தமிழோவியம்
தராசு : இம்சை தரும் இடதுசாரிகள்
- மீனா

காங்கிரஸ் கட்சியினர் இடது சாரிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி அமைத்த நாள் முதலாக தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கட்சிகள் காங்கிரஸ¤க்கு ஏற்படுத்துகிறார்களோ இல்லையோ, இடதுசாரிக் கட்சிகள் தினமும் நெருக்கடி கொடுத்தவாரே உள்ளனர். "மத்திய அரசு மக்களைப் பாதிக்கும் விதமாக எடுக்கும் முடிவுகளை நாங்கள் எதிர்கிறோம். இதைத் தெரிவிக்கும் வகையில் நாங்கள் இனி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை!" என்று இடதுசாரித் தலைவர்கள் ஏ.பி.பரதன், அபானிராய் உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் இதன் காரணமாக காங்கிரஸ¤க்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவதைப் பற்றி கேட்டதற்கு பொறுப்பான பதில் ஒன்றையும் கூறாமல் மழுப்பியுள்ளார்கள் இத்தலைவர்கள்.

ஏதோ மக்களின் நலன் ஒன்றே தங்கள் குறிக்கோள் என்று காட்டிக்கொள்ளும் இடது சாரிகளின் உண்மையான குறிக்கோள் எந்த அரசு ஆண்டாலும் அந்த அரசுக்கு தங்களால் முடிந்த வரை குடைச்சல் கொடுப்பது ஒன்றே. இதற்கு ஏற்றவகையில் ஆட்சியில் தங்கள் கட்சியினர் பங்கேற்காதவாறு பார்த்துக்கொள்ளும் இந்த இடதுசாரிகள் சில நேரங்களில் மக்களின் ஆதர்ச அத்தியாவசிய தேவைகளுக்கு குரல் கொடுத்தாலும் பல நேரங்களில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் பல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் போடுவதும், ஆளும் அரசை "கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்" என்று கூறி மிரட்டுவதும் மக்கள் மத்தியில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக ஏற்படும் சிக்கல்களையும், பணப்பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில் மாநில அரசுகள் இலவச மின்சாரம் வழங்குவதைப் பற்றி பரிசீலனைச் செய்ய வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளுக்கே இடது சாரிகள் ஆர்பாட்டம் செய்வது நிச்சயம் அரசியல் அரங்கில் தங்களுக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ளவே அன்றி வேறு ஒன்றும் இல்லை என்று தோன்றச்செய்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வது விவசாயிகள் என்ற போர்வையில் இருக்கும் பணக்கார நிலச்சுவாந்தார்கள் தான் என்பது புரியாதா?

ஏகப்பட்ட இலவச சலுகைகள் வழங்குவதால் தான் இந்தியா இன்னமும் பொருளாதாரா நிலையில் முன்னேறாமல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது உலக வங்கி. மக்களுக்கு சலுகைகள் அளிக்கவேண்டியது தேவைதான். ஆனால் எதற்கெடுத்தாலும் சலுகை என்ற பெயரில் கஜானாவைக் காலி செய்வது எவ்விதத்தில் உசிதம்? மாறிவரும் பொருளாதாரா சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று உலக நாடுகள் அனைத்தும் கூறிவரும் இவ்வேளையில், சலுகை என்ற பெயரில் சில பணமுதலைகள் மேலும் கொழுக்க இடதுசாரிகள் துணைபோகலாமா?

கம்யூனிச கொள்கைகள் உலக அளவில் மங்கி வரும் இந்நாட்களில் இந்திய இடதுசாரிகள் தொட்டதெற்கெல்லாம் ஆர்பாட்டம் என்ற நிலையை விட்டொழித்து, நாட்டு மக்களின் உண்மையான நலனில் அக்கறையுள்ள நிஜமான மக்களின் தோழன் என்ற நினைப்பில் மக்களின் அத்தியாவசிய தேவை எதுவோ அதை மட்டும் மத்திய மாநில அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் அமைப்பாக செயல்படவேண்டும். இல்லையென்றால் கம்யூனிஸ்டுகளின் கலாட்டாவிற்கு மதிப்பே இருக்காத நிலை வெகுவிரைவில் உருவாகும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors