தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : சமுதாய மாற்றமும் உடல் நலனில் அதன் பாதிப்புக்களும்
- பத்மா அர்விந்த்

சமுதாயத்தில் மாற்றங்கள் பலவகையில் ஏற்படுகின்றன. அரசியல் மாற்றங்கள், கொள்கை மாற்றங்கள் , வரிகள், தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் வந்த மாற்றங்கள், அறிவியல் சாதனைகளால் வந்த மாற்றங்கள் இவை யாவும் மனிதனின் வாழ்க்கையை மாற்றுகிறது. வாகனங்கள் கண்டு பிடிக்க பட்டதும், மயக்க மருந்து கண்டுபிடிக்க பட்டதும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கின.

மனிதன் பல வகை மாற்றங்களுக்கு பழக்கமானவன் என்றாலும் புதிதாக நம்முடைய தினப்படி வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் என்றால் அது மன அழுத்தத்தை, தகைவை அதிகரிக்கிறது. நீங்கள் தினமும் அலுவலகம் செல்லும் சாலையை செப்பனிட மூடிவிட்டார்கள். நீங்கள் வேறு பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும். பாதை உங்களுக்கு தெரிந்தாலும், மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றுவதை காண்பீர்கள்.

மாற்றங்கள் என்பது எப்படி நமது உடல் நலனை பாதிக்கும் வகையில் செயல்படுகிறது? ஒரு சமுதாயத்தின், சூழ்நிலையால் நல்ல உடல் நலன் குறித்தான பழக்க வழக்கங்களில் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றால், அதே போல  சில சமயம் தீய பழக்கங்களிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியும். சூழ்நிலையும் சமுதாயமும் ஒருவரின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களின் மூலம் உடல் நலனில் மாற்றத்தை ஏற்படுவதை சமுதாய மாற்றம் என க்கூறலாம். 1977 இல் சல்ட்மன், டன்சன் என்ற இரு உளவியல் விஞ்ஞானிகள் சமுதாய மாற்றத்தை பற்றி ஆராய்ந்து  சமுதாய மாற்றம் என்பது ஒருவரின் பார்வையில் அவரது சூழ்நிலையில் என்ன மாற்றங்கள் தோன்றுகின்றனவோ அதுவே அவரது உடல் நல பழக்க வழக்கங்களில் தோன்றும் என்று கூறினர். சமீப காலமாக பலரும் காய்கறிகள் உண்பது உடல் நலனுக்கு நன்மை பயக்கும் என்று தொலைகாட்சி, பத்திரிக்ககள் மூலம் அறிந்து அதிக காய்கறி உணவை நாடுகின்றனர். இந்த மாற்றம் ஆரம்பத்தில் பிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் சுற்று புரத்தில் உள்ளவர்கள் காய்கறிகளை தேர்ந்தெடுப்பதையும், கடைகளில் காய்கறிகள் நறுக்க பட்டு கிடப்பதும் இதை எளிதாக்குகிறது. இது ஒருவகையில் சமுதாய மாற்றமே ஆகும்.

அதே போல சமீப காலத்தில் இயற்கை உணவுகளும் பிரபலமடைய தொடங்கி இருக்கின்றன.

உடல் பயிற்சி செய்வதும் ஒரு நாளைக்கு 10000 அடிகள் எடுத்து வைப்பதும் உடல் நலனுக்கு மிக அவசியம் என்று ஊடகங்கள் மூலம் மருத்துவர்கள் பெருமளவில் சொன்னாலும், உங்களுக்கு ஆர்வமிருப்பினும், வேலை நேரம், குழந்தைகளுடன் செலவிடும் நேரம் இவற்றிற்கு இடையே பல தூரம் சென்று உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்திருக்கும்.ஆனால் இதுவே ஒரு சமுதாயத்தில் பலருக்கும் விருப்பம் இருப்பின், பல புதிய உடற்பயிற்சியகங்கள் வருவதோடு, பலர் செய்வதை கண்டு உங்களுக்கும் விருப்பம் வரும். உங்கள் நண்பர்களோடு அல்லது அணடை அயலில் உள்ளவரோடு சென்று செய்வது மனதிற்கும் ஒரு வித புத்துணர்வை தரும்.

மாற்றம் புதுமையாய் இருக்கும் போது மனிதனுக்கு ஒரு வித அச்சம் இருக்கிறது. தெரியாத ஒன்றை முதலில் பழகும் போது தவறிழைத்து விடுமோ என்ற பயம் வயதானவருக்கு (adults) அதிகம்.  நம்மை  முட்டாள் என்று சொல்லிவிடுவார்களோ அல்லது எள்ளி நகையாடுவார்களோ என்ற பயமும் தோன்றுகிறது. இதைப்போலவே தொழில் நுட்ப பொருட்களை வாங்குவோரில் உடனடியாக வாங்குபவர்களைத்தவிர (early adopters) பெரும்பாலானவர்கள் பயன் படுத்தும் முறை எளிதா, மற்றவர்கள் உபயோகித்திருக்கிறார்களா என்பதை பற்றி தெரிவது மட்டுமின்றி அதை பயன்படுத்தும் முறையை காட்டி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொழில் நுட்ப துறையின் உதவி உண்டு என்றும் தெரிந்தால் வாங்கும் போது ஒரு நிம்மதி மனதில் பரவும். அதான் technical support உண்டே என்று சொல்வதையும் கேட்டிருக்கலாம். இதே போல மருத்துவ உலகிலும் புதிதாக MRI வந்த போது இருந்த அச்சம் இப்போது பலருக்கு இல்லை. மார்பக நிழற்படம் எடுத்துக்கொண்டால் புற்று நோய் வருவதன் முன்னே தெரிந்து கொள்ள உதவும் என்று சொன்னாலும் அதன் மேல் ஒரு நம்பிக்கை வரும் வரை யாரும் எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை. இதே பக்கத்து வீட்டு பெண் அல்லது தோழியர் ஒருவர்” நான் கூட போன வாரம் mammogram எடுத்துக்கொண்டேன். ஒன்ணுமே இல்ல இரண்டு நிமிடம்,அதிக வலி இல்லை“ என்று சொல்வாரே ஆனால் எடுத்துக்கொள்ள செல்லும் பெண்ணுக்கு அது ஒரு நம்பிக்கையை தரும்.

ஒரு ஊரைவிட்டு இன்னொரு ஊருக்கு செல்லும் போது மனம் மாறுதல்களுக்கு நம்மை அறியாமலே தயாராகிறது. இந்த மாற்றங்களை தெரிந்து கொள்வது ஏன் அவசியம் என்று கேட்பீர்களே என்றால், உங்கள் மனம் மாற்றங்களை எப்படி எடுத்துக்கொள்கிறது என்று தெரிந்தால் உளவியல் நிபுணர்கள் உங்களின் பழக்க வழக்கங்களில் எளிதாக மாற்றம் கொண்டு வரலாம். அதேபோல உங்களாலும் சில பழக்கங்களை மாற்றி க்கொள்ள முடியும்.

தனிமனிதனின் மாற்றங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பல நாள் திட்டமிட்டு வருவது, இன்னொன்று திடீரென சூழ்நிலையால் வருவது.திட்டமிட்டு வரும் மாற்றம் பலநாட்கள் திட்டமிட்டு மருத்துவரிடமும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி வருவது.

மற்றொன்று அரசின் ஒரு கொள்கை மாற்றத்தால் திடீரென நடைமுறைக்கு வரும் மாற்றம்.

சமுதாய மாற்றங்கள் மூன்று வகைகளில் வரக்கூடும்.

1. திட்டமிட்ட அல்லது திட்டமிடாத தனிமனிதனின் மாற்றங்கள்
2. மேலிருந்து கீழ் திணிக்க படும் மாற்றங்கள், கீழிருந்து மேலாக வரும் மாற்றங்கள்
3. மாற்றங்களின் பல படிகளும்  அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளும்

இந்த மாற்றங்களையும் அவை தரக்கூடிய மன அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் அடுத்த வாரம் எழுதுகிறேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors