தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : கத்தோலிக்கம் - ஒரு மேலோட்டம்
- சிறில் அலெக்ஸ்

பிற மதங்கள் பற்றி அறிந்து கொள்வதில் எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. அறியாத ஒன்றை அன்பு செய்வது, ஏன் சகித்துக்கொள்வதும் கூடக் கடினம். கத்தோலிக்கத் திருச்சபை (Catholic Church) பற்றி குறைந்த பட்சம் ஒரு மேலோட்டமான அறிதலையாவது ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை. சிறப்பு ஆசிரியர் என்கிற முறையில் எனக்கு மிகவும் தெரிந்த ஒன்றை சொல்வதுவே முறையாகுமென நினைக்கிறேன்.

ஒரு மீட்பரை எதிர்பார்த்திருக்கும் யூதர்கள் மத்தியில், யூதராய் தோன்றுகிறார் இயேசு. இவர் பிறப்பு கி.மு 6 முதல் 4க்குள் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இளம் போதகராய், யூத மத குருக்களை வெளிப்படையாக கண்டிக்கிறார். அவரின் போதனைகள் மனிதம் சார்ந்ததாக இருக்கின்றன அமைப்பு சார்ந்ததாக இல்லை. மோயீசனின் பத்து கட்டளைகளை சுருக்கி, "எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசி; தன்னைத்தானே நேசிப்பது போல பிறறையும் நேசி" என்கிறார். ஒருவருக்கொருவர் அன்பு செய்வது, பகைவரை மன்னிப்பது, கடவுளின் அளவில்லா இரக்கம், பாவத்திற்கு மன்னிப்பு இவையே இயேசுவின் முக்கிய போதனைகளாயிருந்தது. வெறும் போதனைகள் மட்டுமில்லாமல் சில அற்புதங்களையும் இயேசு செய்கிறார். இவர் இறைமகன் என பலரும் சொல்ல இந்த அற்புதங்கள் உதவுகின்றன.

Jesus and disciplesஇயேசு 12 சாதாரண மனிதர்களை (அதிகம் மீனவர்கள்) தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து தன் செய்தியை பரப்ப அவர்களை தயார் செய்கிறார். இவர்களில் ஒருவரான தோமையார்(தாமஸ்) சென்னை வந்து, இங்கே கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளார். சாந்தோம் தேவாலையத்தில் இவரது கல்லறை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இயேசு தன் சீடர் இராயப்பரை(பீட்டர்) சீடர்களின் தலைவராக நியமிக்கிறார். "நீ இராயப்பர். உன் மீது என் திருச்சபையை கட்டுவேன்...விண்ணரசின் திறவுகோல்களை உன் கையில் கொடுப்பேன்" என்கிறார் இயேசு. பீட்டரைத் தொடர்ந்து வருபவர்கள் போப் எனப்படும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள்.

யூத மதக் குருக்கள் இயேசுவை தெய்வ நிந்தனை(Plasphemy) செய்பவன் எனச் சொல்லி அவரை சிலுவையில்Jesus appears அறைந்து கொல்லும்படி உராமை(Rome) அரசை வலியுறுத்தி அதில் வெற்றி பெறுகின்றனர். சிலுவையில் அகால மரணமைடைந்த இயேசு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்து சீடர்களுக்குத் தோன்றுகிறார். நாற்பதாவது நாள் 'உலகெங்கும் போய் என் நற்செய்தியை அறிவியுங்கள்' எனச் சொல்லிவிட்டு வானகம் செல்கிறார். இவை அனைத்தும் மத்தேயு, லூக், மாற்கு மற்றும் ஜான் எழுதிய நற்செய்திகள் எனப்படும் Gospelகளிலிருந்து பெறப்படும் விவரங்கள்.

இதற்குப்பின் அவரின் சீடர்கள் ஊர் ஊராகத்திரிந்து பல யூதர்களிடமும் யூதரல்லாதவர்களிடமும் இயேசுவின் போதனைகளை பரப்புகிறார்கள். பொது வழிபாடு என எதுவும் இல்லை எனினும், ஆதி கிறித்தவர்கள் தங்கள் சொத்துக்களைக் கூட பொதுவில் வைத்து ஒன்றாய் வாழ்ந்ததாக 'அப்போஸ்தலர் பணி' எனும் விவிலிய புத்தகம் சொல்கிறது. கிறித்துவ மதம், முழுவதுமாய் உருப்பெறாத இந்த நாட்களில் பல பிரிவினைகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்துவந்தன. கி. பி 50ல் ஒரு சங்கமமைத்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த கால கட்டத்தில்  புனித பால் கவனிக்கத்தக்கவராகிறார். பால் கிறித்தவர்களை கொன்றுபோடச் செல்லும் படைத் தளபதி. வழியில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைக்கிறது. கடவுளின் குரல் கேட்கிறது. அதுமுதல் கிறித்துவை நம்பலானார். கத்தோலிக்க கிறித்துவக் கோட்பாடுகள் பலவும் புனித பால் வறையறுத்தார். இவர் அன்றைய கிறித்துவ மக்களுக்கு எழுதிய கடிதங்கள் பைபிளில் அடக்கம்.

கி. பி 50 வாக்கில்தான் நற்செய்திகள் எழுதப்பட்டன என கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயேசு இறப்புக்கு 25 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பின்.

கி.பி 69ல் நீரோவின் உரோமை அரசு கிறித்துவர்களை கொடுமைப் படுத்தி கொல்ல ஆரம்பிக்கிறது. பீட்டர் சிலுவையில் தலைகீழாக அறையப்படுகிறார். புனித லினஸ் பொறுப்பேற்கிறார். Quo Vadis என்கிற ஆங்கிலப் படத்தில் இந்தக் காலத்தை அழகாகச் சொல்லியிருப்பார்கள். பயந்து வாழும் கிறித்துவர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ள மீன் குறியீட்டை பயன்படுத்தினர். இன்றும் அமெரிக்க கார்களில் இந்த அடையாளம் பார்க்கலாம்.
அதிகம் கிறீத்தவர்கள் இறக்க, இறக்க கிறித்தவம் அழியாமல் தழைக்கவே செய்தது.

கி.பி 110 ஆன்டியொக்கின் பிஷப் இக்னேஷியச் முதன்முறை 'கத்தோலிக்க திருச்சபை' எனும் பெயரை பயன்படுத்துகிறார், பெயர் நிலைக்கிறது. வரலாறு பல போராட்டங்களுடன் தொடர்கிறது. பலமுறை பல அரசர்களால் கிறித்துவர்கள் கொடுமை படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். யூத பழக்கங்கள் பல கைவிடப்பட்டன மற்ற மதங்களிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் பழக்கங்கள் பெறப்பட்டன. கி.பி 150ல் பைபிள் தொகுப்பாக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சபை வளர்ந்தது.

உரோமை பேரரசர் கான்ஸ்டாண்டைன் கிறீத்தவர்களுக்கெதிரான துன்புறுத்தலை நிறுத்தினார், ஒருவகை மத நல்லிணக்கத்தை நிறுவ முயற்சித்தார். நிசியாவில் ஒரு குழு கூடி கடவுள் மகன்(இயேசு) பரிசுத்த ஆவி எனும் மூன்றும் ஒன்றான கடவுள் கொள்கையை உருவாக்கினர். தமத்திரித்துவம் (The Holy Trinity) என இது அழைக்கப்படுகிறது. 'ஆரிய கிறீத்துவர்களின்' (அந்தக் காலத்தில் இருந்த ஒரு கிறித்துவக் குழு) கடவுள் ஒருவரே, இயேசு அவரின் தூதரே எனும் கொள்கை மறுக்கப்பட்டது.

கான்ஸ்டாண்டின் கிறித்துவத்தை அங்கீகரிக்கிறார். அவருக்குப் பின் தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு கிறீத்துவத்தை அரச மதமாக அறிவிக்கிறார். கத்தோலிக்கம் உரோமை அரசின் ஆட்சி மதமாகிறது 'ரோமன் கத்தோலிக்கம்'(RC) எனப் பெயர் வருகின்றது.

பைபிள் பழைய, புதி ஏற்பாடாக வரையறுக்கப்படுகிறது. மற்ற புத்தகங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஆர்த்தடாக்ஸ் கிறித்துவமும் கத்தோலிக்க கிறித்துவமும் கி.பி 476 வாக்கில் பிரிகின்றன.

கி.பி 638ல் இஸ்லாமிய படைகள் கிறித்துவத்தை குறிவைத்து தாக்குகின்றன. பல நாடுகள் இஸ்லாமிய படையின் கீழ் வருகின்றன. 1095ல் போப் அர்பன் சிலுவைப் போரை அறிவிக்கிறார் கிறித்துவரல்லாத, சில கிறித்துவ, அரசாங்கங்கள் சிலுவைப்போராளிகளால் வீழ்த்தப்படுகின்றன. புனிதத் தலம் (Holy Land) ஆன எருசலேமை இஸ்லாமியர்களிடமிருந்து கைப்பற்றுவதே சிலுவைப் போரின் முக்கிய நோக்கம். இன்றும் ஆறா வடுவாய் சிலுவைப் போர்கள் கிறித்துவத்தின் வரலாற்றில் நிலைக்கின்றன.

1517ல் மார்டின் லூத்தர்(அமெரிக்கர் அல்ல) கத்தோலிக்க திருச்சபை காணிக்கைக்கு/காசுக்கு ஆன்மீக பரிகாரங்களை(Indulgance) வழங்குவதை எதிர்க்கிறார். 1582 போப் கிரகொரி தற்கால காலண்டரை அறிவிக்கிறார்.

ஒரு கால கட்டத்தில் திருச்சபை பல அரசாங்கங்களை தன் கைக்குள் வைத்திருக்கும் மாபெரும் அரசியல் சக்தியாக விளங்கியது. கலை, இலக்கிய, அறிவியல் படைப்புக்கள் எல்லாமே திருச்சபையின் அனுமதியுடனேயே வெளியிடப்பட்டன. மைக்கல் ஆஞ்சலோ, டா வின்சி, கலிலியோ போன்றவர்கள் திருச்சபையின் கண்காணிப்பில், நிற்பந்தத்தில் படைப்புக்களை உருவாக்க நேர்ந்தது.

இரண்டாவது சிலுவைப்போரும், ஸ்பானிஷ் இன்குயிசிஷன் போன்ற கறுப்பு நிகழ்வுகளும் நடந்தேறின. இந்தியா, இந்தோனேசியா துவங்கி ஆசிய நாடுகளிலும் கிறித்துவம் பெரிதாய் பரவ ஆரம்பித்தது. இடையே 1500களில் இங்கிலாந்து அரசர் தன் திருமணத்தை ரத்து செய்ய போப்பை கோரினார். அது மறுக்கப்படவே தன்னை ரோமன் கத்தோலிக்கத்திலிருந்து விலக்கிக்கொண்டு இங்கிலாந்து திருச்சபை (Church of England) என ஒன்றை ஆரம்பித்தார். மார்ட்டின் லூத்தரின் கத்தோலிக்க எதிர்ப்பும் சேர்ந்து ப்ராட்டஸ்டாண்ட்(Protestant) திருச்சபைகள் வளர ஆரம்பித்தன.

ம்ம்ம் வரலாறு சோர்வளிக்கிறதா?

ஒரு வேடிக்கையான நிகழ்வு. மார்டின் லூத்தர் ஒரு கத்தோலிக்க பாதிரியாரிடம் சென்றார். "நூறு ரூபாய் காணிக்கையாய் தந்தால் என் மாமாவின் ஆவி சொர்க்கம் போய்விடுமா?" என்றார். பாதிரியாரும் "ஆமாம்" என்றார். மார்டின் லூத்தரும் காசை பாதிரியாரிடம் தந்தார். கொஞ்ச நேரம் கழித்துவந்து "ஃபாதர் என் மாமா ஆவிதான் சொர்க்கம் போயிருக்குமே அந்தக் காசை திருப்பிக் கொடுங்கள் என்றார்".

நல்லதும் கெட்டதுமாய் வளர்ந்து வந்தது திருச்சபை. 1962 முதல் 1965 வரை இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூடி இன்று திருச்சபை எப்படி உள்ளதோ அதை வரையறுத்தது. பல கலாச்சாரங்களோடு திருச்சபை இணங்கியது. திருச்சபை கதவை அகலத் திறந்தது. லத்தீன் மட்டுமல்லாமல் மக்கள் தத்தம் மொழியில் வழிபாடுகளில் பங்கெடுக்க முடிந்தது. இரண்டாம் வத்திக்கான் கவுன்சிலின் முக்கிய நோக்கமே "திருச்சபையின் சன்னல்களைத் திறந்துவிட்டு நம்மால் மக்களைப் பார்க்கவும் மக்களால் நம்மை பார்க்கவும் வழி வகுப்பது" என்பதுதான். 20 நூற்றாண்டு கண்ட பல சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல திருத்தங்களை திருச்சபை செய்தது. இன்றும் பல மாறுதல்களைத் தொடர்ந்து செய்துகொண்டு பயணிக்கிறது கத்தோலிக்கத் திருச்சபை.

இதைவிட குறுகலாக கத்தோலிக்க கிறித்துவத்தின் வரலாற்றை சொல்ல முடியாது என நினைக்கிறேன்.

கத்தோலிக்க கிறித்துவத்தின் அடிப்படை நம்பிக்கை என்ன?  பன்னிரண்டு வரிகளில் இதை சொல்லிவிடலாம்.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவை நம்புவது, அவரின் ஒரே மகனான இயேசு கிறீத்துவை நம்புவது, இவர் பரிசுத்த ஆவியின் வல்லமையால் கற்பமாய் உற்பவித்து கன்னி மரியாளிடம் பிறந்தார் எனவும், போஞ்சு பிலாத்தின் (Pontius Pilate) அதிகாரத்தில் பாடுபட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார், பரலோகத்தில் எல்லாம் வல்ல இறைவனின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார், வாழ்பரையும், இறந்தவரையும் தீர்ப்பிட வருவார் எனவும் நம்புவது, பரிசுத்த ஆவியை நம்புவது, கத்தோலிக்க திருச்சபையை நம்புவது, புனிதர்கள் உறவை நம்புவது, பாவ மன்னிப்பை நம்புவது, உடலின் உயிர்ப்பை நம்புவது மற்றும் நித்திய வாழ்வை நம்புவது. என பன்னிரண்டு அடிப்படை நம்பிக்கைகள். இவை ஒவ்வொன்றிலிருந்தும் எடுக்கப்படும் பல்வேறு கிளை நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் கலந்தாய்வுகளோடு வரையறுக்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத்தின் மிக முக்கிய வழிபாடாக திருப்பலி(Holy Mass) உள்ளது. பொதுவாக 'பூசை' என அறியப்படும். வெறும் வேண்டுதல் மட்டுமல்லாமல், பாவங்களுக்கு மனம் வருந்துவதும், போதனைகளை கேட்பதுவும், நன்றியறிவித்தலும் என பலக் கூறுகளை உள்ளடக்கியது திருப்பலி. எல்லாவற்றிற்கும் மேலாக 'திரு விருந்து'. இயேசுவின் கடைசி இராவுணவின்போது அவர் "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றதற்கேற்ப இந்த திருவிருந்து வழிபாடு நடைபெறுகிறது. கத்தோலிக்கராயினும் இந்த விருந்தில் பங்குகொள்ள சில தகுதிகள் வேண்டியுள்ளது.

இதில் வழங்கும் அப்பமும், இரசமும் இயேசுவின் உடலும், இரத்தமும் என்பது நம்பிக்கை. இவை வெறும் அடையாளங்களல்ல. அப்படியே இயேசுவின் உடலும் இரத்தமும். இதனால்தான் பொதுவாக பாவமன்னிப்பு பெற்று தயார் நிலையிலுள்ளவர்களை மட்டும் இதில் பங்கெடுக்க அழைக்கிறார்கள்.

திருச்சபை ஏழு திருச்சாதனங்களை (Sacraments) வழங்குகிறது. ஞானஸ்நானம், பச்சாதாபம், புது நன்மை, உறுதி பூசுதல், திருமணம், குருத்துவம் மற்றும் நோயில் பூசுதல். இவை ஏழில் ஆறு திருச்சாதனங்களை ஒரு கத்தோலிக்கர் பெறலாம். திருமணமானவர் குருத்துவத்தை தேர்ந்தெடுக்க முடியாது. இந்த விதிக்கு மிகவும் குறைந்த விலக்குகளே உள்ளன.

'ஞானஸ்நானம்' , முதல் பெற்றோர்களான ஆதாம் ஏவாளின் பாவத்தின் சுவடை நம்மிலிருந்து நீக்குகிறது. இதை 'ஜென்ம பாவம்' (Origional Sin) என்கிறோம். 'பச்சாதாபம்' பாவ மன்னிப்பு பெறும் வழி. தன் பாவங்களை குருவிடம் முறையிட்டு பரிகாரம் செய்து மன்னிப்பு பெறுவது.

'புதுநன்மை' திருவிருந்தில் பங்கு கொள்ளும் தகுதி அளிக்கிறது. இதன் பிறகே ஒருவர் தொடர்ந்து திருவிருந்தில் பங்கேற்க முடியும். 'உறுதிபூசுதல்' பரிசுத்த ஆவியில் கத்தோலிக்கரை உறுதிப்படுத்துவது. பிறகு 'திருமணம்' 'குருத்துவம்' ஏதேனும் ஒன்றில்தான் பங்குகொள்ள முடியும். நோய்வாய்பட்டு மரண படுக்கையில் இருப்பவர்களுக்கு 'நோயில் பூசுதல்' எனும் அருட்சாதனம் வழங்கப்படுகிறது.

பண்டிகைகள் என்றால் அதிகம் பிரபலம் 'கிறிஸ்துமஸ்' மற்றும் 'ஈஸ்ட்டர்'. இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவது கிறிஸ்துமஸ் அவரின் உயிர்ப்பை கொண்டாடுவது ஈஸ்ட்டர்.

ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிறு 'குருத்து ஞாயிறு'. இயேசு சிலுவை மரணத்திற்கு முன்பு எருசலேம் நோக்கி பயணிக்கிறார். மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்கிரார்கள். ஒலிவ மரக்கிளைகளை கையில் எடுத்து கழுதைமேல் பவனிவரும் போதகரை வணங்குகிரார்கள். இதே மக்கள் சில நாட்களில் 'இவனை சிலுவையில் அரையுங்கள்' என எதிர் சாட்சி சொல்வார்கள். இதை நினைவு கூறுவது குருத்து ஞாயிறு(Palm Sunday'). ஆலிவ் கிளைகளுக்குப் பதில் தென்னை ஓலை பயன் படுத்தப்படுகிறது.

சாம்பல் புதன் அல்லது விபூதி புதன் என்றும் அழைக்கப்படும் நாள் கத்தோலிக்கர்களுக்கு மிக முக்கியமான நாள். இந்த நாள் துவங்கி நாற்பது நாட்கள் 'தவக்காலம்' (Lent) என அழைக்கப்படுகிரது . தவக்கால நாட்கள், லௌகீகப் பயணத்திலிருந்து கொஞ்சம் விலகி ஆன்மீக நிழலில் இளைப்பாற வாய்ப்பளிக்கும் நாட்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்தக் காலத்தை பயன்படுத்துவார்கள்.

தவக்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் 'சிலுவைப் பாதை' நடைபெறும். சிலுவைப் பாதையில் இயேசுவின் இறுதிப் பயணத்தில், அவர் சிலுவையில் அறையப்படுவதைச் சுற்றிய 14 நிலைகளை அல்லது நிகழ்வுகளை தியானிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

பொதுவாக கத்தோலிக்க கோவில்களில் இந்த பதிநான்கு தலங்களின் படங்களும் பார்க்கக்கிடைக்கும்.

தவக்காலத்தின் நிறைவான வாரம் 'புனித வாரம்'. இதில் புனித வியாழன் (Maundy Thursday), பெரிய/புனித வெள்ளி (Good Friday) எனும் நாட்கள் வருகின்றன. புனித வியாழன் இயேசுவின் கடைசி இரா உணவை நினைவு கூறும் நாள். அன்றைய வழிபாட்டில் இயேசு செய்ததைப்போல பாதிரியார் 12 பேரின் கால்களைக் கழுவுவார். 'பணிவிடை செய்யவே வந்தேன்' என இயேசு சொன்னதன் நினைவாக.

அமெரிக்காவில் குடும்பத்தலைவர் மற்றவர்களுக்கு இதைச் செய்ய எல்லோரும் மாரி மாறி சேவகர்கலாவதைப் பார்த்திருக்கிரேன். இந்தியாவில் இந்தப்பழக்கம் இல்லை.

'புனித வெள்ளி' இயேசு இறந்த நாளை நினவு கூறுகிறது. பெரிய  அளவில் சிலுவைப்பாதையும், சிலுவையை முத்திசெய்யும் ஒரு வழிபாடும் நடைபெறும். இந்த வழிபாடுகளில் மெல்லிய சோக இழையோடும். மனம் வருந்தவும் மனம் திருந்தவும் நல்ல தருணங்கள் இவை.

புனத வெள்ளிக்கு அடுத்த  சனிக்கிழமை நள்ளிரவு, சிறப்பு ஈஸ்டர் விழிப்பு பூசை நடைபெறும். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் மனிதனின் மீட்பின் வரலாறு ஆதாம் ஏவாள் துவங்கி முழுவதும் வாசிக்கப்படும். சிறப்பாய் ஒரு பெரிய மெழுகுத் திரி ஏற்றிவைக்கப்படும்.

சரி கிறிஸ்த்துமஸுக்கு லீவ் கிடைக்கும் ஆனா ஈஸ்டருக்கு? யோசியுங்க.

இது போக சகல ஆத்துமாக்கள் திருநாள், மாதா பரலோகம் போன திருநாள், திருக்குடும்பத் திருநாள் என சில பொதுவான திருநாட்கள் வரும். மற்றபடி புனிதர்களை நினைவு செய்ய அந்தந்த புனிதர்களுக்கென ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தோனியார், சவேரியார், இராயப்பர் & சின்னப்பர் போன்ற பெயர்போன புனிதர்களின் திருநாட்கள் பெரிதாய் கொண்டாடப்படும்.

கத்தோலிக்க கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு காவல் புனிதரை (Patron Saint) கொண்டிருக்கும் அல்லது ஒரு கருத்தமைப்பை முதன்மை படுத்தியிருக்கும். சாந்தோம் (San Thom = Saint Thomas) புனித தோமையாரை  காவல் புனிதராகக் கொண்டிருக்கிறது. பூக்கடையில் செவ்வய் கிழமையில் கூட்டமாயிருப்பது அந்தோனியார் கோவில், எழும்பூரில் இயேசுவின் திருஇருதயம், வேளாங்கண்ணியில்.... வேளாங்கண்ணி மாதா. தங்கள் காவல் புனிதரின் நினைவு நாளில் அந்தந்த கோவில் திருவிழாக்கள் நடைபெறும்.

யார் இந்தப் புனிதர்கள்? கத்தோலிக்க திருச்சப்பை மட்டுமே புனிதர்களை அங்கீகரிக்கிறது, பட்டமளிக்கிறது. உதாரணபுருஷர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து மூன்று நிலைகளாக வழங்கப்படுகிறது புனிதர் பட்டம். ஒருவரின் இறப்புக்கு 5 வருடங்கள் கழிந்தபின்னரே இதற்கான முயற்ச்சிகள் துவங்கும். அன்னை தெரசாவிற்க்காக இந்த விதி தளர்க்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு நம்ம பழைய பதிவு ஒண்ணு படியுங்க.

மாதா தெய்வமா? இல்லவே இல்லை. இயேசுவின் தாய் மாதா மேலே சொல்லப்பட்டுள்ளதுபோல ஒரு புனிதர்தான். இயேசுவின் தாய் என்பதால் ஒரு சிறப்பு இடம் அவருக்கு தரப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாது. கிறித்துவர்கள் பலரும் கழுத்தில் போட்டிருக்கும் செபமாலை மாதாவிற்கான சிறப்பு ஜெபம் சொல்லப் பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் மாதா காட்சி தந்ததாக நம்பப்படுகிறது. நாகப்பட்டினம் வேளாங்கண்ணியும் அப்படி ஒரு இடம். மாதா தோன்றிய அந்தந்த ஊர் பெயரிலேயே பாத்திமா, லூர்து என மாதா அழைக்கப்படுவது வழக்கம்.

சரி இந்திய நாட்டுக்குப் பாதுகாவல் புனிதர் யார்? மாதாதான். ஆகஸ்ட் பதினைந்து மாதா விண்ணேற்றமடைந்த திருநாள். பரலோகம்(சுவர்க்கம்), நரகம் மற்றும் உத்தரிக்கஸ்த்தலம் எனும் மூன்று இடங்களை இறப்புக்குப் பின் வருமென நம்புகிறது திருச்சபை. உத்தரிக்கஸ்த்தலம் திரிசங்கு சொர்க்கம்போல. நவீன சிந்தனையில் நரகம் என்பது நித்தியத்துக்கும்(Eternaly) கடவுளைக் காணமுடியாமல் ஒருவித ஆன்மீக வேட்கையுடன் ஆன்மா ஏங்கும் நிலை என நம்மப் படுகிறது. பிறந்து ஞானஸ்னானம் பெறாமல் இறந்து போகும் குழந்தைகளுக்கான லிம்போ எனும் இடம் ஒன்று இருந்தது சில மாதங்களுக்கு முன் இது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபை அடிப்படையில் ஒரு ஆன்மீக 'நிறுவனம்'. போப் தலைமையில் இயங்கும்  ஒரு அமைப்பு. போப்பின் கீழ் கர்தினால்கள், பிஷப், பிஷப்பின் கீழ் பங்கு குருக்கள், குருக்கள் தலைமையில் மக்கள் என இந்த அமைப்பு செயல்படுகிறது. மேலிருந்து கீழ் என சீராக வரயறுக்கப்பட்ட ஒரு ஆட்சியமைப்பைக் கொண்டியங்குகிறது திருச்சபை.

இப்போது இந்தத் தகவல்கள் போதும் என நினைக்கிறேன்.

இயேசுவின் போதனைகளின் அடிப்படையிலே பிறந்து வளர்ந்த அமைப்பாகினும் சில நேரங்களில் அவர் எதிர்த்த அமைப்பு சார்ந்த பல மதிப்பீடுகளைக் கொண்டுள்ளதாக கத்தோலிக்கம் காணப்படுகிறதென்பதுண்மை. தலமை (போப்) மாறும்போது சில நேரங்களில் நிலமையும் கொஞ்சம் மாறுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக பல குறைகளை நிவர்த்திசெய்தும், சிலநேரங்களில் மூடிமறைத்தும் பல தடைகளையும் தாண்டி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பிரமாண்டமான உலகளவிலான ஒரு ஆன்மீக அமைப்பாக கத்தோலிக்க திருச்சபை வளர்ந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors