தமிழோவியம்
மஜுலா சிங்கப்புரா : நெஞ்சில் எண்ணியிருப்பது அறிகுவாய்!
- எம்.கே.குமார்

பண்டைய காலம் தொட்டு செல்வம் கொழிக்கும் நாடாக விளங்கி வந்த இந்தியாவிலிருந்தும் அரேபிய நாடுகளிலிருந்தும் வாணிபத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்த சீனாவுக்கு கடல்வழி செல்ல, மிக ஏற்றதாய் இருந்த நேர்வழி சிங்கப்பூர் வழிதான். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் ஐரோப்பா, அரேபிய நாடுகளிலிருந்தும் சீனாவுக்கு வியாபாரம் செய்ய கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, சிங்கப்பூர் தொட்டுச் செல்லும் வழிதான் எளிதான வழியாக வணிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விளங்கி வந்திருக்கிறது.

மூன்றாம் நூற்றாண்டில் மலாயா மற்றும் இந்தோனேசிய பகுதிகளுக்கு சுற்றுபயணம் வந்த சீன யாத்திரிகர் ஒருவர் தமது குறிப்பில், சிங்கப்பூரை "பு லூ சுங்" (தீபகற்பத்தின் தென்கோடித்தீவு) என்று முதன்முறையாக ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கிறார். இங்கு இவர் 'தீபகற்பம்' என்று குறிப்பிடுவது 'மலாயா'வையாகும். மலாயாவின் வால்பகுதி போன்று அதன் அடியில் இருக்கும் சிறிய தீவுதான் சிங்கப்பூர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அல்லவா!

மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இதன் வழியாக வாணிபம் நடந்து வந்திருந்தாலும் வியாபரத்தின் முக்கியத் தளமாக இது மாறியது ஸ்ரீவிஜயப்பேரரசின் ஆட்சியின் போதுதான். ஏழாம் நூற்றாண்டில் சுமத்ரா தீவின் 'பாலெம்பெங்' நகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீவிஜயப் பேரரசு, மற்ற நாடுகளுடனும் தமது மற்ற தீவுகளுடனும் வியாபாரத்தில் சிங்கப்பூரை முக்கிய இடமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது.

சிங்கப்பூருக்கென்று அப்போது நிலையான பெயர் என்ற ஒன்று இல்லாத நிலையில் கி.பி 1349ல் சிங்கப்பூருக்கு வந்த சீன யாத்திரிகர் 'வாங் தயூவான்' சிங்கப்பூரை, "தான் மாஸி" (Tan-ma-hsi) என்று தனது புவியியல் கையேட்டில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தீவில் அப்போது ஏராளமான கடற்கொள்ளையர்கள் இருந்ததாகவும் வியாபாரம் செய்வதற்காய் மேற்கு நோக்கு செல்லும் சீனக்கப்பல்களை விட்டுவிட்டு பொன்னும் பொருளும் கொண்டு அவைகள் திரும்பி வரும்போது அவைகளைத்தாக்கி கொள்ளை அடித்ததாகவும் குறிப்பிடுகிறார். கி.பி 1330 களிலும் இவர் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார் என்றும் 'அப்போதே சீனர்கள் இங்கு வாழ்ந்ததாக' அவர் குறிப்பிடுவதாகவும் சில புத்தகங்கள் சொல்கின்றன.

இக்காலத்தில் எழுதப்பட்ட அரேபிய குறிப்புகளிலும், இவ்வட்டாரத்தில் 'மாயித்' என்றொரு தீவு இருந்ததாகவும் கப்பல்களில் வாணிபத்திற்காய் சீனாவுக்குச் செல்லும் போது 'கருப்பு நிறம் கொண்ட கடற்கொள்ளையர்கள் விதவிதமான அம்புகளுடன் (அவைகளை விஷத்தில் வேறு தடவியும்) கூட்டம் கூட்டமாக கப்பல்களைத் தாக்குவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். 'மாயித்' எனப்படும் அத்தீவும் சிங்கப்பூராய் இருக்கலாம்.

இக்கடற் கொள்ளைகளெல்லாம் நடந்த வருடம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும். பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழன் வந்து படையெடுத்துச்சென்றபின் இப்பகுதியில் நிலையான அரசு எதுவும் அமையாமல் ஆங்காங்கு சிற்றரசுகளும் கொள்ளையர்களுமாய் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அப்போது நடந்தவைதான் இக்கொள்ளைகளும் கொடுமைகளும்.

சிங்கப்பூருக்கு அப்போது இருந்த பெயர் 'துமாசிக்' என்பதாகும். 'துமாசிக் (Temasek)' என்பது 'கடல் நகரம்' எனப் பொருள்படும். ஜாவானிய வரலாறான "நாகரக்ரெயிட்டகமா" (Nagarakretagama') என்ற குறிப்பில் சிங்கப்பூருக்கு 'துமாசிக்' என்ற அந்த புதுப்பெயரும் மக்கள் அப்போது இங்கே வாழ்ந்து வந்தனர் என்ற செய்தியும் காணப்படுகிறது.

இவ்வாறாக ஆரம்பிக்கும் இதன் வரலாறு 'சிங்கபுரம்' என்ற பெயர் பெற்ற வகையில் பல கருத்துகளைக் கொண்டிருக்கிறது. கிழக்காசியாவில் கடல் ஆதிக்கத்தில் முன்னோடியாய் குறிப்பிடத்தகுந்து விளங்கியவர்கள் கலிங்கர்கள். "சின்ஹபாகு" என்பது கலிங்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு மன்னனின் பெயராகவும் அப்பெயரில் ஒரு ஊரும் கலிங்கப்பேரரசில் இருந்திருக்கிறது. அவர்களே 'துமாசிக்' என்ற இத்தீவுக்கு 'சின்ஹபுரம்' என்று பெயர் சூட்டி நாளடைவில் அது 'சிங்கபுரம், சிங்கப்பூர்' என்று வந்திருக்கலாம் என்ற கூற்றும் இருக்கிறது.

ஆனால் தென்கிழக்காசியாவில் மிகப்பெரும் வெற்றிகளை பெற்றவன் பல்லவமன்னன் சிம்மவர்மன். 'சிம்மம்' என ஆரம்பிக்கும் இவன் பெயரிலிருந்தும் 'சிம்மபுரம்' அல்லது 'சிங்கபுரம்' தோன்றியிருக்கலாம் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

இவற்றிற்கு மாறாக, கொஞ்சம் நமபகத்தன்மை கொண்டதாய் ஒரு தகவல் 'மலாய மன்னர்களின் வரலாறு' (Sejara Melayu) என்ற நூலில் கிடைக்கிறது. 'மலாயாவின் தென் பகுதிக்கு வந்த சுமத்ராவின் இளவரசனான "ஸ்ரீ திரிபுவனன்" என்பவன், அப்பகுதியில் உலவிக்கொண்டிருந்த ஒரு சிங்கத்தைப் பார்த்து இதற்கு "சிங்கபுரம்" என்று பெயர் சூட்டியதாகவும் ஆக, துமாசிக்கிற்கு சிங்கப்பூர் என்ற பெயரைத் தந்தவன் இவனேதான்' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்னொரு வரலாற்று ஆசிரியரான 'டான் சுவான் இம்', 'பாலெம்பங்கைச் ('பாலெம்பெங்' சுமத்ராவின் ஒரு முக்கிய நகராகும்!) சேர்ந்த இளவரசனான "சங் நீல உத்தமன்" என்பவன் வந்து 'துமாசிக்' என்ற பெயரைச் சிங்கப்பூர் என்று மாற்றியதாகக் கூறுகிறார். இவர் கூறும் 'சங் நீல உத்தமனும்' 'ஸ்ரீ திரிபுவனனும்' எந்த நாட்டிலிருந்து வந்தார்கள் என்பதில் பிரச்சனை ஏதும் இல்லாமல் இரண்டும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் பெயரில் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.

இவற்றுக்கிடையே 'சர் ரிச்சர்ட் வின்ஸ்டட்' என்பவர் தம்முடைய "Impression of the Malay Peninsula in Ancient Times" என்ற நூலில் மிக முக்கியமான ஒரு தகவலை முன்வைக்கிறார், அது, "துமாசிக் எனப்படும் இத்தீவுக்கு பெருமைமிகு பெயரான 'சிங்கபுரம்' என்பதைத் தந்தவன் 'வீர இராஜேந்திரன்' ஆவான். இவனுக்கு நீல உத்தமன் என்ற பெயரும் இருந்தது." என்பதாகும் அது!

ஆக, வீர இராஜேந்திரன் என்ற மன்னன் சிங்கபுரம் என்று பெயர் சூட்டியது உண்மையாயிருக்கலாம் எனவும் பிற்காலத்தில் அவனது பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் எனவும் வரலாற்று அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இந்நிலையில் 'வீர இராஜேந்திரன்' என்ற அந்த அரசன் யார் தெரியுமா? கடந்த வாரம் சொல்லப்பட்ட இராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் ஆவார் அவர்! கி.பி 1068ல் கிழக்கத்திய நாடுகளுக்கு படையெடுத்து வந்தவர்!

பின்னாளில் இவர் புத்த மதத்தை தழுவியதும் கடாரத்து அரசனின் ஆட்சி, யாராலோ முறியடிக்கப்பட்டபோது உடனே கடாரத்துக்குச் சென்று அதை வெற்றிகொண்டவன் என்றும் அதனாலேயே 'கடாரம் வென்றான்' என்ற பெயரும் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் நிரூபிக்க முயல்கிறார்கள். கடாரத்தை வென்றுவிட்டு திரும்பும் வழியில் சிங்கத்தைப்பார்த்து 'சிங்கபுரம்' என்று பெயர் இட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். "கடாரம்" என்று அழைக்கப்பட்ட அப்பகுதிதான் "கெடா" மாநிலம் என்பதாக இன்று மலேசியாவில் இருந்து வருகிறது.

எல்லாம் சரி தான், 'கண்ணில் சிக்கும் அளவுக்கு சிங்கம் அப்போது சிங்கப்பூரில் சாதாரணமாக நடை பயின்றதா' என்று கேட்டால், 'இல்லை, சிங்கப்பூரில் எப்போதும் சிங்கங்கள் வாழ்ந்ததே இல்லை; புலியைப் பார்த்து அவர் சிங்கம் என்று சொல்லியிருக்கலாம்!' என்கிறது ஒரு தகவல். சிங்கபுரம் என்று பெயர் வந்தது சரி! அதற்குப்பின் என்னானது அது?

(தொடரும்)


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

முதல்வருக்கு கல்வீச்சு.!

இந்தியா, ஜூன் 1எ. இந்தியாவின் வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் நேற்று மூன்று முக்கியப்போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் போது முதலமைச்சரின் மீதும் மந்திரிகளின் மீதும் கற்கள் வீசப்பட்டன.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன், ராஜஸ்தானின் வடக்கு மாவட்டம் ஒன்றில் மிகப்பெரிய பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய பிறகு பாலம் கட்டும் வேலைகள் ஆரம்பித்தன. பள்ளம் தோண்டும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்த கட்டிட ஒப்பந்தக்காரர்கள், பாலம் கட்டும் வேலையை ஆமை வேகத்தில் செய்தனர்.

பத்தாண்டுகள் கடந்த நிலையில், அடிக்கல் நாட்டியதோடும் பள்ளம் தோண்டியதோடும் அப்பாலம், கிடப்பில் போடப்பட, அப்பகுதி மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் தவித்து வந்தனர். இதற்கிடையில் நேற்று அப்பகுதிக்கு வந்த முதல்வர் மீது அப்பகுதி மக்கள் திடுமென்று கற்களை வீசியும் தர்ணா செய்யவும் ஆரம்பித்தனர். போலீஸ் தலையிட்டு நிலைமையைச் சரி செய்தது.

ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் கட்டிய பாலம் உடைந்து உருத்தெரியாமல் அழிந்துவிட்டதாகவும் மீண்டும் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவதற்காகவே மீண்டும் முதல்வர் அங்கு வந்ததாகவும் கூறப்பட்டதையடுத்து மக்கள் அச்செயலில் ஈடுபட்டதாக ஒருவர் கூறினார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors