தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : அழைப்புப் பெறுதல் -2
- எழில்

 
இந்த வாரம், அலையல் (Roaming ) செய்து கொண்டிருக்கும் ஒரு செல்பேசிக்கு அழைப்பு வந்தால் அது எவ்வாறு அச்செல்பேசிக்குத் தெரிவிக்கப் படுகிறதென்று பார்ப்போம்.

வேறு ஊர்களுக்கு/மாநிலங்களுக்கு/நாடுகளுக்கு நீங்கள் செல்கையில் அங்கே உங்களது சேவை வழங்குனரின் வலையமைப்பு இல்லாமல் போகலாம் . ஆனால் அங்கே இருக்கும் பிற வலையமைப்புகளிடம் உங்களது சேவையாளர் ஒப்பந்தம் ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஏற்கனவே படித்தோமல்லவா? பிற வலையமைப்புகளில் எவ்வாறு ஒரு செல்பேசி தன்னைப் பதிவு செய்து கொள்கிறது என்பதையும் ஏற்கனவே கண்டோம். எனினும், அவற்றைத் திரும்ப ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருவோம்!

பிற வலையமைப்புகளில்/பிற நாடுகளில் நீங்கள் அலையல் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது இருப்பிடமானது அந்த இடத்தில் இருக்கும் (அந்த வலையமைப்பிற்குச் சொந்தமான) வருகை இருப்பிடப் பதிவேட்டில்( VLR)குறித்து வைக்கப்பட்டிருக்கும். உதாரணமாய் சென்னையில் பதிவு செய்த உங்கள் எண் லண்டனில் அலையல் செய்து கொண்டிருப்பதாய் வைத்துக் கொள்வோம் . லண்டனின் "வோடபோன்"எனும் சேவையாளரின் வலையமைப்பில் பதிவு செய்கிறது எனலாம் . அங்குள்ள வருகை இருப்பிடப் பதிவேட்டில் உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல் சேமித்து வைக்கப்படும். அதோடு உங்கள் செல்பேசிக்கு ஒரு தற்காலிக எண்ணும் வழங்கப்படும். இந்த எண்ணுக்கு செல்பேசி அலையல் எண் (Mobile Station Roaming Number , MSRN) என்று பெயர். பின்னர் சென்னையிலுள்ள உங்களது சொந்த வலையமைப்பைத்தொடர்பு கொண்டு " உங்களது செல்பேசி ஒன்று எங்கள் வலையமைப்பில் , இந்த அலையல் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது . அதற்கான அழைப்புகள் ஏற்படின் இங்கு திருப்பி விடவும்" என்று வோடபோன் வலையமைப்பு கேட்டுக்கொள்கிறது. சென்னையிலுள்ள உங்களது வலையமைப்பின் முதன்மை இருப்பிடப் பதிவேட்டில் (HLR) இந்த விவரம் ( இருப்பிடமும் அலையல் எண்ணும்) குறித்து வைக்கப்படுகிறது.

உங்கள் செல்பேசி எண்ணை உங்கள் நண்பர் அழைக்கிறார் எனலாம். அந்த அழைப்பானது ஆரம்பத்திலேயே பொதுத் தொலைபேசி வலையமைப்பினால் ( Public Telephone Network) லண்டனுக்கு அனுப்பப் படுவதில்லை. சென்னையிலிலுள்ள உங்களின் செல்பேசி வலையமைப்பிற்கே முதலில் அனுப்பப்படுகிறது . உங்களது வலையமைப்பின் நுழைவு இணைப்பகத்திற்கு (GMSC) அழைப்பு பற்றி அறிவிக்கப் பட்டவுடன் , நுழைவு இணைப்பகம் முதன்மை இருப்பிடப் பதிவேட்டைத் தொடர்பு கொண்டு உங்கள் செல்பேசியில் இருப்பிடத்தை கேட்கும். லண்டனில் நீங்கள் பதிவு செய்து கொண்டுள்ள விவரம் முதன்மை இருப்பிடப் பதிவேட்டில் தான் ஏற்கனவே குறித்து வைக்கப்பட்டுள்ளதே! இவ்விவரத்தை முதன்மை இருப்பிடப் பதிவேடு , நுழைவாயில் இணைப்பகத்துக்குத் தெரிவிக்கிறது. உங்களது செல்பேசியின் அலையல் எண்ணும் நுழைவாயில் இணைப்பகத்துக்குத் தெரிவிக்கப்படுகிறது . நுழைவாயில் இணைப்பகம் பின்னர் அந்த அழைப்பை லண்டனில் இயங்கும் வோடபோன் நெட்வொர்க்கிற்குத் தெரியப்படுத்துகிறது. அந்தச் செய்தியில் உங்கள் செல்பேசியின் அலையல் எண் குறிப்பிடப் பட்டு "இந்த எண்ணுக்கு அழைப்பு" எனத் தெரிவிக்கப் பட்டிருக்கும் .
லண்டனில் வோடபோன் நெட்வொர்க்கின் நுழைவாயில் இணைப்பகத்துக்கு இந்த அழைப்பு வந்து சேர்ந்தவுடன் , வழக்கம் போல் உங்களது செல்பேசி தேடப்படுகிறது . சென்ற பதிவில் நாம் பார்த்த தகவல் பரிமாற்றங்கள் மீண்டும் நிகழ்கின்றன. உங்கள் செல்பேசிக்கு அழைப்பு தெரியப்படுத்தப் பட்டு இறுதியில் பேச்சுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

அயல் நாட்டிற்கு அல்லது அயல் வலையமைப்புக்கு இம்மதிரியான அலையல் அழைப்புகள் (Roaming Calls) ஏற்படின் அதற்கான தனிக் கட்டணங்கள் அழைத்தவரைச் சார்ந்ததல்ல.  உங்களையே ( அதாவது அலையல் செய்து கொண்டிருக்கும் அழைக்கப் பட்டவரையே, Roaming party ) சாரும்.

ஆக, அழைப்பு அனுப்புதல் மற்றும் அழைப்பைப் பெறுதல் நிகழ்வுகளில் என்னென்ன தகவல்கள் பரிமாறப் படுகின்றன என்று தெளிந்தோம். அவ்வளவுதான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒரே இடத்திலிருந்து பேசினால் வேறு அலுவல்கள் இல்லை , ஆனால் நீங்கள் நகர்ந்து கொண்டே பேசுகிறீர்கள் (பேருந்திலோ /மகிழ்வுந்திலோ ) . அப்போது தள நிலையத்துக்கும் உங்களுக்குமிடையே உள்ள தொலைவு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். ஏற்கனவே பழைய பதிவுகளில் நாம் பார்த்த திறன் கட்டுப்பாடு மற்றும் நேர முன்னேற்பாடு ஆகியவற்றை நினைவு படுத்துங்கள் !

நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் தள நிலையத்தை விட்டு விலகிச் செல்கிறீர்கள் என்றால் தள நிலையத்திலிருந்து நீங்கள் பெறும் அலைகளின் திறன் குறைந்து கொண்டே போகும், செல்பேசிக்கும் தள நிலையத்துக்குமிடயே தூரம் அதிகரிக்கும். பேசும்போது தள நிலையத்தை நெருங்குகிறீர்கள் எனில் அலைகளின் திறன் அதிகரிக்கும் , தூரம் குறையும். தூரம் குறைந்தால் நீங்கள் அனுப்பும் தகவல் தள நிலையத்தை விரைவாக அடைந்து விடும். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே தள நிலையத்தைத் தகவல் அடைகிறதெனில், அது பிற தகவல்களைப் பாதிக்கும் என்று முன்பே கண்டோம். எனவே தள நிலையத்திலிருந்து விலகியோ/ நெருங்கியோ வருகையில் தனக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவோ/பின்னதாகவோ தகவல் அனுப்பும்படி தள நிலையம் செல்பேசியைக் கேட்டுக்கொள்ளுமென்றும் கண்டோம் . மேலும், தூரம் அதிகரித்தால் திறன் குறைகிறதல்லவா? அதனால் , தள நிலையத்திலிருந்து விலகிச் சென்றால் திறனை அதிகப்படுத்தவும் நெருங்கி வந்தால் திறனைக் குறைக்கவும் தள நிலையம் செல்பேசியைக் கேட்டுக்கொள்ளும் என்றும் ஏற்கனவே கண்டோம் . இதெல்லாம் எப்போது, எவ்வாறு நிகழ்கிறது?

பேச்சுப் பரிமாற்றம் நிகழ்கையில் ஏதேனும் குறிப்புத் தகவல்கள் (Signalling Messages) அனுப்ப அவசியம் ஏற்பட்டால் பேச்சினிடையே ஒரு நேரத்துண்டில் குறிப்புத் தகவல்கள் அனுப்பப் படலாம். இம்மாதிரி பேச்சினிடையே குறிப்புகள் சுமந்து செல்லும் நேரத்துண்டுக்கு உப கட்டுப்பாட்டுத் தடம் ( Associated Control Channel) என்று பெயர். நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் , தள நிலையத்திலிருந்து பெறும் தகவல்களில் திறன், சுற்றியுள்ள பிற தள நிலையங்களிலிருந்து தான் பெறும் ஒலியலைகளின் திறன் ஆகிய தகவல்களை பேச்சினிடையே இந்த உப கட்டுப்பாட்டுத் தடத்தில்தான் செல்பேசி தள நிலையத்துக்கு அறிவிக்கிறது. இம்மாதிரியான தகவல்கள் சுமந்து செல்லும் உப கட்டுப்பாட்டுத் தடத்துக்கு மெதுவான உபதடம் என்று பெயர் ( Slow Associated Channel , SACCH). இவ்வாறு செல்பேசி அனுப்பும் அளவீட்டுத் தகவலின் (Measurement Report) அடிப்படையிலேயே தள நிலையம் , செல்பேசி அருகிலுள்ளதா அல்லது விலகிச் செல்கிறதா என்று தெளிகிறது. தன்னை விட்டு விலகிச் சென்றால் , ஒலிபரப்புத் திறனை அதிகரிக்கச் சொல்கிறது. நெருங்கி வரின், திறனை குறைக்கச் சொல்கிறது. நேர முன்னேற்பாடும் இதன் அடிப்படையில்தான்.

இந்த நேரத்துண்டு சுமார் 500 மைக்ரோ வினாடிகள் நீடிக்கக் கூடியது. இந்தத் தகவல் முடிந்ததும் அடுத்த நேரத்துண்டில் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் பேச்சுத் தகவல் தொடர்ந்து அனுப்பப் படும். ஒரு குறித்த நேரம் (மில்லி வினாடிகள்) கழித்து மீண்டும் இந்த உப கட்டுப்பாட்டுத் தடத்தில் குறிப்புத்தகவல்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு குறிப்புத் தகவல்கள் மூலம் உங்களது இருப்பிடம் தொடர்ந்து தள நிலையத்துக்குத் தெளிவு படுத்தப்படுகின்றது.

சரி, நீங்கள் பேசிக்கொண்டே நகர்ந்து செல்கையில் தள நிலையத்தின் திறன் முற்றிலும் குறைந்து போய் அடுத்த தள நிலையத்திலிருந்து வரும் தகவல்களின் திறன் அதிகரித்தால் என்னவாகும்? எதிர்முனையில் பேசுபவரின் பேச்சுக்கள் நீங்கள் தற்போது இணைக்கப்பட்ட தள நிலையத்தின் மூலமே உங்களைச் சேருகின்றன. அத்தள நிலையத்திலிருந்து வெகு தொலைவு சென்று விட்டால் தகவல் பரிமாற்றம் தொடர்ந்து நிகழ வழி செய்ய வேண்டும். உங்கள் இணைப்பு துண்டிக்கப்படா வண்ணம்,  உங்களுக்கு அருகிலுள்ள தள நிலையத்துக்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் மாற்றித்தரப்பட வேண்டும்.

இது எவ்வாறு நிகழ்கிறது? அடுத்த வாரம் பார்ப்போமா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors