தமிழோவியம்
திரைவிமர்சனம் : சிவாஜி
- மீனா

Rajiniஅமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்து அதில் சம்பாதித்த பல கோடிகளுடன் இந்தியாவுக்கு வரும் ரஜினி,  இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவி ஏழைகளுக்கு உதவ எண்ணுகிறார். கல்வித்தந்தை என்ற ரீதியில் அழைக்கப்படும் சுமனை அணுகி தனக்கு உதவுமாறு கூறுகிறார். எங்கே ரஜினிக்கு உதவி செய்தால் அது தனக்கே ஆபத்தாக முடியுமோ என்று நினைத்து வஞ்சகமாக அவருக்கு குடைச்சல் கொடுக்க நினைக்கிறார் சுமன்.

ஒரு கட்டத்தில் சுமனின் சுயரூபத்தை புரிந்து கொள்ளும் ரஜினி நேரடியாக தானே அரசு அலுவலர்களிடம் பேசி தனது கல்லூரிக்கு அனுமதி வழங்குமாறு கேட்க - அங்கிருந்து ஆரம்பிக்கிறது அதிகாரிகளின் லஞ்ச பேரம். முதலில் மறுக்கும் ரஜினி வேறு வழியின்றி லஞ்சம் தர சம்மதிக்கிறார். கல்லூரிக் கட்டிடமும்  வேகமாக வளர ஆரம்பிக்கிறது ரஜினியின் வேகத்தைப் பார்த்து ஆடிப்போகும் சுமன் அமைச்சர் மூலம் ரஜினிக்கு தொல்லை கொடுக்க எண்ணுகிறார். எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது என்று சொல்லும் அமைச்சர் மீது கோபம் கொண்டு ஆட்சியையே மாற்றுகிறார் சுமன். புதிதாக வரும் அமைச்சர் சுமனுடைய தாளத்திற்கு தப்பாமல் ஆட - தான் சம்பாதித்த பணம் அத்தனையும் இழந்துவிட்டு தெருவிற்கு வரும் நிலைக்கு தள்ளப்படுகிறார் ரஜினி.

ஓட்டாண்டியாக நிற்கும் ரஜினியின் மீது பரிதாபப்பட்டு ஒரு ரூபாய் சுமன் பிச்சை போட - அந்த ஒரு ரூபாயை வைத்தே வாழ்வில் உயர நினைக்கிறார் ரஜினி. சுமன் உள்ளிட்ட பல பணமுதலைகளின் கறுப்புப் பணத்தைக் கொண்டே தன் சாம்ராஜ்யத்தை நிறுவ நினைக்கும் ரஜினி ஒரு கட்டத்தில் சுமன் மற்றும் அவரது கூட்டாளிகளால் சாவின் விளிம்பிற்கே செல்கிறார். தன் சாதுர்யத்தால் எப்படி அவர்  வில்லன்களை எதிர்த்து வெற்றி வாகை சூடுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

Rajini, Shreyaஎத்தனை ஆண்டுகளானாலும் சரி - எத்தனை புதுமுக ஹீரோக்கள் வந்தாலும் சரி - ரஜினி ரஜினிதான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். நடை, உடை, ஸ்டைல், சண்டை காட்சிகள் என்று அனைத்திலும் அசத்துகிறார். நேற்று வந்த பொடிசுகளே டன் கணக்கில் பஞ்ச் டயலாக் பேசும் போது சூப்பர் ஸ்டார் அடக்கி வாசித்திருப்பது அசத்தல். ஆனாலும் " நீங்களா எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய மாட்டீங்க, யாராவது செய்ய வந்தா கரெக்டா அதை கெடுக்க வந்திருவீங்க..." என்ற ஒரு வரியிலேயே ரசிகர்கள் ஆர்பரித்துத் தீர்க்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலையை விலாவாரியாக விவரிக்க இந்த ஒற்றை வரி போதும்.. படம் முழுக்க அங்கங்கே காமெடிச் சிதறல்கள் இருந்தாலும் ஸ்ரேயாவுடனான காதல் காட்சிகளில் ஒரே நாளில் வெள்ளையாக ரஜினியும் விவேக்கும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் சூப்பர். மொட்டை கெட்டப்பில் ரஜினியைப் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பு அடங்க கொஞ்ச நேரமாகிறது.

ரஜினி படத்தில் ஒரு நாயகிக்கு என்ன வேலையோ அதேதான் இந்தப்படத்தில் ஸ்ரேயாவிற்கு. ரஜினியின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து பதறும் காட்சியில் மட்டும் கொஞ்சூண்டு நடித்திருக்கிறார். மற்றபடி ஸ்ரேயாவின் நடிப்பு பற்றி சொல்ல ஒன்றும் இல்லை..

ரஜினியின் மாமாவாக விவேக். ரஜினி பேசவேண்டிய பஞ்ச் டயலாக் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பேசியிருக்கிறார். கூடவே சாலமன் பாப்பையா மற்றும் ராஜா. ஆங்காங்கே கடுப்பேற்றினாலும் இந்தக் கூட்டணி கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறது.

வில்லன் சுமனிடம் ஏதோ மிஸ்ஸிங். அதிகம் பேசாமல், உணர்ச்சி பாவமெல்லாம் காட்டாமல் வெறுமனே நிற்பது சற்றே புதிதாக இருக்கிறது என்றாலும் முதல் பாதியில் ரஜினியின் கண்களில் விரலை விட்டு ஆட்டுபவர் இரண்டாம் பாதியில் அவரிடம் அப்படி அடங்குவது மற்ற படங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் - ஷங்கர் படத்தில் இப்படியா?

தோட்டாதரணியின் செட்டுகளும், ரஹ்மானின் இசையும் கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆனாலும் ரஹ்மான் பின்னணி இசையில் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வசனகர்தா சுஜாதாவிற்கு என்ன ஆச்சு என்று கேட்க வைக்கிறது அரைவேக்காட்டுத்தனமான, அபத்தமான பல வசனங்கள். விவேக் ஒரு குண்டு பெண்மணியை பார்த்து 'பங்களா வருது பார்...' என்பதும் அமைச்சரின் பி.ஏ. வாக வருபவரிடம் 'மனைவின் ரேட்' என்ன என்பதும் இதற்கான உதாரணங்கள். ஆனாலும் "சாகிற நாள் தெரிந்சிடுச்சுன்னா வாழுற நாளெல்லாம் நரகமாயிடும்" போன்ற வசனங்களின் மூலம் தனது இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகாமல் காத்துக்கொள்கிறார் சுஜாதா..

படத்தின் முதல் பாதிவரை ஆதாரக் கரு லஞ்சம் என்பதுபோல் காட்டப்படுகிறது. பிற்பாதியில் தடாலடியாக கறுப்புப்பணம் என்ற விவாதத்திற்கு செல்கிறார் இயக்குநர் ஷங்கர். ஒவ்வொரு காட்சியிலும் பிரும்மாண்டத்தைக் காட்ட எக்கச்சக்கமாய் மெனக்கெட்ட இயக்குனர் படத்தில் ஆங்காங்கே தென்படும் லாஜிக் ஓட்டைகளை அடைப்பதிலும் கொஞ்சம் நேரத்தை செலவழித்திருக்கலாம். லஞ்சம், கருப்புப்பணம் போன்ற விஷயங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்குனர் நினைத்திருந்தாலும் அவரது திரைக்கதை கொஞ்சம் தடம் மாறிப் போனதால் படம் முடிந்த பிறகும் ரஜினி மட்டுமே மனதில் நிற்கிறார் - கதை நிற்கவில்லை..

மொத்தத்தில் ரஜினி - ஷங்கர் இணைந்து செய்த படம் - ஷங்கர் டச் படம் முழுக்கத் தெரியும் போன்ற விவாதங்களை எல்லாம் தூள் தூளாக்கி இது ரஜினி படம் என்ற எண்ணம் மட்டுமே முடிவில் மனதில் மேலோங்குகிறது. திரைக்கதை அமைப்பதில் ஷங்கருக்கு டச் விட்டுப்போச்சோ என்ற கேள்வி மனதில் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors