தமிழோவியம்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : கின்னஸ் சாதனை
-

"அண்ணாச்சி ஒருவழியா கலாம் போட்டிபோடமாட்டேன்னுட்டாரா?" அன்றைய டீ கடை அலசலை மணி துவக்கினான்.

"ஆமாப்பா. நல்ல டிராமா. ஆனா மூணாவது அணின்னு ஒண்ணு இருக்குதுங்கிறத இந்தியாவுக்கு சொல்லிட்டாங்க."

"எப்டி?"

"கலாம திரும்ப யோசிக்க வச்சது அவங்கதானே. அவங்க கூட்டா செய்ற முதல் அரசியல் தடாலடி இதுதான்."

"அப்ப அதுல தோத்துட்டாங்களா?"

"அவங்க கலாம திரும்பவும் யோசிக்க வச்சதுல மத்தவங்கெல்லாம் கொஞ்சம் ஆடித்தான் போனாங்க. கூடவே பிரதீபா பட்டீலுக்கு ஆதரவு அதிகமாயில்ல. சோனியாவோட ஆளுங்கிறது மட்டுந்தான் அவங்களுக்கு பலமாயிருக்குது."

"குடியரசுத் தலைவரால என்ன செய்ய முடியும் அண்ணாச்சி?"

"நாம நினைக்கிறது போல இல்லப்பா. அவருக்கு இறுதி முடிவெடுக்கிற அதிகாரெமெல்லாம் இருக்குது. ஆனா பொதுவா பயன்படுத்துறதில்ல. 'அதிகாரமில்லை'ங்கிறதெல்லாம் உண்மையில்ல. சொல்லப்போனா தன்னோட அரசியல் எதிர்காலத்தப் பத்தி கவலையில்லாம முடிவெடுக்க அவங்களால மட்டுந்தான் முடியும்."

"கலாம் அப்டி முடிவெடுத்திருக்காரா?"

"எனக்குத் தெரிஞ்ச வகையில சோனியா பிரதமர் ஆகக்கூடாதுங்கிறத உறுதி செஞ்சது அவர்தான்."

"ஓகோ."

"நம்ம அழகிய திருமகன் விஜய் ஜூன் 22 பிறந்த நாள் கொண்டாடியிருக்காரு. யாரும் கட் அவ்டு போஸ்டர்னு செலவு செய்யக் கூடாதுண்ணும் அந்தக் காசுல ஏழைங்களுக்கு உதவணும்னும் அறிக்க விட்ருக்காரு, தம்பி."

"இதெல்லாம் ஸ்டண்டு அண்ணாச்சி." மணி சிரித்தான்.

"சரிதான். ஆனா இத விஜயோட ரெண்டு ரசிகர் மன்றங்கள் பின்பற்றுராங்கண்ணு வையி. அதுவே போதுமானதாச்சே."

"ஆமா ஆமா. எங்க தலைவர் சொன்னா நாங்களும் செய்வோம்ல?"

"அதான் பாயிண்ட் உங்க தலைவர் சொல்லலியே?"

"அவர் சொல்லமாட்டாரு செய்வாரு."

"ஆளாளுக்கு பஞ்சு டையலாக் பேச ஆரம்பிச்சுட்டீயளேப்பா. இதுபோல உணர்ச்சி வசப்பட்டு அவனவன் அரசியல் தலைவர்களையெல்லாம் சாமியா வரஞ்சு வச்சிருக்கான்."

"புதுசா யார?"

"உத்ரப் பிரதேசத்துல சோனியாவ துர்காதேவியா வரஞ்சு வச்சிருக்காங்க. அதுல ஒரு அலை எழும்பி அடங்குறதுக்குள்ள மத்தியப் பிரதேசத்துல ராணி லக்ஷ்மிபாயா வரஞ்சு வச்சிருக்காங்க. ரெண்டுக்கும் பயங்கர எதிர்ப்பு. மத்த்தியப் பிரதேச மூணு எமெல்ஏக்கள தூக்கிட்டங்க சோனியா."

"தலவலிதான்."

"ம். ஆந்திராவுல ஆர்வக் கோளாறுல ஒரு விஷயம் செஞ்சிருக்காங்க. முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கு தர்றோம்ணு சொல்லிட்டு அவங்களுக்குள்ளால 12 சாதிகள வகைப்படுத்திருக்காங்க. இதுக்கெதிரா பத்வா போட்டு இஸ்லாம்ல சாதியே கிடையாது அதனால இப்டி செய்யுறௌ தப்புண்ணு சொல்றாங்க."

"சாதி இல்லாம எப்டி வகைப் படுத்த முடியும். ஏதாவது ஆதாரம் இல்லாம திடீர்னு எப்டி?"

"புரியுது. எழுதி வச்சிருக்குற சட்டத்துக்கும் எழுதாத நடைமுறை சட்டத்துக்கும் அகால தூரமிருக்குது. எல்லாரும் சமம்ணு சொல்லி சட்டம் சொல்லுது ஆனா வீட்ல வேல பாக்குறவங்கள யாராவது முதலாளி சமமா நடத்துவானா? ஆனா அரசாங்கமே இப்படி ஒரு தவற செய்யக்கூடாது. சாதிய சட்டமாக்குற முயற்சியில்லையா இது?"

"அப்ப சாதி அடிப்படையில இட ஒதுக்கீடத் தரலண்ணா சாதி அழிஞ்சும்ணு சொல்றீய?"

"நிச்சயமா இல்ல. சாதி இட ஒதுக்கீட்டையெல்லாந்த் தாண்டிய ஒரு சமூக விஷயம். அத அழிக்கிறது சமூக மாற்றத்தாலதான் முடியும். ஆனா இட ஒதுக்கீடு முடிஞ்சவரைக்கும் பொருளாதார அடிப்படையில உருவாக்கப்படணும். இருக்கிற சட்டங்கள்ல இந்த திருத்தத்த கொண்டுவர்றது அரசியல் ரீதியா முடியாது. ஆனா புதுசா கொண்டுவர்ற சட்டங்கள்லேயாவது அதக் கொண்டுவரலாம்ல."

"ஆமா. சரிதான். மதுரை மேற்குபத்தி..?"

"வழக்கம்போலத்தான் தேர்தல் நேர நாடகமெல்லாம் நடக்குது. தேர்தல் தள்ளிவைப்புன்னு ஒரு சின்ன நாடகம் அதுல கலைஞர் உயிர விட்டுருவேன்னு ஒரு மிரட்டல்."

"அது வதந்தியாமே" மணி சொன்னான்.

"அப்டியா? சரி. தேர்தல் கமிஷன் கருத்துக் கணிப்பு பத்தி புதுசா சில ரூல்களப் போட்டிருக்கு."

"ரெம்ப நல்லதாச்சே."

"ம். நான் முன்னாலேயே சொல்லியிருக்கேன். ஒரு கருத்துக் கணிப்போட வலிமை எத்தனபேரொட கருத்துக்கள எடுத்திருக்கிறாங்க. எந்த மாதிரி கேள்வி கேக்குறாங்க, சதவீதங்கள எப்டி கனக்கு போடுறாங்கண்ணு பலவிதமான விஷயங்களோட அடிப்படையில இருக்கு. இதையெல்லாம் மறைச்சிட்டு வெறுமனே முடிவுகள வெளியிட்டா அது கருத்துக் கணிப்பில்ல."

"ஆமா அண்ணாச்சி. அரசியல உட்டா வேற செய்தியே இல்லியா?"

"பீகார்ல ஒரு மூணுவயசுக் கொழந்தமேல கிரிமினல் வழக்கு போட்ருக்காங்க."

"அடப் பாவிகளா?"

"ஆமா மத ஊர்வலத்துல சண்டையாம் அதத் தூண்டிவிட்டதாகவும் கொலை செய்யத் தூண்டியதாகவும் வழக்கு."

"அடடா."

"பெயரல ஏதாவது குழறுபடி இருக்கும்ணு காவல் துறை நம்புதாம்."

"அதுசரி. கவனமாத்தான் இருக்கணும்போல."

"இன்னொரு எடத்துல கவனமா இருக்கணும்னு சிசேரியன் வெவகாரம் சொல்லுது. திருச்சி பக்கத்துல ஒரு டாக்டர் அம்மா அப்பா 15 வயசுப் பையன வச்சி சிசேரியன் ஆப்பரேஷன் பண்ணியிருக்காங்க."

"அடப்பாவமே."

"உலக சாதனைக்கு முயற்சியாம். மொதல்ல இதப்பத்தி யாரும் ஆக்சன் எடுக்கல. அப்புறமா கலெக்டர் ஆய்வுக்கப்புறம் ரெண்டுபேரையும் உள்ள போட்டிருக்காங்க. இதுவரைக்கும் எம் பையன் கலக்கலா சிசேரியன் செஞ்சுட்டான்னு சொல்லிட்டிருந்த டாக்டர் இப்ப நாந்தான் செஞ்சேன் எம் பையன் கூட இருந்தான் அப்டீன்னு சொல்லியிருக்காரு."

"அந்தர் பல்டி."

"ஆமா. கோயிலக் கழுவுற விவகாரம் ஒண்ணு ராமேஸ்வரத்துலேயும் நடந்திருக்கு மணி."

"அடடா."

"லோக்கல் முஸ்லிம் எமெல்ஏ கோயிலுக்குள்ள வந்தது தப்புண்ணு சொல்லி பூஜையெல்லாம் நடத்தியிருக்காங்க. பாஜக ஆளுங்க ரெம்ப தீவிரமா செயல்பட்டிருக்காங்க இதுல. தமிழ் சினிமா உலகத்துல ஒரு சோகமான செய்தி."

"டைரக்டர், கேமராமேன் ஜீவா எறந்ததத்தானே சொல்றீங்க?"

"ஆமா. நல்ல படம் தந்தவரு. சின்ன வயசுலேயே போயிட்டாரு."

"ஆமா அண்ணாச்சி."

"மணி. இன்னும் ரெண்டு மூணு நியூஸ் இருக்குது ஆனா நேரமில்ல. அடுத்தவாரம் பாப்போம்பா." அண்ணாச்சி விடைபெற்றார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors