தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : சீ சீ இந்தக் கதை 'புலி'க்கும்
- சிறில் அலெக்ஸ்

ருவன் காட்டுவழியே நடக்கும்போது ஒரு காட்சியைக் கண்டான்.

புலி ஒன்று கால் முறிந்து வேட்டையாட முடியாமல் கிடந்தது. ஆனால் ஆச்சர்யப்படும்படி ஒரு நரி அந்தப் புலிக்கு உணவு கொண்டுவந்து தந்தது. 'ஆகா கடவுளின் செயல்கள் வியக்கத்தக்கவை' என நினைத்தான் அந்த மனிதன். 'நானும் இந்தப் புலிபோல இங்கேயே படுத்திருந்தால் கடவுள் எனக்கும் இதுபோல உணவு தந்து காப்பாற்றுவார்', எனச் சொல்லி அந்த இடத்திலேயே படுத்துவிட்டான்.

சில நாட்கள் ஆயின யாரும் வரவில்லை. பசியால் வாடினான். இன்னும் சில நாட்கள் பசி மயக்கத்தில் கழிந்தன. இறக்கும் நிலையில் இறைவனை வேண்டினான். 'ஏன் கடவுளே? அந்தப் புலிக்குக் காட்டும் இரக்கம் எனக்கு கிடையாதா?', என்றான். கடவுள் அவன் முன்னே தோன்றினார், 'மகனே அந்தக் காட்சி உனக்கு கிடைத்தது அந்தப் புலியைப் பின்பற்ற அல்ல அந்த நரியைப் பின்பற்ற' என்றார்.

ஆத்திகன் 'கடவுள் இல்லையோ?' என் சந்தேகப் படுவது போல நாத்திகனுக்கும் 'ஒருவேளை கடவுள் இருந்தால்?' என்கிற சந்தேகம் எழும். சோதனை நேரத்தில் கடவுளை வேண்டாதவர் யார்? அப்படி வேண்டும்போது 'கடவுளே இந்தத் தொல்லையிலிருந்து யாராவது என்னை மீட்கமாட்டார்களா, யாரையாவது அனுப்ப மாட்டியா?' எனக் குரலெழுப்புகிறோம். என்றாவது 'கடவுளே. இன்று நான் யாருக்காவது உதவ வேண்டுமா? அதற்கு எனக்கு வழிகாட்டு' என வேண்டியிருக்கிறோமா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors