தமிழோவியம்
தராசு : இறந்தவர்கள் வங்கிக் கணக்கு
- மீனா

இறந்த வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கு விஷயத்தில் அனாவசியமாக வாரிசுகளை வதைக்க வேண்டாம். குறைந்த அளவிற்கு ஆவணங்களை கேட்டு வங்கிக் கணக்கை பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கண்டிப்பான ஆலோசனை கூறியுள்ளது.

நம் நாட்டில் உயில் எழுதும் வழக்கம் கொண்டவர்களே சிலர் தான். அதிலும் வங்கிக் கணக்குகள் தொடர்பான விஷயங்களை நம்மில் பலரும் குடும்ப நபர்களுடன் பகிர்ந்து கொள்ளவே தயக்கம் காட்டுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை அவரது வாரிசுகளின் பெயரில் மாற்ற வங்கிகள் தற்போது ஏகப்பட்ட ஆதாரங்களைக் காட்டச் சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். வங்கிகள் தற்போது கேட்கும் பலதரப்பட்ட ஆவணங்களைச் சமர்பிப்பது என்பது பலருக்கும் நடைமுறையில் சற்று சாத்தியமில்லாத காரியமாகவே உள்ளது.

அரசியல்வாதிகளும் பெரும்புள்ளிகளும் வங்கிக் கணக்குகளில் செய்யும் ஏகப்பட்ட மோசடிகளை கொஞ்சம் கூட கவனிக்காத - அல்லது கவனித்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலையிலுள்ள வங்கி அதிகாரிகள் தாங்கள் வேலை செய்கிறோம் என்ற தோரணையைக் காட்டுவது ஏழைகளிடமும் நடுத்த குடிமக்களிடமும் தான். உயிருள்ளபோதே உங்களுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்குகளை யார் கையாளப்போகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் வாடிக்கையாளரிடம் கேட்டு எழுதி வாங்கிக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் நடைமுறைகள் இருந்தாலும் பெரும்பான்மையான வங்கிகளும் வாடிக்கையாளார்களும் இதைச் செயல்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் ஒருவர் இறந்த பிறகு அவரது வாரிசு என்று குறிப்பிட்டு யாராவது ஒருவர் வந்தால் அவரைக் குடைந்தெடுக்கும் அதிகாரிகள் அதிகபட்ச ஆவணங்களைக் கேட்டுத் துளைக்கிறார்கள். விளைவு ஒருவர் இறந்த பிறகு அவர் கணக்குகளை யார் கையாள்வது என்ற குழப்பமும் சட்டச் சிக்கல்களும்.

தற்போது ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள குறைந்த பட்ச ஆவணங்களை வைத்து வாரிசுகளிடம் கணக்கை ஒப்படைப்பது மிகவும் சுலபமான வழிமுறையாகத் தோன்றினாலும் மெத்தனத்திற்குப் பெயர் பெற்ற வங்கி அதிகாரிகள் இதையெல்லாம் நினைவில் வைப்பார்களா என்பதே நம் முன் எழும் மிகப்பெரிய கேள்வி.

பின்குறிப்பு : இந்த விஷயத்தில் சிக்கல்களையும் குழப்பங்களையும் தவிர்க்க வாடிக்கையாளர்களே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தனக்குப் பிறகு தன் வாரிசுகள் தன் கணக்கை கையாள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் தூண்டினால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். என்ன இருந்தாலும் பணம் நம்முடையதுதானே!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors