தமிழோவியம்
தராசு : ஆட்டி வைக்கும் அணுசக்தி ஒப்பந்தம்
- மீனா

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையேயான கருத்து வேற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் - இன்னும் இக்கட்சிகள் இணைந்து ஒரு முடிவும் எடுக்காத நிலையில் - அனைத்துத் தரப்பினரும் ஒத்துக்கொள்ளும் வகையில் தீர்வு காணப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டே தீருவோம் என்று காங்கிரஸ¤ம் அப்படி செய்தால் ஆதரவை விலக்குவோம் - ஆட்சி கவிழும் என்று இடதுசாரிகளும் வரட்டுப் பிடிவாதம் பிடித்து வருவது அபத்தத்தின் உச்சகட்டமாக அமைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டே இருக்கும் இந்நிலையில் நாம் நமது அன்றாடத் தேவைகளுக்காக நிச்சயம் மாற்று எரிபொருள் வழிகளைக் கண்டுபிடித்தேயாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிகரித்து வரும் அனல் மின்சார உற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகிவரும் இச்சூழ்நிலையில் நாம் நீர் மின்சாரம், அணு மின்சாரம், சூரிய சக்தி போன்ற மாற்று வழிகளை நாடவேண்டியது அவசியம். தோரியம் அணு உலைகளை ஏற்படுத்த அரசு எடுத்துவரும் முயற்சிகளை பலனைக் கொடுக்கும் வரை நமது தேவைகளை ஓரளவிற்காவது பூர்த்தி செய்ய யுரேனியம் தேவை - அதற்கு அமெரிக்க ஒப்பந்தம் தேவை.

கம்யூனிஸ்டுகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பது எதற்காக என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நாடு முழுக்க தொழிலாளர் சம்மந்தமாக அறிக்கை மேல் அறிக்கை விட்டு ஆளும் கட்சியை ஆட்டி வைக்கும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலமான மே.வங்கத்தில் அதே தொழிலாளர்களுக்கு எதிராக எத்தகைய அட்டகாசங்களைச் செய்தார்கள் என்பதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை. அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளைக் கடைபிடிக்க இது சரியான நேரம் கிடையாது. உலகப் பொருளாதாரமே படு பாதாளத்தில் போய்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் - பணவீக்கம் ஒவ்வொரு நாளும் ஏறி நம்மைத் திண்ற அடிக்கும் இந்நேரத்தில் இடைத் தேர்தல் - அதுவும் திணிக்கப்பட்ட ஒரு இடைத்தேர்தல்  வந்தால் அதைத் தாங்கும் நிலையில் நிச்சயம் நம் பொருளாதாரம் இல்லை..

ஏற்கனவே விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கும் மக்களின் பிரச்சனைகளை ஓரளவிற்காவது தீர்ப்பதற்கு பதிலாக காங்கிரஸ¤ம் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இன்னொரு தேர்தலை சந்திக்க வைத்தால் அதன் விளைவு நிச்சயம் அவர்கள் நினைப்பதைப் போல அனுதாப அலையை ஏற்படுத்தாது - மாறாக இக்கட்சிகளுக்கு எதிரான எதிர்பலையைத் தான் தோற்றுவிக்கும். தற்போதுள்ள நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்தித்தாலே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை மீண்டும் பிடிக்குமா என்பது சந்தேகம் - வரட்டு கெளரவத்திற்காக திணிக்கப்பட்ட தேர்தல் வந்தால்?? மதவாத சக்திகள் மீண்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்க மாட்டோம் என்று முழங்கிக் கொண்டே இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து பா.ஜனதாவிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு தான் ஓய்வார்கள் என்ற நிலை கூடிய விரைவில் வந்தாலும் வந்துவிடும் போல இருக்கிறது..

Copyright © 2005 Tamiloviam.com - Authors