தமிழோவியம்
கட்டுரை : மௌனமே வார்த்தையாக
- லாவண்யா

ப்ரியமானவளே !

தினமும்
நீ எனக்கு
தரும் பரிசு என்ன

தெரியுமா?

உன்னிடம் பேசுவதற்காக
தேர்ந்தெடுத்து பின் முடியாமல்
நானே வைத்துக் கொள்ளும்
இந்த அழகிய வார்த்தைகள்

-- நன்றி நிலாரசிகன்


இக்கவிதையோடு ஒத்த உணர்வுகள் பின்வருமாறு.

தயக்கம்

இந்த கவிதையை படித்தவுடன் நமக்குள்ளே ஏற்படும் முதல் சிந்தனை தயக்கம். இவன் தன் காதலியிடம் தினம் பேச நினைக்கிறான் ஆனால் தயக்கத்தால் பேச வந்த வார்த்தைகளை தன்னுள்ளேயே வைத்துக் கொள்கின்றான். ஒரு காதலன் எப்போதெல்லாம் தன் காதலியிடம் பேச தயங்குகின்றான் பாருங்கள். அவளை சந்தித்து சில நாட்களே ஆன சமயம் "முன்னெ பின்னெ தெரியாத பிள்ளகிட்ட எப்படி பேசறது?" அவளை சந்தித்து சிறிது நாட்கள் ஆகிவிட்டன இப்போது வரும் தயக்கம் "அவளெ தெரியும் ஆன அவளுக்கு என் மேல இஷ்டம் இருக்கா தெரியலெ". அவள் சிறிது நட்போடு பழகுகின்றாள், நல்லதொரு தோழி. அப்போதும் தயக்கம் தான் இப்ப நான்அவளை விரும்பறேனு தெரிஞ்சா தப்பா நினைப்பாளோ? இப்பொழுது இருக்கும் தோழமையும் கெட்டுவிடுமோ?

ஆக அவன் தனது காதலை சொல்ல கடைசி நாள் வரை அவனுக்கு வாய்ப்பு கிடைக்கப்போவது இல்லை. "தயங்கிய காரியம் முயங்காது"


புரிதல்

என் நண்பர் ஒருவரின் கவிதை ஒன்று.

அதன் கவி வரிகள் நினைவில் இல்லை ஆனால் அதன் கரு பின் வருமாறு.

"என் எண்ணங்களை நான் எப்போது சொற்களால் வெளிப்படுத்துகிறேனோ அப்போதே அது செத்துப் போய்விடுகிறது"

இந்த கருத்து மிக ஆழமாக யோசிக்கபடவேண்டிய ஒன்றாகும். அதிகமாக பழகாதவர்களிடம் நாம் பேசும்போது  அளவுடன் பேசிப்பழக வேண்டும். நமது எண்ணங்களுக்கு அடுத்தவரும் அதே அளவு மரியாதை தருவார்கள் என்று சொல்ல முடியாது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கக்கூடாது. சில சமயம் நமது கருத்தால் நாம் அவமானப்படவும் நேரிடலாம். சில சமயம் நாம் சொல்ல நினைப்பதை சொல்லாமல்  நமக்குள்ளேயே வைத்திருந்தால் அதனால் ஏற்படும் தர்மசங்கடத்தை நம்மால் தவிர்க்க முடியும். அந்த கருத்தின் மரியாதையைக் காக்க முடியும்.

இதே சூழ்நிலை காதலர்களுக்கிடையே ஏற்படும்போது இந்த கருத்தை புரிதலாக கொள்ளல் வேண்டும். "சொன்ன வார்த்தைகள் எல்லாமே செத்த வார்த்தைகள் சொல்லாமல் விளங்கி கொள்ள முடியாத உன்னால்" "கண்ணோடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் எந்த பயனும் இல".ஒத்த அலைவரிசை கொண்டவாளாக இருந்தால், காதலனின் மனஒட்டங்களை உணர்ந்தவளாக இருந்தால் அவன் சொல்ல வருவதை சொல்லாமலேயே விளங்கிக் கொள்வாள். கண்ணதாசன் கூறுவது போல "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்ற புரிதல் இருந்தால் காதலன் என்ன நினைக்கிறான் என்பதை காதலி புரிந்து கொள்வதால் சொற்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் நேராது.


ஏற்றுக்கொள்ளல்

"நீ காற்று நான் மரம், என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன்"

-- நன்றி வைரமுத்து.


இப்படி ஒரு காதலன் காதலி இருந்தால் அவர்கள் காதல் மிக இனிமையாக அல்லவா இருக்கும்! இந்த அடிபணிதல் இருந்தால் அது காதலி காதலனிடம் அடிமை போல் இருக்கிறாள் என்ற அர்த்தமில்லை. அவளுக்கு அவன்மேல் அத்துணை நம்பிக்கை. அவன் எது செய்தாலும் அது அவள் நன்மைக்காகதான் இருக்கும் என்ற நம்பிக்கை. அவன் எதை செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளுதல். இப்படி அசைக்கமுடியாத நம்பிக்கைபோது. பேசவும் வேண்டுமோ? மௌனமே வார்த்தையாகும் அன்றோ.

வெறுப்பு

கருத்து வேறுபாடுக் கொண்ட கணவன், மனைவி. அந்த மனைவி கொஞ்சம் அழகானவள் ஆனால் நஞ்சு. அடங்காபிடாரி. திமிர் பிடித்தவள். அவளுக்கு தான் தேவலோக மங்கை என்ற நினைப்பு. தன் கணவன் தனக்கு பொருத்தம் இல்லாதவன் என்ற என்ணம் எப்பொழுதும். அவள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்னும் அளவிற்கு பிடிவாதம் கொண்டவள். கணவனை ஒரு மனிதனாகவே மதிக்க மாட்டாள். அடுத்தவர்கள் முன்பு கணவனை அவமானம் செய்வாள். எதைப் பேசினாலும் காது கொடுத்துக் கேட்க மாட்டாள். தானும் பேச மாட்டாள். அப்படிப்பட்டவளிடம் அவன் என்ன பேச முடியும். பேச தேர்ந்தெடுத்த வார்த்தைகளை வலுக்கட்டாயமாக  தன்னிடமே வைத்துக் கொள்ளவேண்டியது தான். அதை அவள் தந்த பரிசாக எண்ணி தன்னை தானே ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.


இயலாமை

கணவன், மனைவி அல்லது ஒர் காதலன், காதலி ஏன் நட்பிற்கும் கூட இப்போது நான் சொல்லபோகும் விசயம் பொருந்தும். ஒருவர் மற்றவரின் நம்பிக்கையை இழக்கும்விதமாக ஒரு பெரும் தவறு செய்ததாக கொள்வோம். அப்படி தவறு செய்தவர் திருந்தி வந்து மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்கும் மனப்பக்குவம் இல்லாமலோ அல்லது அக்குற்றம் செய்த தாக்கம் மிக பெரியதாக இருக்கும்பட்சத்தில், தவறு செய்தவர் தினமும் தன் தவறால் பாதிக்கப்பட்டவரை சமாதானம் செய்ய ஓராயிரம் வார்த்தைகளை தேர்ந்தெடுக்கலாம் ஆனாலும் அவை எதுவும் பயன் தராது.

இங்கே என் நண்பருடைய கவிதை ஒன்றும் நினைவிற்கு வருகிறது.


இப்படி நேருமென நீயும்கூட
எதிர்பார்த்திருக்க மாட்டாய்
ஆனாலும் நேர்ந்துவிட்டது

இதன் காரணகர்த்தாவாக

சொல்லிக் கொள்வோம்
நீ என்னையும் நான் உன்னையும்
உண்மை புரியும்போது
பேச முடியாத தூரத்தில்
இருக்கப் போகிறோம்
நம்மையும் இன்னும் சிலரையும்
ஏமாற்றிக் கொண்டு
 

இறுமாப்பு

என் கணவருடன் வேலை பார்க்கும் ஒரு நண்பர். எங்கள் குடும்ப நண்பர் அவர். எங்களது திருமணத்திற்கு முன்பிருந்தே அவரை எனக்கு தெரியும். அவருக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் எங்கள் வீட்டில் ஒரு நாள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் எனக்கு லைலா போல செல்லமான பெண் தான் வேண்டும் என்று சொன்னார். கல்யாணமும் நடந்தது. ஆனால் அவர் மனைவியோ சற்று குண்டானவர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு ஒத்துவரவில்லை. சின்ன விசயத்துக்கும் மனக்கசப்பு. இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அவர் மனைவியும் சிறு விசயங்களை எல்லாம் ஊதி, தன் வீட்டாரை அழைத்து பெரிதாக்கினார். ஆனலும் திருமண பந்தத்தினால் எப்படியோ சண்டையும் சமாதானமுமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் இதில் என்னை மிகவும் பாதித்தது ஒரு விசயம். அவர் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தார். அதற்காக எங்கள் வீட்டுக்கு வந்து என் கணவரிடம் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது நான் கேட்டேன் "வீட்டில் அவங்ககிட்டே இதெப் பத்தி பேசினீங்களா? என்று. அதற்கு அவர் "பாருங்க இதைப் பத்தி நான் எங்க அப்பாகிட்டெ பேசிட்டேன். பணம் தரப்போவது அவர்தான். அவகிட்டெ பேசவேண்டிய அளவுக்கு இதிலெ ஒண்ணும் இல்லெ. அவளை ஏன் கேட்கணும்? வண்டி வாங்கினதும் அவளை தானே அதில் கூட்டிக்கொண்டு போவேன்?" என்றார். என் கணவரின் நண்பராக அவர் இருந்ததால் அதற்கு மேல் நானும் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவளிடம் எதற்கு கேட்கவேண்டும், அல்லது கலந்தாலோசிக்கவேண்டும் என்ற இறுமாப்பு அவர் மனதில் இருக்கும் வரை அவர்களின் பிர்ச்சினைகள் இருந்துக்கொண்டேத்தான் இருக்கும். அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காதவரை அவர்களின் பிரச்சினையும் தீராது. அதனால் அவர்கள் பேசுவதிலும் எந்த அர்த்தமும் இருக்காது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors