தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : எந்தையும் நானும்
- சிறில் அலெக்ஸ்

Cheran Rajkiranசேரனின் 'தவமாய் தவமிருந்து' தன் வாழ்நாட்களை பிள்ளைகளின் நலனுக்காகவே செல்வழித்துவிட்டு, ஒரு மெழுகுத் திரிபோல ஒளிகொடுத்து  முற்றும் உருகி அணைந்து போகும் பல தந்தைகளுக்கு அஞ்சலி என்றால் பொய்யில்லை. பொதுவாக நம்மிடத்தில் தாய்க்கிருக்கும் அன்பும் அரவணைப்பும் தந்தைக்கு கிடைப்பதில்லை. உண்மையில் இந்தப்படம் பல காயங்களுக்கு மருந்து போட்டிருக்கும்.

ஜூன், 18 'தந்தையர் தினம்'.

முதலில் இந்த 'தினங்களுக்கு' எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், எந்த செயலுக்கும் குறைந்த பட்சம் இரண்டு நோக்கங்கள் இருக்கும். வியாபார நோக்கம் அல்லது சுய இலாப நோக்கம் எல்லாவற்றிலும் எப்போதும் உண்டு. ஆன்மீகம் துவங்கி அம்மா சாதம் ஊட்டுவது வரை சுய லாப நோக்கமில்லா செய்கைகளே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் பல நேரங்களில் இந்த 'சுயநலத்திலேதான் பொதுநலம் பிறக்கிறது'. ஆகவே, தினங்கள் உங்களுக்குத் தேவையில்லை என்றால் அனுசரிக்க வேண்டாம். அடுத்தவர்கள் அனுசரிப்பதை மறுக்கவும் வேண்டாம்.

வில்லியம் ஸ்மார்ட், ஒரு அபாரத் தந்தை. ஆறாவது குழந்தையை பெற்றெடுக்கையில் இவர் மனைவி இறந்து போகிறார். ஸ்மார்ட் தனது ஐந்து பிள்ளைகளையும் ஆறாவது பச்சிளம் குழந்தையயும் தனியோரு தகப்பனாய் வளர்த்து ஆளாக்கினார். இவரின் நினைவாக அவர் மகள் சொனோரா ஜூன் 19ஐ தந்தையர் தினமாகக் கொண்டாடினார். 1966ல் அமெரிக்க ஜனாதிபதி   லிண்டன் ஜான்சன் ஜூன் மாதத்தில் மூன்றாம் ஞாயிறை தந்தையர் தினமாக அறிவிக்க, இப்போது உலகளவும் தந்தையர் தினம் ஜூன் மாதம் கோண்டாடப் படுகிறது.

இந்தியாவில் பல தந்தைகள் ஸ்மார்டை விடவும் கடினமான நிலமைகளில் தங்கள் குடும்பங்களை வழிநடத்துகிறார்கள் அல்லது வழி நடத்த உதவுகிறார்கள்.  வருடத்துக்கு இரண்டுமுறை தந்தையர் தினம் கொண்டாடலாம் நாம், தப்பில்லை.

'அலெக்ஸ் வாத்தியார்', முட்டத்தில் பிரபலம். என் தந்தை.  சராசரிக்கும் கொஞ்சம் மேலானவர். தான், தன்  வேலை, குடும்பம் என்றில்லாமல் ஊருக்கும் உழைத்தவர். முன் கோபி. வெறும் முகோபி மட்டுமல்ல பின், மேல், கீழ், பக்கவாட்டில் எல்லாம் கோபம் வரும் அவருக்கு. 'தான்' என்னும் எண்ணம், (அகந்தை  அல்ல), அவரிடம் அதிகமாகவே இருந்தது. எந்தக் காலத்திலும் தன் பெயருக்கோ குடும்ப கெளரவதிற்கோ கேடு வருவதை அனுமதித்ததில்லை. ஆனால் இந்தக் கோபமும், கொஞ்சம் வாய்த்துடுக்கும் சேர்ந்து எலோரிடமும் ஒரு மதிப்பு கலந்த பயத்தை அவர்மேல் ஏற்படுத்தியிருந்தது.

அரசு ஆசிரியர் என்கிறதால் அடிக்கடி இடமாற்றம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா எல்லை அடுத்துள்ள ஊர்கள் பலவற்றில் ஆசிரியராகவும் தலமை ஆசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார், ஆதலால் முட்டத்தில் மட்டுமல்லாது பல இடங்களிலும் இவர் பிரபலம். பலமுறை நான் பார்த்திராத பலரும் என்னிடம் என் தந்தையைப் பற்றி விசாரிப்பதுண்டு.

அதிகாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்று மீன் வாங்கி வந்து குளித்துவிட்டு மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு குறைந்த பட்சம் 6கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து பள்ளிக்கூடம் போய் சேரும்போதே பாதி சோர்ந்திருக்கவேண்டும் அவர் உடல். இந்தப் பகுதியில் நிலப் பரப்பு கேரளாவைப் போல மேடும் பள்ளமுமாய் இருக்கும். சைக்கிளை பாதி தூரம் உருட்டிக் கொண்டே செல்லவேண்டும். மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் சந்தைக்கு அல்லது கடைக்குச் சென்று  வீட்டுக்குத் தேவையான 'மலக்கறி' முதலான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும்போது ஐந்து முதல் ஆறுமணி. சில நேரங்களில் அரிசி மூட்டை போல பெரிய சுமைகளை சைக்கிளில் வைத்துக்கொண்டு, ரோட்டில் போகும் ஒரு சிறுவனை தள்ளச் சொல்லி வருவதும் உண்டு. கிராமங்களில் உதவி என்று கேட்டால் உடனே கிடைக்கும், சிலர் முன்வந்து தானே உதவுவதும் உண்டு. சென்னையில் மழைக்காலத்தில் நீரில் மாட்டி நிற்கும் வாகனங்களைத் தள்ளிவிடுவது ஒரு சீசனல் தொழிலாகிவிட்டிருக்கிறது. அவர் வரும் நெரம் எல்லோரும் வீட்டில் இருக்கவேண்டுமென்பது ஒரு சொல்லப்படாத விதி. வீட்டிற்குள் வரும்போதே சைக்கிள் பெல் அடித்தால் 'நல்ல மூட்' இல்லைன்னா கொஞ்சம் விலகியிருப்பது நல்லது.

'கண்டிப்பு' அளவுக்கு அதிகமாகவே இருந்தது எங்கள் தந்தையிடம். சின்ன தவறுக்கும் பெரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும். 'கட்டி வச்சு தோலை உரிப்பேன்' என்பது எனக்கு வெறும் வார்த்தைகளல்ல, அனுபவம். கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பார், விறக்குக் கட்டை கூட விலக்கில்லை.இருந்தாலும் தவறுகள் தொடரும், தண்டனையும்தான். குறைந்த பட்ச தண்டனையாக, அ. பி. கோ (அலெக்ஸ் பீனல் கோட்) 007வின் படி இயேசுவின் படத்தின் முன் கையை விரித்துக்கொண்டு மண்டியிட்டு நிற்கவேண்டும். இந்த நினைவுகளை எழுதும்போது மெய் சிலிர்க்கிறது.

கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருந்தது. என் தந்தையின் கண்காணிப்பில் இருந்தவரையில் ஒழுக்க சீலர்களாக இருந்தோம். "அல்லேசி வாத்தியார் பிள்ளை அப்படி செய்யாது" எனும் ஒரு எண்ணம் பலரரிடமும் இருந்தது. இது ஒரு துருப்புச் சீட்டாய் சில நேரம் பயன்பட்டது. (கடற்புறத்தில் அலெக்ஸ் 'அல்லேசி'யாக்கப்பட்டது) .

என் தந்தைக்கான குறிச்சொல் 'கண்டிப்பு' மட்டுமல்ல 'உழைப்பும்' கூடத்தான். முட்டம் போன்ற கிராமத்தில் கிடைக்காத கல்வியை நாகர் கோவில் அனுப்பி பெற வைத்தார். பாடத்தோடு உலகையயும் தெரிந்துகொண்டோம். தன் மக்கள் டாக்டர், இஞ்சினியர், வக்கீல் என பெரிய பட்டங்கள் பெறவேண்டுமென்பதில் குறிவைத்தார், அதை நோக்கியே உழைத்தார். வெற்றி பெற்றார்.

சிலர் அத்தியாவசியம் எனச் செய்யும் பல செலவுகள் எங்கள் வீட்டில் 'ஆடம்பரம்' என கழிக்கப்பட்டன. ஊரில் பல வீடுகளில் ரேடியோ வந்தபின் தான் எங்கள் வீட்டில் வந்தது. டி.வி வந்து பல வருடங்களுக்குப் பிந்தான் எங்கள் வீட்டில் வந்தது, கிறிஸ்த்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அலங்காரங்கள் தவிர்க்கப்பட்டன. குறைந்த பட்ச புத்தாடைகளே தரப் பட்டன. அதிகபட்சம் உழைப்பை அளித்த பின்னரே ஒரு ஆடை கழிக்கப்பட்டது... இன்னும் எத்தனையோ. எங்களுக்குச் செய்யும் செலவுகளையே குறைக்கும்போது அவர் ஆடம்பரமாக இருப்பாரா? நெடுந்தூரங்களுக்கும் சைக்கிளிலேயே செல்வார், வீட்டில், தோட்டத்தில் முடிந்தவரை எல்லா வேலைகளையும் அவரே செய்வார், சிறு  வர்த்தகத்திலும் எவ்வளவு செலவைக் குறைக்கலாம் என எண்ணுவார், அது அவருக்கான பொருளானாலும்.

பின்னொரு நாளில் நான் இளைஞனாயிருந்தபோது, சென்னையின் சூட்டுக் காற்றிலும் சுகம் கண்டு  எல்லோரும் சந்தோஷமாய் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தருணமொன்றில் எனக்கு எல்லாம் புரிந்தது. நாளையை நினைத்து என் தந்தை செய்த முயற்சிகளெல்லாம் வெற்றியளித்துள்ளன. இதோ இரண்டு மகன்கள் மென்பொருள் துறையில், அமெரிக்காவில், ஒருத்தி ஆசிரியரார் இன்னொருவர் மாஜிஸ்ட்ரேட்டாய் என பிள்ளைகளை  'அவையத்து முந்தியிருப்பச்' செய்துவிட்டார்.

Cyril with his sonஎங்கோ வெறும் அலைகளும் சில கிழவிகளும் மட்டுமே  எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு கடற்கரை கிராமத்தில் பிறந்து, இன்று உலகில் எந்த மூலையிலும் சென்று பிழைக்கும் திறம் தன் பிள்ளைகளுக்கு வழங்கிய அந்தத் தந்தைக்கு வெறும் தந்தையர் தின வாழ்த்து மட்டும் போதுமா?

அவர்களின் கண்டிப்பிற்காக, நம் சுதந்திரத்தில் தலையிடுவதற்காக, பல நேரங்கல்ளில் நம் தந்தைகளை நாம் வெறுக்கிறோம் அல்லது குறைகூறுகிறோம். நானும் என் தந்தையின் எல்லா செயல்களையும் அங்கீகரிப்பதில்லை. ஆனால் நம் தந்தையை குறை சொல்வது நம்மையே குறை சொல்வது போல. இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் நம் தந்தையின் வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. அவரின் குறை நிறைகள் தான் நம்மை நிர்ணயித்திருக்கிறது. அவர் வெறுமாதிரி இருந்திருந்தால் நாமும் வேறுமாதிரிதான் இருந்திருப்போம். அதனால்தான் நம் தந்தையை குறை சொல்வது நம்மையே குறை சொல்வது போல.

இன்று நானும் ஒரு தந்தை. 2004 தந்தையர் தினத்தில் தந்தையான தந்தைகளில் நானும் ஒருவன். தந்தையாய் இருப்பது பாடம் கற்றுக்கொண்டே கற்பிக்கும் ஒரு புதுக் கலை. நம் குழந்தைகளோடு சேர்ந்தே நாமும் வளர்கிறோம் என்பதே உண்மை.

என் தந்தையின் தீவிர கண்டிப்பு என்னிடமில்லை, அவரின் தீவிர உழைப்பும்கூட என்னிடமில்லை. நாளை பற்றி அதிகம் கவலைப் படுபவனும் நானில்லை. மிதமான உழைப்பு, சந்தோஷ வாழ்க்கை, பணம் இரண்டாம் பட்சம் எனும் தீர்வு, எப்போதும் குறைந்த பட்சம் ஒரு சிறு புன்முறுவல், என் தந்தையின் குணங்களுக்கு நேரெதிராய் எனச் சொல்லலாம். ஒருவேளை இவைதான் நான் என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களோ ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors