தமிழோவியம்
மேட்ச் பிக்சிங் : இலங்கையின் ஹீரோ, உலக கிரிக்கெட்டின் வில்லன்?
- பத்ரி சேஷாத்ரி

பருவமழை கொட்டும் கலுத்தரா, இலங்கையிலிருந்து இந்த வாரக் கட்டுரை உங்களை வந்தடைகிறது.

போன வாரம் நான் கேட்டிருந்த கேள்விக்கு சரியான விடையை முதலில் கொடுத்தது நாமக்கல்லிருந்து ராஜா. அவருக்கு விஸ்டன் கிரிக்கெட்டர்'ஸ் அல்மனாக் 2004  தபாலில் போய்ச்சேரும்.

ராஜா தன்னுடைய கடிதத்தில் கிரிக்கெட் கவரேஜ் பற்றிப் பேசும்போது மற்ற சில அம்சங்களைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பிட விட்டுப்போனது பந்தின் வேகத்தைக் கணக்கிடும் கருவி (Speed gun), எல்.பி.டபில்யூ பட்டை, ஹாவ்க் அய் (Hawk Eye) என்னும் பந்தின் வீச்சுப் பாதையை முப்பரிமாணத்தில் காட்டும் நுட்பம் ஆகியவை. பந்தின் வேகத்தை லேசர் துப்பாக்கித் தொழில் நுட்பம் மூலம் கணக்கிடுகிறார்கள். இதுபோலத்தான் நெடுஞ்சாலைகளில் வேகமாகப் போகும் வண்டிகளின் வேகத்தையும் கணக்கிடுகிறார்கள். இது கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் தொலைக்காட்சி கவரேஜில் இருந்து வருகிறது. ஆனால் இதன் நம்பகத்தன்மை சற்றே குறைவு. பந்தின் வேகம் பலமுறை இந்த ஸ்பீட் கன்னால் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் பந்து வீசப்படும் கோணம், பந்தின் உயரம், பந்து எழும்புகிறதா, இறங்குகிறதா என்பதை சரியாகக் கணக்கிட முடியாதது ஆகியவை. அடுத்ததாக எல்.பி.டபில்யூ பட்டை. ஒரு அசையா இன்ஃப்ரா ரெட் கேமரா மூலம் இரண்டு ஸ்டம்புகளுக்கும் நேர் கோடாகப் படம் எடுத்து அதனை மற்ற கேமரா படங்கள் மீது படுமாறு செய்யும்போது பந்து காலில் எங்கு படுகின்றது என்பதைக் காண முடிகிறது.

இதிலும் பந்து எவ்வளவு தூரம் எழும்புகிறது என்பதை சரியாகக் கணிக்க முடியாது. இது முற்று முடிவான ஒரு தீர்ப்பைக் கொடுக்காது. நடுவர்களுக்கு இந்தப் படம் காண்பிக்கப் பட மாட்டாது. இலங்கையில் 2002இல் நடந்த ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியின் போது மட்டும் மூன்றாவது நடுவர் எல்.பி.டபில்யூ பற்றிய தீர்ப்பை அளிக்கலாம் என்று சோதனை முறையில் செய்து பார்த்தனர். பின்னர் இது கைவிடப்பட்டது.

அதன் பின்னர், இப்பொழுது ஹாவ்க் அய் தொழில்நுட்பம் வந்துள்ளது. இதுவும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் ஒரு விவாதத்தை உண்டு பண்ணவே ஒழிய நடுவர்களும் வீரர்களும் இதனால் இப்பொழுதைக்கு எந்தப் பலனும் அடைவதில்லை. ஹாவ்க் அய் என்பது பல கேமராக்களை வைத்து பந்தின் பாதையை பின்பற்றி, கணினிகளின் மூலம் இடைப்பட்ட பாதையை முப்பரிமாணத்தில் interpolate செய்வது. இது எத்தனை தூரத்திற்கு சரியான தகவல் தருகிறது என்பதை சோதனை முறையில் யாரும் கண்டதில்லை [ஹாவ்க் அய்ந்தக்காரர்களைத் தவிர].

இதற்கெல்லாம் மேலாக உருப்படியான, செலவு குறைந்த வழி ஒன்றிருக்கிறது. அது பந்திற்குள் ஒரு மைக்ரோ சிப்பைப் பொறுத்துவதுதான். ஐஸ் ஹாக்கி 'பக்' உள்ளே இதுபோன்ற சிப் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மிக வேகமாக செலுத்தப்படும் மிகச் சிறிய பக் எங்கெல்லாம் போகிறது என்பதை தொலைக்காட்சித் திரையில் காண முடியும். அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்த மைக்ரோசிப் பொறுத்துவதற்கான மிக முக்கிய காரணியாகும். நாளையே ஏதாவது ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஐசிசியை வற்புறுத்தி இந்த வேலையைச் செய்யலாம்.

O

முரளிமுரளிதரனைப் பற்றிப் பேச நினைத்தோம். வேறெதையோ பற்றிப் பேசுகிறோம். ஒரு சிலர் விட்டால் முரளியின் உடம்பில், கையின் ஏதாவது மைக்ரோசிப்பை வைத்து அது எப்படியெல்லாம் பந்து வீசும்போது வளைகிறது என்பதைப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று தோன்றுகிறது.

கொழும்பில் வழிக்கும் சாதாரண மக்களுக்கு ஆஸ்திரேலியர்கள் மீது அளவு கடந்த கோபம். ஆஸ்திரேலியப் பிரதமர் எப்படி முரளியைப் பற்றி தவறாகப் பேசலாம் என்று பொருமுகிறார்கள். 'Murali chucks Australia' என்கிறது ஒரு பத்திரிகை. சிலர் ஒருபடி மேலே போய், இந்தியா, இங்கிலாந்து என்றால் சிட்னி, மெல்போர்ன், பெர்த், அடிலெய்ட் என முக்கிய நகரங்களில் விளையாடவும், இலங்கை என்றால் டார்வின், கேய்ர்ன்ஸ் போன்ற முன்னே பின்னே பெயர் தெரிந்திருக்காத இடங்களில் விளையாடவும் செய்கின்றனர் என்று வருந்துகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்த மாதங்களில் டார்வின், கேய்ர்ன்ஸ் போன்ற இடங்களில்தான் விளையாட முடியும். போன வருடத்திலிருந்து ஆஸ்திரேலியா மேற்குறிப்பிட்ட இடங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது. முதலில் பங்களாதேஷ். இப்பொழுது இலங்கை.

முரளி என்றாலே இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவித தற்காப்பு உணர்ச்சி மேலோங்கப் பேசத் தொடங்குகின்றனர். இதன் உச்சக்கட்டம் இலங்கைப் பிரதமர் மஹிந்தா ராஜபக்சே ஐசிசியை எதிர்த்து நீதிமன்ற வழக்குப் போடுவேன் என்றது. பின்னர் முரளியின் 'தூஸ்ரா'வை அங்கீகரிக்க வேண்டும் என்றது. முரளியை தேசியச் சொத்து என்றெல்லாம் சொன்னது. இலங்கை போன்ற சிறிய நாட்டில், கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக வளர்ச்சி ஏதும் இல்லாத நாட்டில், கடுமையான உள்நாட்டுப் போராட்டத்தில் பல உயிர்களை இழந்து, எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பயத்தில் வசிக்கும், அரசியல்வாதிகளின் மீது முழுதுமாக நம்பிக்கையற்றுப் போன மக்களின் வாழ்க்கையில் ஒரு பிடிப்புக்காக ஹீரோக்கள் தேவைப்படுகின்றனர். அந்த ஹீரோ முரளிதரன்.

அந்த ஹீரோவின் மேல் அவதூறு பேசுபவர்கள் என்ன சொன்னாலும் அது தவறாகத்தான் இருக்கும். ஷேன் வார்ன் 'Murali has a thin skin' என்று சொன்னால் பொங்குகிறது கோபம். விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லும்போது எங்கள் வண்டி ஓட்டுனர் ஷேன் வார்ன் என்ன சொன்னார் என்பதே தெரியாமல், 'என்னவோ சொல்லி விட்டார்' என்று உணர்ச்சிவசப்படுகிறார்.

(புலிகள் கையில் இல்லாத) இலங்கை மக்களிடம் இப்பொழுதைக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தி இலங்கை வரலாற்றில் அதிக சாதனை படைத்த, அதிகம் பேரால் அறியப்பட்ட, மிக முக்கியமான மனிதர் யாரென்று கேட்டால் முதல் இடம் முரளிதரனுக்குத்தான் கிடைக்கும். அந்த வகையில் இலங்கையின் முரளி, இந்தியாவின் டெண்டுல்கருக்கு பல படிகள் மேலே. ஆனால் இதனால் முரளியின் பந்துவீச்சு கிரிக்கெட் சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்று பிறரை நம்ப வைக்க முடியாது. இலங்கைக்கு வெளியே உள்ளவர்களில் பெரும்பாலோனோர் (பிஷன் சிங் பேடி அளவிற்குப் போகாவிட்டாலும்) முரளியின் பந்துவீச்சில் குளறுபடி உள்ளது என்றே சொல்வார்கள். நானும் அந்தக் கட்சிதான்.

இப்பொழுது இந்தியாவில் வளர்ந்து வரும், பதினெட்டு வயதிற்குக் குறைந்த பல ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசுவதில்லை. அவர்களது ஆக்ஷனில் முரளியைப் போன்றே ஒரு 'வெட்டு' (jerk) உள்ளது. அதை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் உடனடியாக கவனிக்காமல் விடுவதால் பின்னாளில் பெரும் கெடுதல் நேர்கிறது. முரளியை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காமல் விட்டதால் இன்று உலக கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பின்னரும் கூட, ஐசிசி கண்காணிப்புப் பட்டியலில் இடம் பெறக்கூடிய அளவிற்கு ஒரு அவமானம் நிகழ்ந்துள்ளது. இப்பொழுது கூட ஐசிசி இந்த விஷயத்தை சரியாக முடிவுசெய்யாவிட்டால் பல இளம் ஆஃப் ஸ்பின்னர்கள் தாங்களும் தவறான ஆக்ஷனில் பந்து வீசலாம் என்றும், தங்கள் ஆக்ஷனை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கருதக்கூடும். அதன் விளைவு - இலங்கையின் சரித்திர நாயகன் உலக கிரிக்கெட்டின் வில்லனாக ஆகிவிடக் கூடும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors