தமிழோவியம்
தராசு : பார்லிமெண்டும் விவாதங்களும்
- மீனா

தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் நாட்டுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் "பார்லிமென்ட் புனிதமான அமைப்பு. அங்கு ஆக்கப்பூர்வமான விவாதம், விமர்சனம் நடைபெற வேண்டும். அதை மதிக்க வேண்டும். அது தான் ஜனநாயகத்திற்கு மிக முக்கியம். பார்லிமென்ட் கூட்டம் அமைதியாக நடைபெற எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வரை இதே காங்கிரஸ் கட்சி எதிர் வரிசையில் அமர்ந்திருந்தபோது பாராளுமன்றத்தை எவ்வாறு நடத்த அனுமதித்தார்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அத்வானியின் மீதான அயோத்தி குற்றச்சாட்டுகளின் போதும், தெகல்கா ஊழலின்போதும், மற்றும் பல விஷயங்களிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பல நாட்கள் பாராளுமன்றம் நடக்கவே முடியாத அளவிற்குப் போராட்டம் செய்து பாராளுமன்ற அவை நடவடிக்கைகளை முடக்கினார்கள். தற்போதைய எதிர்கட்சியான பா.ஜனதாவும் அதையே வெற்றிகரமாக செய்து வருகிறது.

யார் எங்கே தவறு செய்தார்கள்? அதை எவ்வாறு திருத்துவது? இதனால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? போன்ற எந்த ஒரு காரணத்தையும் சிந்திக்காமல், கூடிப் பேசாமல் - எடுத்ததற்கெல்லாம் போராட்டம் செய்வது ஒன்றே தங்கள் லட்சியம் என்ற எண்ணத்தில் அரசியல் கட்சிகள் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது அருவருப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு - உணவு - பராமரிப்பு போன்ற பல விஷயங்களுக்காக கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் அளவிற்கு அரசு செலவு செய்கிறது. இதைத் தவிர எம்.பி.க்கள், மந்திரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாதா மாதம் கணிசமான தொகையைச் சம்பளமாக அரசு வழங்கி வருகிறது. இந்தப் பணம் மக்களின் வரிப்பணம்.

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நமது கோரிக்கை இதுதான் - ஆளும் கட்சியோ, எதிர் கட்சியோ தயவு செய்து மற்றவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதைச் சற்று காது கொடுத்துக் கேளுங்கள். பாராளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்வதில் நீங்கள் காட்டும் தீவிரத்தில் கொஞ்சமாவது அதற்குள்ளேயிருந்து மக்களுக்காக சில நல்ல வேலைகளைச் செய்வதில் காட்டுங்கள். பார்லிமெண்டில் நடக்கும் விவாதங்கள் மற்றும் கூட்டத் தொடர்களின் அடிப்படையிலேதான் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன - மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யத் தேவையான சட்டதிட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இயற்றப்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். தேவையற்ற காட்டுக்கூச்சல் போடுவதாலும், வெளிநடப்புச் செய்வதாலும் நீங்கள் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை. காலம் பொன்னானது என்னும் பழமொழிக் கேற்ப பாராளுமன்றம் கூடும் போது கிடைத்த நேரத்தை நல்ல காரியங்கள் செய்யப் பயன்படுத்துங்கள். இதையெல்லாம் செய்வதற்கு முன்னோடியாக நீங்கள் எதிர்கட்சி உறுப்பினராக இருந்தால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சொல்ல வருவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். ஆளும் கட்சியாக இருந்தால் எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடுங்கள். ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால் பிரச்சனைகளுக்கு இடமே இருக்காது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors