதே என்னுடைய கருத்து. ஒரு பதிவு எழுதிவிட்டு அவைகள் கவனிக்கப்படுகின்றதா இல்லை கண்டுகொள்ளாமல் ஒதுக்கப்படுகின்றதா என்பதே பின்னூட்டங்களை வைத்துதான்.

பின்னூட்டங்கள் இடாமல் இருந்தால் படைப்புகள் எழுதியவரின் ஆர்வமும் ஊக்கமும் தடைபட்டுப்போகும். ஆகவே குறைகளோ அல்லது நிறைகளோ என்பதைப்பற்றி கவலையில்லை. பின்னூட்டங்கள் எப்படி வந்தாலும் நாம் கவனிக்கப்பட்டு வருகின்றோம் என்பதே படைப்பாளிகளின் எழுத்து ஆர்வத்தைத் தூண்டுகின்றது.

முத்துக்குமரன்:  பின்னூட்டத்தை அணுகும் விதத்தில் இருக்கிறது. தரமான வாசகனை பதிவு சென்றடையும் போது மட்டுமே தரமான பின்னூட்டங்களை தகவல்பரிமாற்றங்களை பெற முடியும்...

உஷா: ஆம், இல்லை :-) ஒரு அளவுக்கு தேவையே! ஆரம்பத்தில் பின்னுட்டம் பெறுவதில் இருக்கும் துடிப்பு,  போதை நாளாவட்டத்தில் படைப்பாளிக்கு குறைந்துவிடும். விட வேண்டும், இல்லை என்றால் குழு மனப்பான்மையில் ஒரு வட்டத்தினுள்ளே சுழல வேண்டி வரும். நல்ல எழுத்துக்களும் பிறர் கண்ணில் படமால் போக நேரிடும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors