தமிழோவியம்
வானவில் : கஜேந்திரனும் போதனாவும்
-

ஆந்திரப் பிரதேசத்தில் மிகச் சிறந்த கவியாக விளங்கியவர் போதனா. அவருடைய பாடல்கள் பக்தி மிகுந்ததும், எளிய சொற்கள் நிறைந்தும் இருக்கும். அவருடைய தமையனார் சித்தனா அதேப் போலப் புலமை மிகுந்த கவிஞர். ஆனால் அவருக்கு எளிய கவிதைகள் பிடிக்காது. சம்பிரதாய முறைப்படி, இலக்கணப்படி, கடினமான சொற்களை வைத்துத்தான் எழுதுவார்.

கஜேந்திர மோட்சம் என்ற தலைப்பில் போதனா ஒரு கவிதை நாடகம் எழுதி இருந்தார். அதில் கஜேந்திரன் என்ற யானை முதலை வாயில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடுவதையும், பகவான் அங்கு ஓடோ டி வந்து முதலையைக் கொன்று பக்தனான அந்த யானையைக் காப்பாற்றுவதைப் பற்றியும் அழகாக எழுதி இருந்தார். கஜேந்திரனின் வேதனையை வருணிக்கும்போது, " பகவான் மகாவிஷ்ணு தேவி மகாலட்சுமியுடன் சொக்கட்டான்
ஆடிக்கொண்டிருந்தார். திடீரென்று அவருடைய கைவிரல்கள் ஆடாமல் நின்று விடுகின்றன. எதையோ காது கொடுத்துக் கேட்கிறார். ' சுவாமி! ஏன் ஆட்டத்தை நிறுத்திவிட்டீர்கள்? என்ன நடந்தது?' என்று கேட்கிறாள் மகாலட்சுமி. பகவான் பதில் சொல்லவில்லை. எழுந்து ஓடுகிறார். கிரீடம் அணியவில்லை. உத்திரீயம் நழுவி ஓடுவதைக் கவனிக்கவில்லை. கச்சையில் தங்க நிறப்பட்டை நழுவியதையும் பொருட்படுத்தவில்லை. கருடவாகனம் கூட இன்றி, பரபரப்புடன் பூமியை நோக்கி விரைந்து ஓடுகிறார். கஜேந்திரனின் அபயக் குரல் மட்டுமே அவரது காதில் விழிந்தது. மற்ற எதையும் அவர் கவனிக்கவில்லை.. " என்று எழுதியிருந்தார் போதனா.

தமையனாருக்கு இதைப் படித்ததும் மிகுந்த கோபம் வந்துவிட்டது. " பகவானை இதைப் போல நீ எப்படி வருணிக்கலாம்? அவர் லோகநாயகன் அல்லவா? சாதாரண அரசன் கூட நீ எழுதியிருப்பதைப் போல வெளியே வருவதில்லை. சங்கு, சக்ராயுதபாணியாக, சர்வாலங்காரங்களுடன், மகாலட்சுமியுடன் கருடவாகனத்தில் வந்து பிரசன்னமாக வேண்டியவரை நீ இப்படி வருணிக்கலாமா? இது மிகுந்த அபசாரம் அல்லவா?" என்று சொல்லி, "இதைச் சரிசெய்யாமல் நீ நாடகத்தை அரங்கேற்றம் செய்யக்கூடாது.." என்று தடையும் விதித்துவிட்டார்.

போதனாவால் தமது தமையனாரின் தடையை மீறமுடியவில்லை. அதே நேரம் அவரால் தனது நாடகத்தின் வர்ணனையும் மாற்ற முடியவில்லை.  மிகுந்த யோசனையில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

போதனாவின் மகன் வேதகிரி நாலு வயதுச் சிறுவன். மிகுந்த ஆவலோடு துள்ளி ஓடி விளையாடுவான். அவனுடைய குறும்புகளுக்கு எல்லையே இல்லை. போதனாவின் வீட்டு வாசலில் ஒரு கிணறு இருந்தது. வேதகிரி அடிக்கடி அங்கே போய் விளையாடுவான். சித்தனா அந்தச் சிறுவனிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்தார். அதனால் அவன் எங்கே விளையாடப் போனாலும் அவன் மீது ஒரு கண் வைத்திருப்பார்.

அன்று போதனா வீட்டு முற்றத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.  சித்தனா கீழே மணலில் உட்கார்ந்து எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். உடம்பு முழுவதும் எண்ணெய்க் கசடு கறுப்பாகத் திட்டுத் திட்டாகத் தடவப்பட்டு, அவரைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது.

திடீரென வாசலில் வேதகிரி கூச்சல் போடும் சத்தம் கேட்டது. போதனா எழுந்து வாசலுக்கு ஓடினார். அங்கிருந்தே, " அண்ணா! ஓடிவாருங்கள்!! வேதகிரி கிணற்றில் விழுந்துவிட்டான்! " என்று குரல் கொடுத்தார். சித்தனா அப்படியே எழுந்து வாசலை நோக்கி ஓடினார்.

போதனா கிணற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். சித்தனா கைப்பிடிச் சுவற்றைப் பிடித்துக்கொண்டு உள்ளே குனிந்து பார்த்தார். உள்ளே எதுவும் தெரியவில்லை. உள்ளே குதிக்க முயன்றார். போதனா அவரைத் தடுத்து நிறுத்தினார்.

உடனே சித்தனா, " என்னடா? குழந்தை எங்கே? " என்று பதறினார்.

"அண்ணா! உங்களை ஒருமுறை குனிந்து நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். கோவணம் அணிந்து, உடம்பெல்லாம் எண்ணெயும், கறுப்புத் திட்டுமாக, இப்படி வாசலுக்கு ஓடி வரலாமா? " என்று கேட்டார் போதனா. ஆனால் அது சித்தனாவின் காதில் விழவே இல்லை. " குழந்தையின் கதி என்ன? அதைச் சொல்லு முதலில்! " என்று தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார் சித்தனா.

"அண்ணா! வேதகிரி உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒன்றும் இல்லை. உள்ளே வாருங்கள்!" என்று அவரை அழைத்துக்கொண்டு உள்ளே போனார் போதனா. சித்தனாவும் ஒன்றும் பேசாமல் உள்ளே வந்து மணையில் அமர்ந்தார்.

"அண்ணா! வேதகிரி உங்கள் குழந்தையைப் போன்றவன். அவனுக்கு ஒரு ஆபத்து என்றதும் உங்களால் தாங்க முடியவில்லை. இருந்த நிலையில் அப்படியே எழுந்து வாசலுக்கு ஓடினீர்கள். மகாகவி சித்தனா, தலைப்பாகையும், உத்திரீயமும், அலங்காரமும் இன்றி வெளியே வரலாமா? அதுவும் கோவணத்துடன், எண்ணெய் பூசியவராக வந்திருக்கலாமா? ஆனால் உங்கள் அன்பின் வேகத்தில் நீங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. பகவான் மகாவிஷ்ணு அனைவருக்கும் தந்தை. அனாத ரட்சகனாக விளங்குபவர். அவருடைய குழந்தையான கஜேந்திரன் மரண ஆபத்தில் அலறுகிறான். அந்த அபயக்குரல் காதில் விழுந்ததும், அவனைக் காப்பாற்ற அப்படியே எழுந்து ஓடினார். அந்த இயற்கையான நிலையைத் தான் நான் வருணித்தேன்! உங்களுடைய அன்பின் வேகத்திற்குப் பகவானின் கருணை வேகம் குறைந்ததென்று சொல்ல முடியுமா? " என்று கேட்டார் போதனா.

சித்தனா வெட்கித் தலை குனிந்தார். " தம்பி! உன் நாடகத்தை நீ அப்படியே அரங்கேற்றம் செய்! நான் தான் அதை நுட்பமாக ரசிக்கத் தவறிவிட்டேன்!" என்று மன்னிப்புக் கேட்டார்.

ஆண்டவனின் கருணை எல்லையில்லாதது. அதை எட்டுவதற்கு நமக்கு உண்மையான ஒரு நிமிடப் பிராத்தனைப் போதும். அவர் எங்கிருந்தாலும் நம்மைக் காப்பாற்ற ஓடிவந்துவிடுவார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors