தமிழோவியம்
கவிதை : வான்மதியோடு சில வார்த்தைகள்
- சத்தி சக்திதாசன்


வானத்திலே ஊர்வலம்
வான்மதியே வண்ணநிலவே
வருடங்கள் பலவாகியும்
வண்ணம் மாறாத ரகசியம்
வனிதை நீ கொண்டதென்ன

வழியிலே துயரம்
விழியிலே நீர்
வாழ்க்கையில் ஏமாற்றம்
வரிசையாக கொண்டவர்கள்
விரிசல் இன்றி
வாழ்வதற்கு
வான்மதி உன்
வகை என்ன சொல்லாயோ ?

நாள்தோறும் தன்னுடம்பைத் துவைத்து
நலிந்திடும் என் தோழன்
நன்றாய் வாழும் நாள்
நாளை வருமோ என்றவன் ஏங்கி
நினைவுகள் வேக வாழும் வாழ்க்கை
நீங்கி செழிப்புறும் வேளை
நிலவு உனக்கு
நிச்சயமாய் வருமென்று தெரியுமா ?

இன்றைய வேதனை
இல்லாத செல்வங்கள்
இருப்புக்களின் வேதனைகள்
இவைதானே
இல்லாதவன் வாழ்க்கையில்
இருக்கின்ற நிகழ்வுகள்
இருட்டை ஒளியாக்கும்
இரவின் ராணியே
இதற்கொரு விடையுண்டோ ?

காதலுக்கு சாட்சி நீ
கனவுகளின் கவிதை நீ
கவிதைகளின் மூலம் நீ'

காதலைப் பகருவோரின் சத்தியமும்
காதலை நுகருவோரின் சாட்சியமும்
காதலில் கருகுவோரின் காவியமும்
காணும் வான்மதியே வகை சொல்வாய்

வான்மதியோடு நான்
வார்த்தையாடும் வேளையதில்
வருத்துகின்ற துன்பமெலாம்
வந்தவழி சென்றுவிடும்
வான்மதியே உன்னோடு
சில வார்த்தைகள் .......

Copyright © 2005 Tamiloviam.com - Authors