தமிழோவியம்
தராசு : பிரச்சனைக்குத் தீர்வு போராட்டமா?
- மீனா

சென்ற வாரம் முழுக்க நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கூட்டணி - எதிர்கட்சிகள் உண்ணாவிரதம், கடை அடைப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும், விலையேற்றங்களையும் அறிந்தும் கூட இக்கட்சிகள் இப்படி போராட்டம் நடத்துவது மக்கள் மத்தியில் தங்களை நல்லவர்களாக - மக்களுக்காக தங்கள் கட்சி தான் உண்மையாகப் பாடுபடுவதைப் போலக் காட்டிக்கொள்ளவே அன்றி வேறு எதற்கும் இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 4 1/2 மடங்கு உயர்ந்துள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கு அறியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயல். அதைத்தான் ஆளும் கட்சி செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாகும். இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த உண்மையை ஒத்துக்கொள்ளாமல் உள்ளூரில் வசூலிக்கும் விற்பனை வரி, எக்சைஸ் வரி ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல.. ஏற்கனவே பல இலவசத்திட்டங்களால் தடுமாறிக்கொண்டிருக்கும் அரசின் கஜானாவை சுத்தமாக திவாலாக்க உதவும் இந்த மாதிரி யோசனைகள். தொழிலார்களுக்காகவு ஏழை மக்களுக்காகவும் பாடுபடுவதாக கூறும் மாக்சிஸ்ட் கட்சியினர் தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்சனையின் போது மக்களிடம் நடந்துகொண்ட அராஜகத்தை இன்று வரை யாரும் மறக்கவில்லை.

இன்று ஆளும் கட்சியாக இருப்பவர் செய்வதை எதிர்கட்சியில் இருப்பவர் குறைகூறுவதும் நாளை ஆளும் கட்சியாக அவர்கள் வரும்போது எதிர்கட்சியாக இருக்கும் இவர்கள் குறை கூறுவதும் நிற்காத காட்சிகள். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படும்போது ஒருவரை ஒருவர் குறை சொல்வதை விடுத்து ஆக்கப்பூர்வமாக ஒருமித்து செயல்பட தோதான யோசனைகளை எதிர்கட்சிகள் வழங்க முன்வருமேயானால் - அதை திடசித்தத்துடன் ஆராய்ந்து அதிலுள்ள நன்மைகளைப் பட்டியலிட்டு அந்த யோசனைகளை செயல்படுத்த ஆளும் கட்சி முன்வருமேயானால் மக்கள் தப்பிக்கலாம். ஆனால் அதைச் செய்ய எந்த அரசியல்வாதியும் முன்வரப் போவதில்லை.. ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்தால் தானே அவர்கள் பிழைப்பு நடக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors