தமிழோவியம்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : சங்கர் படமா ? சூப்பர் ஸ்டார் படமா ?
-

"அண்ணாச்சி! படம் பாத்தியளா?", முகம் மலர்ந்த புன்னகையோடு வந்தான் மணி. சிவாஜி படம் போட்ட பனியன். முட்டி கிழிந்த ஜீன்ஸ், முரட்டுக்காளை ஹேர்ஸ்டைல் என ஆளே ஒருமாதிரி இருந்தான்.

"ஏய் மணி என்னப்பா இது ஆளே மாறிட்ட? படம் பாத்தேன். சும்மா அதிருதுல்ல."

"இதுவரைக்கும் வந்த தலைவர் படத்துலேயே சூப்பர் படம் இதுதான்."

"எனக்கு பழைய படங்கள் சிலது ரெம்ப பிடிக்கும். அதாவது ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகிறதுக்கு முன்னால ஒரு நடிகரா இருந்தப்ப."

Fans"அது சரி. ஊரெல்லாம் இதாம் பேச்சு."

"பாத்தேன் இண்டர்நெட்டு, செய்தித்தாள்னு எங்க பாத்தாலும் ஒங்க ராஜ்யந்தான்."

"மளுப்பாம படத்தபத்தி சொல்லுங்க."

"ஒண்ணு சொன்னா கோபப் பட மாட்டியே? படம் ரஜினிபடமா சங்கர் படமான்னு கேட்டா சங்கர் படம்னுதான் சொல்வேன். ரஜினியே இத பேட்டியில சொல்லிருக்காரு. சங்கரோட மத்த படங்கள்ள உள்ள சீன்களெல்லாம் அப்டியே இருக்கு. பழைய சங்கர் படங்கள்ல ரஜினி நடிச்ச எப்டி இருந்திருக்கும்ணு காட்ற படந்தான் சிவாஜி."

"அதுலதானே இருக்கு வித்யாசம்."

"அப்டி வரக் கூடிய வித்யாசம் ரெம்ப சின்னது. பபிள்கம்ம ஸ்டைலா தூக்கிப் போட்டு புடிச்சுட்டதால படம் சூப்ப்ரா ஓடுதுண்ணா எப்டி?"

"அண்ணாச்சி அது மட்டுமா?"

"நான் என்ன சொல்ல வர்றேண்ணா இதே கதையில அர்ஜுன் ஸ்டைலே இல்லாம நடிச்சிருந்தாலும் ஓடியிருக்கும்."

"இந்த அளவுக்கா."

Fans "அங்கதான் சூப்பர் ஸ்டார் இமேஜ் வந்து நிக்குது. படம் நார்மல் சங்கர் படந்தான் ஆனா ரஜினியோட இமேஜ் தூக்கி நிறுத்துது. அத நம்பி வியாபாரம் செய்யலாம்ணு இன்னும் அதிகமா செலவு செஞ்சிருக்காங்க."

"ஏதோ சொல்றிய."

"படம் நல்ல பொழுதுபோக்கு. இல்லைண்ணு சொல்லல. ஆனா இத்தன கோடி செலவுலதான் தமிழன் பொழுது போகணுமான்னு தோணுது."

"அண்ணாச்சி. அந்தக் காலத்துல லச்சம் லச்சமா போட்டு படம் பண்ணாங்க. அரச படங்கள்ல இல்லாத செலவா? இப்ப கோடி கோடியா செலவு சினிமாண்ணா செலவு செஞ்சாத்தான் நல்லாயிருக்கும் அதுவும் கமெர்சியல் படம்."

"சரிதான்."

"படத்துல சூப்பர் மெசேஜ் ஒண்ணு சொல்றாரு பாத்தியளா?"

"ஆமா. ஆனா அதுலேயும் எனக்கு உடன்பாடில்ல."

"என்ன சொல்றீங்க."

"சங்கரோட தீம் எல்லாமே ஒரே மாதிரி இருக்குது. அது பரவாயில்ல. ஆனா சமுதாய சீர்திருத்த கருத்துக்கள ஆட்டமும் பாட்டம் ஜோக்கும் அடிச்சி சொல்றதுல அந்த செய்தி அடிபட்டுப் போவுது. இந்த மாதிரி சினிமாவுல செய்திகளச் சொல்றதால அந்த செய்திக்கு மதிப்பில்லாமலே போயிருதுண்ணு சொல்லலாம். இந்த விதத்துல சமுதாயம் பத்தி மக்கள்கிட்ட இருக்க கவலைய வச்சி சங்கர் வியாபாரம் செய்யுறார்ணே சொல்லலாம்."

"என்ன அண்ணாச்சி இப்டி சொல்லிட்டிய. மாத்திரைய இனிப்பா குடுக்கிற மாதிரிதானே இதுவும்."

"ஆனா மக்கள் மருந்து சாப்டப் போறாங்களா இனிப்பு சாப்ட போறாங்களா?"

"யோசிக்க வச்சுட்டீங்க."

"அதுவும் ஏழ்மையப் போக்க வழி சொல்றேண்ணுட்டு கோடிக்கணக்குல செலவு செஞ்சு பாட்டெடுத்தா எப்டி? அப்ப இதெல்லாம் செய்யாம ரஜினிய வச்சு சூப்பர் ஹிட் குடுத்த மத்த டைரக்டரெல்லந்தானே சூப்பர்."

"அண்ணாச்சி. சங்கர் தனக்குன்னு ஒரு பாணி வச்சிருக்காரு. இப்ப அந்த இயக்குநருகிட்ட இதே அளவு பணத்த குடுத்து அதுக்கேத்தாப்ல கற்பன செய்யச் சொன்னா செய்வாங்களா?"

"நீ சொல்றதும் பாயிண்ட். இவரு மொதல்ல கற்பன பண்ணிட்டு அப்புறந்தான் பட்ஜட் போடுறாருண்ணு நெனைக்கிறேன்."

"ஆக மொத்தத்துல படத்த பத்தி ஒரு பெரிய மதிப்பில்ல."

"அப்டீன்னு சொல்ல மாட்டேன். நிச்சயமா, மத்த சங்கர் படங்களப் போல பிரமாண்டமா, ஜாலியா, பொழுதுபோக்கா இருந்துச்சு."

"எங்க ரசிகர்மன்ற அலங்காரமெல்லாம் எப்டி?"

"அது இன்னொரு தலவலி. இப்டி தோரணம், போஸ்டர் பாலாபிஷேகம்ணு செலவு செய்யுற காசுக்கு படத்துல சொல்றதப் போல ஏதாச்சும் நல்லது செய்யலாம்ல? காவடி தூக்குறது, படப் பெட்டிக்கு ஊர்வலமாப் போயி பூச செய்யுறதுண்ணு ஒரு கணக்கில்லாம நடக்குது."

"சரி இனி உட்டா என்னவெல்லாமோ சொல்வீங்க. வேற செய்தி என்னண்ணு சொல்லுங்க."

"வேற என்ன சேதி? நம்ம சூப்பர் சனாதிபதி கலாம் பேரு திரும்பவும் அடிபடுது."

"அப்டியா. மக்கள் தேர்வுண்ணு வந்தா அவர்தாங்க ஜெயிப்பாரு."

"ம். ஆனா தான் நிக்கப் போறதில்லைண்ணு திட்டவட்டமா சொல்லிட்டாராம். அவர பரிந்துரை செஞ்சது நம்ம நாயுடு, ஜெயோட மூணாவது அணியாம். மொதல்ல பாஜக எதிர்ப்பு சொல்லிட்டு பெறகு சப்போர்ட் செய்வோம்ணு சொல்லிட்டாங்க."

"இப்ப முன்னணில யாரு இருக்கா?"

"காங்கிரஸ் சார்புல பிரதீபா பட்டீல்னு ஒரு பொம்புள."

"முதல் முதல் பெண் ஜனாதிபதியா?"

"ஆமா. இன்னும் செலரும் இருக்காங்க ஆனா முன்னணில பிரதீபா பட்டீல்தான். இதுக்கெடையில பாஜக பிரதிபா மேல குற்றச்சாட்டுக்களா வச்சுகிட்டிருக்குது, சிறுபான்மை கிறீத்தவ அமைப்புக்களோட தூண்டுதலாலத்தான் சோனியா பிரதீபாவ பரிந்துரைச்சிருக்காங்கண்ணு சொல்லுது. ஆன பிரதிபாவுக்கு தலவலி அவங்களே சொன்ன வார்த்ததான்."

"என்னது?"

"பர்தாபோட்டு முகத்த மறைக்கத் தேவையில்லண்ணு சொல்லிட்டாங்க. அதோட பர்தா போடுற பழக்கம் முகமதியர் ஆட்சிக்காலத்துலதான் வந்துச்சுண்ணும் சொல்லிட்டாங்க."

"ஐயையோ. மன்னிப்பு கேக்கலியா?"

" இன்னும் இல்ல. இன்னொரு பதவி ஊசலாடிகிட்டு கிடக்குது."

"என்னது?"

"கனிமொழிக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. கலைஞர் 'செய்யலாம்'ணு சொல்லியிருக்காரு."

"அது செய்யாமலா?"

"இந்த வாரம் சந்தோசமான செய்தி வன்புணர்வுக்கு ஆளான பெண்களோட படத்த மீடியா வெளியிடக்கூடாதுண்ணு வந்த தீர்ப்புதான்"

"ஓகோ. ரெம்ப நல்ல தீர்ப்பு அண்ணாச்சி."

"ஆமா. இது போலவே குற்றம் நிரூபிக்கப்படாத நபர்களோட படத்த வெளியிடவும் தட போட்டா நல்லாயிருக்கும்."

"ஆனா கேஸ் முடிய வருசக் கணக்குல ஆகும்போது இவர்மேல இப்டி ஒரு கேஸ் இருக்குண்ணு மக்கள் தெரிஞ்சுக்க வேண்டாமா?"

"ம். தேவையானவங்க தகவல் தெரிஞ்சுக்கலாம். ஆனா பொதுவுல பத்ரிகையில போடணும்னு அவசியம் இல்லியே மணி?"

"சரிதான்."

"இன்னொரு நல்ல செய்தி என்னண்ணா காந்தி பொறந்த நாள சர்வதேச அஹிம்சை தினமா ஐ.நா அறிவிக்கப் போகுதாம்."

"ரெம்ப நல்ல விஷயமாச்சே."

"ஆமா. உலக அளவுல இந்தியாவோட முகத்த தூக்கி நிறுத்துற பிம்பங்கள்ல அவர் முதலானவர்ண்றத மறக்க முடியுமா?"

"ம்."

"சரி மணி. வர்ற சனிக் கிழமைக்கு ஒரு டிக்கெட் கெடைக்குமா?"

"யாருக்கு அண்ணாச்சி..?"

"இன்னொரு தரம் பாத்துரலாம்ணுதான்.."

"அண்ணாச்சி நீங்களேயா?"

"எனக்கெல்லாம் பொழுது போக்கூடாதா மணி?"

Copyright © 2005 Tamiloviam.com - Authors