தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : எதிர்பாராத தகைவு
- பத்மா அர்விந்த்


காலமறியாதவருக்கு காயேது கனியேது
ஞாலமறியாதவர்க்கு நாளேது பொழுதேது

செல்லும் பயணத்தில் திட்டமில்லை என்று சொன்னால் கல்லோடு முள்ளும் உன் காலை உறுத்திவிடும் என  கவிஞர் கண்ணதாசன் சொன்னதற்கொப்ப நாம் தினம் செய்யும் பல வேலைகளியும் திட்டமிட்டுதான் செய்கிறோம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஏதேனும் தடங்கல் வருகின்ற போது நாம் மிகவும் தகைவு (stress) கொள்கிறோம். அது சில சமயத்தில் கோபமாக மாறி நம் கட்டுப்பாட்டினுள் இருக்கும் உறவினரிடமோ, குழந்தைகளிடமோ காட்டுகின்றோம்.தகைவை கட்டுபடுத்தும் இரகசியம் நல்ல நினைவுகளை உங்கள் மனத்தோடு வைத்திருத்தல் மட்டும் இல்லை அவற்றை வாய்விட்டு சொல்வதும் கூட. இதனால் நீங்கள் சொல்வதை நீங்களே கேட்பதால் அது இன்னமும் ஆழமாக மனதினுள் தன் விளைவை ஏற்படுத்துகிறது. இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்தால் அது பிறகு தன்னாகவே (condition reflex)ஒரு போக்குவரத்து இடைஞ்சலில் இருக்கும் போதோ அல்லது குழந்தைகள் மீது பொறுமை இழக்கும் போதோ அதை நல்ல சூழ்நிலைக்கு மாற்ற உதவும்.

ஒரே முறை எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஒத்துவராது. உதாரணமாக போனவாரம் வீட்டு வாசலில் வந்து தொணதொணத்த விற்பனையாளரை சமாளித்த விதம் அடுத்த வீட்டுக்காரர் பேசும் போது உபயோகப்படாது. ஆனால் அது ஒரு வித தயக்கமின்மையை போக்குவதோடு எப்படி மனம் நோகாமல் விட்டு விலக வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்.

ஒரு பிரச்சினையை மூன்று நண்பர்கள் எதிர்கொள்வதாக வைத்துக்கொள்வோம். மூவருமே அதை ஒரே மாதிரி எதிர்கொள்ள மாட்டார்கள். ஒருவர் அதை நகைச்சுவையுடனும், மற்றவர் அதை தொழில் நுட்பத்துடனும் பின்னொருவர் அதை பொருளுடனுமோ சமாளித்திருக்க கூடும். அவரவர்க்கு எளிதாக வந்த வகையில் சமாளிப்பது தவறில்லை. வாழ்க்கையில் உள்ள, ஏற்படும் மாற்றங்கள் அதை சுவையாக்குகிறது. கீழே உள்ள சில வழிமுறைகளை பார்த்து அதை நீங்கள் எப்படி உபயோகிப்பீர்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். இது மனதின் ஆழ்நிலைக்கு சென்று, நாளை ஒரு பிரச்சினை வந்தால் உதாரணமாக நீங்கள் கிளம்பும் போது திடீரென வாகனத்தின் மின்கலம் செயலிழந்தால் அதை தகவடையாமல் எப்படி செயல் படுத்துவீர்கள் என்று யோசிக்க வைக்கும். எப்படியும் அடுத்த வீட்டுக்காரரையோ / AAA (Emergency Road Service company) ஐயோ கூப்பிட்டு jump start செய்ய வேண்டும். அதை தகைவடையாமல் கோபப்படாமல் செய்தால் அது இரத்த அழுத்தத்திற்கு  நன்மை  அல்லவா?

நம்முடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளல் (Attitude adjusters):

தகைவை (stress) கட்டு படுத்த சில என்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நல்ல முறையில் கவலைப்படுதல் அல்லது சிந்தித்தல்:  சிலருக்கு கவலை கொள்வது பிடித்தமான விஷயம். பள்ளியிலிருந்து பிள்ளை வரதாமதமானால், கணவனோ மனைவியோ அலுவலகத்திலிருந்து வர தாமதமானால் கவலை கொள்வார்கள். இந்த நிலையற்ற (restlessness) தன்மை ஒரு விதத்தில் இதயத்தை பாதிக்கிறது. மனைவியோ கணவனோ வர தாமதமானால், ஏதாவது விபத்து ஏற்பட்டிருக்குமா என்று கவலை கொள்ளாமல் அலுவலகத்தில் வேலை அதிகமாயிருந்திருக்கும் என்று நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.  இவ்வாறு நிலை கொள்ளாமல் இருப்பதை தடுக்க என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். அடுத்தமுறை அலுவலகத்தைவிட்டு கிளம்பும் முன் தொலைபேச சொல்லலாம். பிள்ளை பள்ளியில் அதிக நேரம் தங்குவது தெரிந்தால் சாப்பிட சில உணவுகளை அல்லது நொறுக்கு தீனிகள் கொடுத்து வைத்தால் க  ளைத்து போக மாட்டான்/ள் என்று சிந்திப்பது நல்ல பலன்களை தரும். வாகனம் மின்கலன் செயலிழந்து விட்டால் உதவி கிடைக்கும் வரை மனதை அலைபாயாமல் அடுத்த முறை கடைக்கு செல்லும் போது ஒரு jumper cable வாங்கி காரில் போட்டு வைக்க வேண்டும். இப்போது தொலை பேசி அலுவலகத்தில் தாமதமாக வருவதி சொல்வோம் என்று யோசிப்பது நன்மை பயக்கும்.

பிரச்சினை வரும் முன்னே திட்டமிடல்:  உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் வழிகளில் மாற்றுவழிகளை ஒருநாள் ஒய்வு நேரத்தில் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதனால் திடீரென சாலை பணி செய்பவர்கள் ஒரு வழியை அடைத்து விட்டால் அதற்காக அதிர்ச்சி அடையாமல், தகைவு கொள்ளாமல் வேறு வழியில் பயணிக்க முடியும். அதே போல குளிர் நாள் வருவதை அறிந்து அதற்கேற்ற உப்பு போன்றவற்றை வாங்கி வைத்து கொண்டால் பனி வந்த உடனே கடைக்கு ஓடி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம். ஆச்சரியங்களுடன் வரும் மாற்றங்கள் அதிக தகைவை தரும். குழந்தைகள்  உள்ள வீட்டில் குழந்தைகள் மருத்துவர், அ  வ சர உதவி எண்கள் போன்றவற்றை எழுதி வைத்திருப்பது அ வசியமும் கூட. மிக பெரிய நிறுவங்கள் கூட ஒரு புதிய பொருளை சந்தைக்கு கொண்டு வரும் முன் இது விற்பனை ஆகாவிட்டால் மாற்று வழி என்ன என்பதை யோசித்து வைத்திருப்பார்கள். எப்போதுமே மாற்று வழிகளும் இரண்டாவதாக செயல் படுத்த ஒரு வழியும் அறிந்து வைத்திருத்தல் முக்கியமாகும்.

மனத்தை சிந்தனையை ஒருமுக படுத்துவது:  ஒரு சுவாரசியம் இல்லாத கூட்டத்தில் அமர்ந்திருக்கும் போது அடுத்து முடிக்க வேண்டிய வேலைகள் உங்களை தகைவில் ஆழ்த்துமானால் நீங்கள் கட்டாயமாக கூட்டதில் கலந்து கொண்டே ஆ  க  வேண்டும் எனும் போது செய்ய முடிவது ஒன்றும் இல்லை. அதே சமயம் இந்த கூட்டத்தை நான் எவ்வாறு சுவாரசியமானதாக மாற்றுவேன் என்று சிந்தித்து, கூட்டதில் உள்ள குறைகளை எப்படி களைவேன் என்றும் சிந்திப்பது நாளையே நீங்கள் ஒரு கலந்துரையாடலை நடத்தும் போது உதவியாக இருக்கும். இல்லை எனில் மனதளவில் ஒரு விடுமுறை கொண்டாடுங்கள். நீங்கள் அதிகம் விரும்பிய ஒரு இடத்திற்கு கற்பனையில் பயணம் செய்து களிப்பதும், இல்லை எனில் நீங்கள் செய்ய வேண்டிய பணி குறித்து சிந்தனை செய்து அவற்றை குறிப்புகளாக எழுதிக்கொள்ளுங்கள்.

மாற்று சிந்தனை: இது  ஒரு பிரச்சினை வந்தால் அதை நல்ல முறையில் எப்படி பார்ப்பது என்பது தான். உதாரணமாக வாகனத்தின் tire காற்று போய்விட்டால், மலையில் நடக்காமல் இப்போதே நடந்தது நல்லதற்கு தான் என்றோ, விபத்து ஏற்பட்டுவிட்டால் சேதம் இந்த அ  ளவோடு போயிற்றே என்றும் யோசிக்க பழகுவது.  ரெய்ன்ஹோல்ட் நியுபர் சொன்னதன் படி “என்னால் மாற்ற முடியாத மார்றங்கள் ஏற்று கொள்ளும் பக்குவத்தையும், என்னால் மாற்றக்கூடியதை மாற்றும் சக்தியையும், இவை இரண்டுக்குமான வித்தியாசத்தையும் அறிந்து கொள்ள கூடிய அறிவையும் கொடு” என்று வாழக்கற்றுக்கொள்ளுங்கள்.

ஐந்து நிமிட கடிதம்:  உங்களுக்கு அதிக சினம் தரக்கூடிய நிகழ்வு ஏற்பட்டால் உடனே ஒரு காகிதம் எடுத்தோ அல்லது கணினியிலோ வேகமாக மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுங்கள். இதில் நீங்கள் பிழைகள் திருத்தவோ அதை நீக்க சிந்தித்தோ எழுத வேண்டாம். உங்களுக்கு சினததை உண்டு பண்ணியவர் எதிரில் இருப்பின் எப்படி பேசுவீர்களோ, அல்லது சாலை பணியால் ஏற்படும் சங்கடங்கள், அலுவல் தாமதம் போன்றவற்றை அந்த அதிகாரியிடம் பேச ச்ந்தர்ப்பம் வந்தால் என்ன சொல்வீர்கள் என்பதி அப்படியே எழுதுங்கள். வரைவதில் ஆர்வம் கொண்டவர் எனில் ஒரு வண்ண பென்சிலை எடுத்து தீட்டுங்கள். அதை படித்துப்பாருங்கள். மனதில் உள்ள அனைத்தும் கொட்டி எழுதி ஆகிவிட்டதென்றால் அதை போட்டு மூடிவிடுங்கள். இப்போது மனம் சற்றே தெளிவடைந்து விட்டதை உணர்வீர்கள். மற்ற பணியில் கவனம் செலுத்துங்கள். இது மனதிலேயே சினத்தை தகவை மூடி போட்டு புழுக்கமாக வளர்ப்பதை தடுக்கிறது. பல நாட்கள் கழித்து எடுத்து பார்த்தால் உங்களுக்கே அது சிரிப்பை வரவழைக்கும் என்பதோடு மட்டும் இல்லை மாறு பட்ட கோணத்தில் சிந்திக்கவும் வைக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors