தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்
- சிறில் அலெக்ஸ்

"காது அடைச்சிருக்கு, நீங்க பேசினதே கேட்கல மாமி." அந்துமதி பக்கத்து சீட்டிலிருந்த லென்ஸ்மாமியிடம் சொல்ல, "இல்ல இன்னும் இருபது நிமிஷத்துல சிக்காகோ போயிரலாம்னு சொன்னேன்" .

"ஆமா. ஒஹேர் இன்டர்னேஷனல். அமெரிக்காவிலேயே பிசியான ஏர்போர்ட். தெரியுமோ? அட்லாண்டாவுக்கும் இதுக்கும் வருஷா வருஷம் போட்டி."

" 'ஒஹேர்' என்ன பேர் அது? ஏதாவது அர்த்தம் இருக்கும். இல்ல?"

"'எல்லாத்தையும் விட மேலானது'ன்னு அர்த்தம்.  ஐரிஷ்"

"எப்படீடி அந்துமதி இப்படி அவிழ்த்து விடற? சதா உன்ன மாதிரி என்சைகக்ளோப்பீடியாவை படிச்சா நான்கூட வாசகி கேள்விக்கு பதிலெழுதலாம் போல."

"தொழில் இரகசியங்களை இந்த மாதிரி பொது இடத்துல சத்தமா சொல்லாதீங்க மாமி."

"ஆமா இந்த சிப்பந்தி கேட்டுட்டு ஒனக்கு போஸ்ட்கார்ட்ல கேள்வி அனுப்பாமப் போகப்போறாங்களாக்கும்?"

"சரி. கேமரா எல்லாம் ரெடியா?"

"ம். டிஜட்டல் காமெராதானே. பாட்டரி ஃபுல்லி சார்ஜ்ட்"

அந்துமதி சப்தமாய் சிரித்தாள்.

Skyline"என்ன சிரிப்பு?"

"இல்ல இந்த டிஜிட்டல் காமெராவை நான்  வாங்கித் தந்ததும் இதுல பிலிம் போட முயற்சி செய்தீங்களே ..."

"பிறக்கும்போதே எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா என்ன. சரி... நான் கொஞ்சம் மக்குத்தான் ஒத்துக்கிறேன்"

சிப்பந்திப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டிருப்பதை உறுதி செய்துவிட்டுச் சென்றாள்.

"ஏண்டீ மதி இந்த உலக்கைப்பிள்ளை ஏர்போர்ட்டில நிப்பார்ல? எங்கிருந்து பிடிச்ச இவர?"

"இணையத்துலதான். ஒரு வலைப்பதிவாளர். என் ரசிகர்."

"ஓ இன்னுமொரு ஜொள்ளுப்பார்ட்டி. எப்படி பதிவெல்லாம் கலக்குவாரா?"

"எவளுக்குத் தெரியும் அதெல்லாம் படிக்கறதேயில்ல."

"சரி. நம்ம கார்ட்டூன் மூஞ்ச வச்சி எப்படி அடையாளம் கண்டுபிடிப்பாரு?"


கையில் அந்துமதியின் கார்ட்டூன் முகத்தை கணிணி பதிவெடுத்து ஒட்டிய அட்டையோடு ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

"Mr.உலக்கைப்பிள்ளை?"

"ஓ. அந்துமதி. நேரிலே உங்களை பார்க்க சந்தோஷம். This is Lensmaami i guess."

"ஆமா. உங்களை பார்த்ததிலே மகிழ்ச்சி"

"Welcome to Chicago"

"உலக்கைப்பிள்ளை, உங்களை உலக்கைன்னு கூப்பிடலாம்ல?" உ.பி தலையசைத்தார். "லென்ஸ்மாமிக்கு நம்மாட்கள் ஆங்கிலம் பேசினா அலர்ஜி".

"சாரி சாரி ஐ மீன் மன்னிக்கவும் மாமி. உங்களையெல்லாம் நேரில பார்ப்பேன்னு நினைக்கவேயில்ல. சாரு மெயில் பண்ணினதும் சந்தோஷமாயிட்டேன். பயணம் எப்படி போச்சு?"

"பரவாயில்ல. கொஞ்சம் குளிச்சு ரெஸ்ட் எடுத்தா தேவலாம்."

"இங்கிருந்து வீடு அரைமணி நேரம் வாங்க, கார்ல பேசிக்கலாமே."


டொயொட்டா கேம்ரி அமெரிக்காவில் 'தேசி' என செல்லமாக அழைக்கப்படும் இந்தியர்களின் பிரதான வாகனங்களில் ஒன்று கேம்ரி, சரி மத்த பிராதான வாகனங்கள் என்னண்றீங்களா அதுவும் கேம்ரிதான் வேற வேற வருஷ மாடல்கள். கூடவே கரோலா, சிவிக் எல்லம் சேத்துக்கலாம்.

உலக்கைப்பிள்ளை காரை ஹைவேயில் செலுத்தினார். "இவ்வளவு ஸ்பீடா போறீங்களே ஆபத்தில்ல?" லென்ஸ்மாமி கேள்விகளைதொடுக்க ஆரம்பித்தாள். "55மைல் இது கம்மி வேகம்தான். 75 முதல் 95, 100 வரைக்கும் ஓட்டூவாங்க. பொதுவா எல்லோரும் ரூல்ஸ்படி ஓட்டுறதால பிரச்சனையில்ல. ரோடும், காரும் ஸ்பீடுக்காக வடிவமச்சிருக்காங்க."

"இதென்ன தலைக்கு மேல ஹைவேக்கு குறுக்க கட்டிவச்சுருக்கான்?"

From Oasis"அது ஒயாசிஸ் மாமி."

"என்ன கத வுட்றீங்க. ஒயாசிஸ் பாலைவனச் சோலையில்ல?"

ஆமா தூரப் பயணங்கள்ள ஹைவேலிருந்து வெளியேறிப் போய் பொருட்கள் வாங்கமுடியாதுல்ல அதான் இப்படி ஹைவேக்கு மேலயே கட்டி வச்சுருக்காங்க."

"நம்ம ஊரு பரோட்டா கடை மாதிரின்னு சொல்லுங்க"

"அதேதான் அது ரோட்டுக்கு சைடுல இருக்கும் இது தலைக்கு மேல பாலம் மாதிரி. வெறும் சாப்பாடு மட்டுமில்லாம மற்ற சில பொருட்களும் கிடைக்கும்."

"ஸ்டார் பக்ஸ்ல ஒரு காப்பச்சீனோ வாங்கிட்டுப் போலாமே?" மதுமிதா கேட்டாள்.

"ஏண்டி இப்படி மாறிட்ட. ஊருல காப்பி டீயே குடிக்க மாட்ட. பித்தமுன்னு யுத்தம் செய்வ, ஸ்டார் பக்ஸ்னா பித்தமெல்லாம் சுத்தமாச்சா? போயி அவனுக்கு கொஞ்சம் 'BUCKS' அளந்துட்டு வரலாம் வாங்க"
எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க வண்டி ஒயாசிஸ் நோக்கி நகர்ந்தது.நேப்பர்வில், அமெரிக்காவில் முதன்மையான சில பள்ளிக்கூடங்களை கொண்ட இடம். சிக்காகோவிலிருந்து சுமார் 30மைல் மேற்கே. இந்தியர்கள் பலர் வசிக்குமிடம். அமெரிக்காவிலேயே வாழ்வதற்கு மூன்றாவது சிறந்த இடமாம். உலக்கைப்பிள்ளை அங்கேதான் தங்கியிருந்தார்.

வீடு வந்ததும் ஷவரில் குளியல் போட்டுவிட்டு எல்லோரும் வெளியே போக ரெடி.

"உலக்கை. இப்போ எங்கப் போறோம்?"

"இங்க அரோரால வெங்கடேஸ்வரா கோவில் ஒன்னு இருக்கு. ரொம்ப அழகான கோயில்."

Temple"ம்..www.balaji.org பாத்துருக்கேன். ஏதாவது கிளப்புக்கு கூட்டிட்டு போவீங்கன்னு நெனச்சேன். இங்கேயும் கோவிலா? லென்ஸ்மாமி ஏதாச்சும் சொன்னாளா?"

"இல்ல அந்துமதி, கோவிலுக்கு போயிட்டு பக்கத்திலேயே ஹாலிவுட்டுன்னு ஒரு காசினோ இருக்கு. அங்கே போய் சூதாடிட்டு வரலாம்"

"இப்பத்தான் நம்ம வழிக்கு வர்றீங்க"

"ஸ்வாமி நாராயணா கோயில்?" லென்ஸ்மாமி கேட்டாள்.

"போலாமே. மதி அந்தக் கோவில் நீங்க கட்டாயம் பாக்கணும். இங்க அரோராரலதான் இருக்கு. ரெம்ப அழகான கோவில். அலுவலக கட்டிடம் கேரளா ஸ்டைல் மர வேலைப்பாடோடையும், கோவில் முழுதும் க்ரானைட்ல அழகான வேலைப்பாட்டொட கட்டியிருக்காங்க."

"'ஸ்வாமி நாராயணா' கேள்விப் பட்டமாதிரி இருக்கே."

"BAPSன்னு ஒரு அமைப்பு. ரெம்ப நல்ல சமூக சேவையெல்லாம் செய்றாங்க. இவங்க லண்டன் கோவில் ரெம்ப பிரசித்தம்"

"சரி அப்ப அதையும் பாத்திரலாமே".

"லெமாண்ட்ல ஒரே இடத்துல ரெண்டு கோயில்கள் இருக்கு."

"இஸ்க்கான்?" மதி கேட்டாள்.

"ஆமா இஸ்கான் கோவில் ஒண்ணு டவ்ண் டவுன் பக்கம் இருக்கு."

"மொத்ததுல சிக்காகோவ்ல 'தேசிகள்' நிறைய."

"ஆமா. இங்க திவான் தெருவில முழுதும் இந்திய அல்லது பாக்கிஸ்த்தானிய கடைகள்தான் இருக்கும். அங்கபோனா நம்ம பாண்டிபஜார் நியாபகம் வரும். கிட்டத்தட்ட இந்தியாவில் கிடைக்கும் எல்லா பொருட்களுமே இங்க கிடைக்கும். அதுவும் மத்த லோக்கல் இந்தியக் கடைகளை விட கொஞ்சம் சீப்பா."

"சுதந்திர தின கொண்டாட்டம் இங்க நடக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்"

"ஆமா இந்தியர்களும் பாக்கிஸ்தானிகளும் போட்டி போட்டு கொண்டாடுவாங்க. காந்தி, ஜின்னா பேருல கடைங்களும் தெருக்களும் இங்க இருக்கு."

"மளிக ஜாமானெல்லாம் நீங்க தனியா போய் வாங்கிக்கங்க இப்ப கோவிலுக்குப் போகலாம்.".


கோவில்களில் பூஜைய விட போட்டோ பிடிப்பதில் லென்ஸ்மாமி பிசி. அந்துமதி ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அமைதியை ரசித்தாள். உலக்கைப்பிள்ளை இரண்டு அமெரிக்கர்களுக்கு கோவிலை விளக்கிக்கொண்டிருந்தான். பாலாஜி கோவிலில் சாப்பிட்டுவிட்டு (ஆமா அருமையான இட்லி சாம்பார், புளியோதரை வடை தயிர்சாதமெல்லாம் கிடைக்கும்) காசினோ போய் மாமி ஸ்லாட்மஷினில் தஞ்சமடைந்தாள். மதியும் உலக்கையும் ரூலேயில் நியூமெராலஜியை பரிட்சித்துக்கொண்டிருந்தனர்.

"அந்துமதி மணி என்ன பாத்தீங்களா?"

"11:30"

"இல்ல அதிகாலை ஒரு மணி. நீங்க வாட்ச்ச அட்ஜஸ்ட் செய்யல. ஜெட் லாக்னால உங்களுக்கு தூக்கமும் வரல. அதிகாலை ஒருமணி. நாளைக்கு சிக்காகோ டவுண்டவுன் போகணும்ல"

"நாளைக்கில்ல இண்ணைக்கு"

லென்ஸ்மாமியை கண்டுபிடிப்பது அவளை இழுத்துவருவதைவிட எளிதாய் இருந்தது. வீடு வந்து சாப்பிட்டுவிட்டு (மாமிக்கு இந்திய நேரப்படி பசித்தது)  தூங்கும்போது மணி அதிகாலை 4.


பதினொரு மணிக்கு எழுந்து. குளித்து சீரியல் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மணி 12:30 ஆகியிருந்தது.

"இந்தமாதிரி Suburb" மாமியப் பார்த்து,"புறநகர்லருந்து சிக்காகோ Downtown போகணும்னா லோக்கல் ரயில்ல போறது நல்லது. முக்கியமா ரெண்டு மூணுபேர் போகும்போது அப்படி செய்யலாம். கூட்டமா போகும்போது கார்ல போய் பார்க்கிங் செய்யுறது நல்லது. டவுண்டவ்ன் ஏரியாக்கள்ள பார்க்கிங் அநியாய விலை. எப்பவுமே புதுசா ஒரு சிட்டி பார்க்கப் போகும்போது மொதல்ல ஒரு பஸ் டூர் அடிக்கிறது நல்லது. அதனால நமக்கு என்ன பாக்கலாம் என்ன வேண்டாம்னு ஒரு ஐடியா கிடைக்கும் மட்டுமல்லாம எல்லத்தையும் ஒரு லுக் விட்டமாதிரியும் இருக்கும்." உலக்கைப்பிள்ளை விளக்க ஆரம்பித்தார்.

"ம் நல்ல ஐடியா. ஆனா உங்களுக்கு புதுசில்லையே?" மதி பாராட்டினாள்.

From Sears Tower"ஏய் அந்தா தூரத்துல பெரிய பிள்டிங்கெல்லாம் தெரியுதே..",லென்ஸ்மாமி.

"அதான் டவ்ன்டவுன். அந்த கறுப்பா உயரமான பிள்டிங்தான்...", உலக்கைப்பிள்ளை

"சியர்ஸ் டவர். உலகத்திலேயே மூணாவது உயரமான கட்டிடம். அமெரிக்காவிலேயே முதல்" அந்துமதி அறிவித்தாள் மாமி சிரித்துக்கொண்டே, "ம்ம்ம் நடமாடும் என்சைக்ளோப்பீடியா",

"முதல்ல சியர்ஸ் போகலாம். சிக்காகோ வந்துட்டு சியர்ஸ் ஸ்கை டெக் (Sky Deck) போகலன்னா எப்பவுமே அது குறையாத்தான் இருக்கும். அது பெரிய அனுபவம்னு சொல்லமுடியாது ஆனா சியர்ஸ் டவர் மேல போனோம்னு ஒரு பேரு அவ்வளவுதான். கிட்டத்தட்ட 15 லட்சம்பேரு வருசா வருசம் வர்றாங்க"

டிக்கட் வாங்கி உள்ளே போனா சிக்காகோ பத்தி குறும்படம் ஒன்னு, பாத்துட்டு லிஃட்ல படுவேகமா ஸ்கை டெக்குக்குப் போய் மேலிருந்து கீழே பொம்மைகள் போல இயங்கும் உலகத்தப் பார்த்துட்டு இறங்கியாச்சு.நடந்துகொண்டே...

"அடுத்தது 'மில்லேனியம் பார்க்'. மூணு உலகப் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் திறமைய காமிச்சுருக்காங்க. இங்கிருந்து நடந்தே போகலாம்."

"அதுல அனிஷ் கப்பூர்னு ஒரு இந்தியரும் சரியா?"

"ஆமா மதி. அவரு ஒரு உலோக முட்டைய வடிவமச்சிருக்காரு. அந்த உலோக முட்டையில சிக்காகோவின் உயர்ந்த கோபுரங்களின் பிம்பம் ஓவியமா தெரியும். இந்த பார்க்கோட வடிவமைப்பே ரெம்ப மார்டனா தெரியும். கொஞ்ச தூரம்தான் நடந்தே போகலாம்".

"மதி அங்க பாரேன் எவ்ளோ பெரிய முட்ட?" பின்னால் கொஞ்சம் தள்ளி வந்துகொண்டிருந்த லென்ஸ்மாமி குரல் கொடுத்தாள்.
"அதோ இங்கிருந்தே தெரியுதே."

வேகமாக நடந்து மில்லேனியம் பார்க் சென்றனர்."பசிக்குதே." லென்ஸ் மாமி முகம் சுளித்தாள்.

உலக்கைப் பிள்ளை மணி பார்த்தார் 3மணி. "சரி...வாங்க போய் கொட்டிக்கலாம். ஒரு விஷயம். ஒரு இடத்த சுத்தி பார்க்க போகும்போது டைம் ரெம்ப முக்கியம். அதனால அதிகமா டைம் எடுக்கிற ரெஸ்டரண்டுக்குப் போய் காத்திருக்காம. ஃபாஸ்ட் ஃபுட் போறதே நல்லது."

"ம்ம் அதுவும் சரிதான். மெக் டானல்ட்ஸ்லேயே சாப்பிடலாம்." மதி ஆமோதித்தாள்.

"சரி வெஜொட்டேரியன்?" மாமி கேட்க,"கிடைக்கும். வாங்க" என்றார் உலக்கை.

சாப்பிட்டதும் 'நேவி பியர்' போக ஒரு டாக்சி பிடித்து வந்து சேர்ந்தனர்.

"என்னப்பா இது? ஏறினதும் இறக்கிவிட்டிட்டு 9 டாலர் வாங்கிட்டுப் போறான்?. நம்ம ஊருல 405 ரூபாய்க்கு சென்னை டு கன்னியாகுமரி போயிடலாமே."

"மதி பாத்தீங்களா இங்க வந்ததுமே லென்ஸ்மாமிக்கு 45ஆம் வாய்ப்பாடு ஈசியா தெரிஞ்சுடுச்சு."

மதி சிரிக்க மாமி முறைத்தாள்.

"நேவி பியர் சிக்காகோவில இன்னொரு பெயர்போன இடம்."

"ஏன் பெயர் போன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க. பெயர் இருக்கிற இடமா எதுவும் தெரியாதா?"

மாமியின் கடியை ரசித்துக்கொண்டே தொடர்ந்தார் உலக்கைப்பிள்ளை.

"இங்கே ஐ-மேக்ஸ் தியேட்டர் இருக்கு, ஜயண்ட் வீல், விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ எல்லாம் இருக்கு. இங்கிருந்து  சின்ன சொகுசு கப்பல்ல கொஞ்சதூரம் லேக் மிச்சிகன்ல க்ரூஸ் போயிட்டு சிக்காவோவின் இரவழக தண்ணிலிருந்தே ரசிக்கலாம். அதுக்கும் டிக்கட் வாங்கிருக்கேன். அதுல இன்னுமொரு சஸ்பன்ஸ் இருக்கு அத அப்புறமா சொல்றேன்"

நேவி பியர் நுழைவு வாயிலருகே வந்தனர்.

"இது எங்கேயோ பாத்திருக்கேனே?" அங்கே பெஞ்சில் பெட்டியோடு அமர்ந்திருந்த ஆளைக் காட்டி மதி கேட்டாள்.

"ஓ...இது  ஃபாரஸ்ட் கம்ப் ஹீரோ போல செட் அப். இந்த உணவகத்துக்கு அந்த படத்துல வரக்கூடிய Bubba Gump ரெஸ்டாரண்டுன்னு பேரு. பொதுவா சம்மர் டைம்ல இந்த ஃபாரஸ்ட் கம்ப் இங்க உக்கார்ந்திருப்பார்"

"வாங்க அந்த ஜையண்ட் வீல் போயிட்டு உள்ளே ஐ-மேக்ஸ்ல படம் பாக்கலாம்." அந்துமதி அழைத்தாள்.

ஐ-மேக்ஸின் 60x80 அடி திரையில் முப்பரிமாணப் படம் பார்க்கும்போது லென்ஸ்மாமிக்கு மெய் சிலிர்த்தது. "டிவிக்கு ரெம்ப பக்கத்துல போய் நின்னு பாத்தா ஐமாக்ஸ் மாதிரி இருக்காது?"

"அப்படி ஐ-மேக்ஸ் பாத்தா ஐ-லாஸ் ஆயிரும். ஏற்கனவே சோடாப் புட்டி"

வெளியே வந்ததும் பாப்கார்ன் வாங்கி விட்டு  அங்கே நடக்கும்  கோமாளிகளின் வித்தைகளை கண்டு களித்தனர்.
லென்ஸ்மாமி  பஞ்சுமிட்டாய் வேண்டுமென அடம் பிடித்து வாங்கிக் கொண்டாள்.

"இது குழந்தைகளுக்கான இலவச க்ளவுன் ஷோ. இதில்லாம பெரிய சர்க்கஸ்கூட நடக்கும். நம்ம கப்பலுக்கு நேரமாச்சு போலாமா?"

பியர் நோக்கி நடந்தனர். லென்ஸ்மாமி வழிநெடுக சின்ன சின்ன கடைகள் இருப்பதை நோட்டமிட்டுக்கொண்டே நடந்தாள்.

மதியும் உலக்கையும் கப்பலில் ஏறும் இடத்துக்கு வந்தனர். லென்ஸ் மாமியக் காணோம்.

"எங்க போனாங்க இந்த மாமி." மதிக்கு  எரிச்சல்,"போட்டோ எடுக்கிறேன் பேர்வளின்னு வாய் பாத்துட்டே கோட்டைய விடுறதுதான் இவங்க வேலை".

"ஐயையோ இன்னும் 2 நிமிஷத்துல கப்பல் கிளம்பிடும். என்ன செய்யலாம்?" டிக்கட்டை காற்றில் ஆட்டிய படியே கைப்பிள்ளை கவலையுடன் கேட்டான். 120 டாலரின் மதிப்பு... 45ஆம் வாய்ப்பாடு மனதுக்குள் ஓடியது.

"வாங்க நாம போகலாம். மாமி இங்கயே இருக்கட்டும்."
உலக்கைப்பில்ளை தயங்கினார்."வாங்க போகலாம்." கையை பிடித்து இழுத்தாள்.
இரண்டுபேரும் கடைசி பயணிகளாக கப்பல் ஏறினர். ஒரு குலுக்கோடு கப்பல் பயணித்தது.Navy Piersகொஞ்சம் தொலைவிலிருந்து அதுவும் குட்டிக் கடல் போல விரிந்து கிடக்கும் ஏரிமேல் பயணித்துக்கொண்டு சிக்காகோவின் ஸ்கை லைனை ரசிப்பது தனி அனுபவம்.

"மதி. பாவம் மாமி. எங்க இருப்பாங்க?"

"அவகிட்ட இண்டர்நேஷனல் க்ரெடிட் கார்ட் இருக்கு. இந்த மதிரி தனியா போன அனுபவம் நிரைய இருக்கு உங்க கைபேசி நம்பர் இருக்கு இதுக்கு மேல என்ன வேணும்?" சொல்லி முடிக்கவும் உலக்கைப் பிள்ளையின் MP3 கைபேசியில் வசீகராவின் துவக்க புல்லாங்குழலிசை ஒலித்தது.

"மாமி?"

"ஆமா சாமி. நைசா கழட்டி உட்டுட்டு ஜோடியா கப்பல்ல பயணமா?"

"அப்படியில்லீங்க.."

"ம்ம் வழியாதீங்க...பரவாயில்ல நான் இங்க உங்களுக்கு வெயிட் பண்றேன்."
உலக்கைப் பிள்ளை நிம்மதியானார்.


தமிழ்நாடு, இலக்கியம், வலைப்பதிவு, திராவிடம், ஆரியம், அடுக்குமாடி, நீர், நையகரா, வயகரா, கட்டடவியல், சர்தார்ஜோக் என உரையாடி முடியும்போது இருண்டுவிட்டிருந்தது.

"கப்பல் கரைக்கு வந்துடுச்சா?" மதி கேட்டாள்.

"இல்ல கரைக்குப் பக்கத்துல நிக்குது. இப்பத்தான் நான் சொன்ன சர்ப்ரைஸ் மேட்டர் வரப்போகுது."

"என்ன.." மதி கேட்குமுன் வானை நோக்கி ஒரு ஒளிக்கீற்று பறந்து வெடித்து ஒளிக் கோலமிட்டது. "ஓ வாணவேடிக்கை. இந்த இரவுக்கு அருமையான ஒரு முடிவு இதுதான்." பல வண்னங்களில் வானில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன வாணங்கள்.

"ஒண்ணு கவனிச்சீங்களா?"

"என்ன."

"வாணங்கள் வெடிப்பதும் ஒளிர்வதும் இசையோட ஒருங்கிணைக்கப் பட்டிருக்கு."

"ஆமா கவனிச்சேன். ஒரு ஒளி நாடியம் போல இருக்கு. நல்ல அனுபவம் உலக்கைப்பிள்ள. ரெம்ப தாங்ஸ்."

கப்பல் கரைக்கு வந்ததும் மாமியைத் தேடினர்.

"அந்த ரெஸ்டாரண்ட்ல ஒரு இந்திய பெண்..?"

"ஆமா.. மாமியேதான்"


காரில் ஏறி $20 பார்க்கிங் கட்டிவிட்டு ஹைவேயை எட்டும்போது மணி இரவு 10 ஆகியிருந்தது.

"மாமி. நாங்க கப்பல்ல இருந்தப்ப என்ன செஞ்சீங்க?"

"இங்க ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ ஒண்ணு இருக்கு. ராக்கட்ல சிக்காகோவ சுத்தி வர்ற மாதிரி அமைச்சிருக்காங்க. இடையே மழைத்தூறல், ராக்கட் வெடிக்கிற மாதிரியெல்லாம் இருந்துச்சு. என்ன முயற்சி செய்தாலும் அது செயற்கைன்ற எண்ணம் சீக்கிரம் மறந்துபோகுது. உண்மையிலேயே பறக்குற மாதிரி அனுபவம்."

"அப்புறம்."

"அப்புறம் நடந்ததச் சொன்னா நீ பொறாமப் படமாட்டியே?"

"ம் அப்படி என்னது?"

"ஒரு வெள்ளக்காரன் என்னைப் பார்த்து சைட் அடிச்சிட்டிருந்தான். Would you like a drink?னு கேட்டான் 'Dinner?' அப்படீன்னேன் விளையாட்டா. ஓக்கே சொல்லிட்டான்."

"ஜப்பான்ல அந்த சுமோ வீரர்கூடப் போயி நூடல்னு நெனச்சி பாம்பத்தின்ன மாதிரி இங்க ஒண்ணுமில்லையே?"
மாமி செல்லமாய் முறைத்தாள்.

"ஒரு வழியா டவ்ன் டவுன் பாத்தாச்சு. ஒரு குட்டி டேட்டிங்கும் ஆயாச்சு." மாமி சலித்துக்கொண்டாள்.

"இல்ல இன்னும் நிறைய இருக்கு பாக்க. இங்க உள்ள உலகப் புகழ் ஃபீல்ட் மியூசியம், ஷெட் அக்குயேரியம் , ஹான்காக் கோளரங்கம் இதெல்லாம் கட்டாயம் பார்க்கவேணாமா?" உலக்கைப்பிள்ளை கேட்டார்.

"நாளைக்கு தமிழ் சங்க மீட்டிங் இருக்குதே." அந்துமதி சொன்னாள், "அடுத்தநாள் கிளம்பி எல்.ஏ"

"ஆமா மறந்தே போயிட்டேன்."

"திரும்ப வரும்போது ஒருநாள் கிடைக்குதே அப்ப பார்க்கலாம். சரி இங்க ஒரு நாள் ட்ரிப் வரும்போது என்ன பார்க்கலாம்?"

"கட்டாயம் சியர்ஸ் டவர்ஸ். கூட்டம் அதிகமாயிருந்தா அவாய்ட் பண்றது நல்லது. நேரே ஒரு குட்டி நடை போட்டு மில்லேனியம் பார்க். அங்கிருந்து கார்ல அல்லது டாக்சில நேவி பியர். நேவி பியர்லிருந்து சிக்காகோ ரிவர்ல ஒரு குட்டி போட் டூர். சிக்காகோவின் கட்டிடக்கலை பற்றி விளக்கும் டூர். பட்ஜட் அதிகமாயிருந்தா மதியும் நானும் போன க்ருயிஸ் போயிட்டு ஃபயர்வொர்க்ஸோட முடிக்கலாம். இல்ல ஐ-மேக்ஸ், ஜயண்ட் வீல்னு சிம்பிளா முடிக்கலாம்."

"அப்ப மியூசியமெல்லாம்?"

"அது இன்னொரு பக்கம் இருக்கு. ஒவ்வொண்ணும் குறைந்தபட்சம் அரை நாளாவது எடுக்கும். அதுக்கேத்தாப்ல ப்ளான் பண்ணணும். சிட்டி பாஸ் வாங்கிகிட்டு இங்க யார் வீட்டுலயாவது டேரா போட்டுட்டு நிதானமாவும் சிக்காகோவ பாக்கலாம்."

"பாத்தியா போற போக்குல நம்மளத் தாக்கிட்டாரு. உலக்கை.", மாமி சிரித்துக்கொண்டே சொன்னாள்.

"ஆனா எப்ப வந்தாலும் ஒரு அரை மணிநேரம் இன்டர்நெட்டில் மேஞ்சு ஃபயர்நொர்க்ஸ் இருக்கா, சர்க்கஸ் ஏதாவது ஓடுதா, ஐ-மாக்ஸ்ல என்ன படங்களிருக்குன்ற மாதிரி விபரங்கள் எடுத்துக்கிறது நல்லது. எந்த இடத்துக்குப் போனாலும் இது உதவும்."


நேப்பர்வில் வந்து இண்டியன் ஹார்வஸ்ட் உணவகத்தில் சாப்பாடு.

"ஆமா அதென்ன பேரு உலக்கைப்பிள்ளைன்னு?"அந்துமதி கேட்டாள்

"நான் சொல்றேன்", மாமி முந்தினாள்,"உங்கபேரு கைப்புள்ள உங்கப்பா பேரு உலகநாதன்.. 'உல' இனிஷியல். சரியா?"

"ஐயோ மாமி கடிக்காதீங்க. 'உலக்கைப்பிள்ளை' என் புனை பெயர். இணையத்துல புனை பெயர்ல எழுதுனா என்ன வேணா எழுதலாமே? உங்க கார்ட்டூன் மூஞ்சி மாதிரிதான் இதுவும்."

"அப்ப உங்க உண்மையான பேரு?"

"சிறில் அலெக்ஸ்".

Copyright © 2005 Tamiloviam.com - Authors