தமிழோவியம்
தராசு : சல்'மான்'கான்
- மீனா

ன் பெயரிலேயே மான் இருந்தும் கூட சல்மான்கானிற்கும் மான்களுக்கும் அப்படி என்ன ஒரு விரோதமோ தெரியவில்லை. தொடர்ந்து மான்களாக சுட்டு வேட்டையாடி, வழக்குகளில் மாட்டித் தவிக்கிறார் சல்மான். ராஜஸ்தானில் 1998 ஆம் ஆண்டு 2 மான்களை வேட்டையாடியதாக நீதிமன்றத்தில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், சிறுத்தைப் புலியை வேட்டையாடிய வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சல்மான் மேல்முறையீடு செய்த காரணத்தால் அந்த வழக்குகளின் விசாரணை ஆகஸ்ட் 21ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தப் புது வழக்கு.

இவ்வழக்கில் சல்மான் மட்டுமல்லாமல் அவருக்கு உதவியதாகக் கூறி சையிப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ய்பு உள்ளதாக வன விலங்கு பாதுகாப்புச் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எல்லா உயிர்களையும் தன் உயிர் போலக் கருதவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியும் அவர்களது பேச்சைக் கேட்காமல் ஆதி காலங்களில் அரசர்கள் ஆரம்பித்து வைத்த ஒன்றுதான் இந்த வேட்டையாடும் வழக்கம். அது இன்று வரை தொடர்ந்து கொண்டு வருகிறது.

ஏற்கனவே மான் வேட்டையாடியது, குடித்து விட்டு கார் ஓட்டி பலர் உயிரை பலிவாங்கியது என்று சல்மான் மீது ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் காத்திருக்கும் போது அவர் மீதான மற்றொரு வழக்குதான் இது. மனிதனை மனிதன் கொன்றாலே ஏகப்பட்ட அப்பீல்கள் செய்து தவறு செய்தவன் தண்டனை இல்லாமல் சுகமாக சட்டத்திற்கு வெளியே திரிந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் மான்களைக் கொன்ற வழக்கில் சல்மானை சிறையில் அடைக்க முடியுமா என்றால் சந்தேகமே. தன்களுடைய ஆள் மற்றும் பணபலத்தை பயன்படுத்தி எப்படியாவது இவரைப் போன்ற ஆட்கள் நிச்சயம் வெளியே வந்துவிடுவார்கள்.

இதைத் தடுக்க ஒரே வழி - வன விலங்கு வேட்டை தடை சட்டத்தை மேலும் கடுமையாக்குவது ஒன்று தான். அது மட்டுமல்லாமல் ஒரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை எதிர்த்து இத்தகைய வழக்குகளில் மேல் முறையீடு செய்தாலும், நீதிமன்றம் விடுதலை அளிக்கும் வரை அவர்களை உள்ளேயே வைக்க வேண்டும். வாயில்லா பிராணிகள் விஷயத்தில் தவறு செய்தவர்கள் சரியான தண்டனையைப் பெற்றே தீரவேண்டும். அப்போதுதான் இத்தகைய தவறுகளைச் செய்ய மக்கள் அஞ்சுவார்கள். எண்ணிக்கையில் தற்போது வெகுவாகக் குறைந்து வரும் நம் நாட்டு வனவிலங்குகளை கயவர்களின் கைகளிலிருந்து காக்க அரசு இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors