தமிழோவியம்
தராசு : எங்கே போகிறது இளைய சமுதாயம்?
- மீனா

ஒரிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளியில் சமைக்கப்பட்ட உணவில் பூச்சி மருந்தைக் கலந்து 2 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த 11 வயது சிறுவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவத்தில் மேலும் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னை அவமானப்படுத்திய சில மாணவர்களின் மீதுள்ள வெறுப்பால் சாப்பாட்டில் விஷம் கலந்ததாக அச்சிறுவன் கூறியுள்ளான்.

இச்சம்பவத்தைப் பற்றி பத்திரிக்கைகளில் படிக்கும்போதே நம் நெஞ்சம் பதறுகிறது. ஒரு 11 வயது சிறுவனின் மனதில் இத்தனைப் பேரை விஷம் வைத்துக் கொல்லும் அளவிற்கு அப்படி என்ன வெறுப்பு? முதலில் இந்த எண்ணம் எப்படி அவன் மனதில் உதித்தது போன்ற பல கேள்விகள். அறியாச் சிறுவன்.. ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் என்று சொல்ல முடியாத அளவிற்கு திட்டமிட்டு செய்திருக்கிறான் இக்காரியத்தை. இச்சிறு வயதிலேயே இத்தகைய கொடுமையான காரியம் செய்யத் துணிந்த இவனைப் போன்ற சிறுவர்கள்தான் பிற்காலத்தில் ஊரை மிரட்டும் தாதாக்களாகி பிறகு நேஷ்னல் - இன்டர் நேஷ்னல் லெவல் கிரிமினல்களாக மாறுகிறார்கள்.

இச்சம்பவத்திற்கு யாரைக் குறைக்கூறுவது என்று பட்டியல் எடுக்க ஆரம்பித்தால் அவனுடைய பெற்றோர், அவன் வளர்ந்த சூழ்நிலை, சமுதாயம் ஏன் திரைப்படங்கள் என்றெல்லாம் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த அளவிற்கு இந்த காரணிகள் ஒவ்வொன்றும் இன்றைய சிறுவர்கள் மனதில் ஆதிக்கம் செய்யும் முக்கிய அதிகார சக்திகளாக உருவெடுத்துள்ளன. ஆக இன்னார் தான் இச்சம்பவம் நடைபெற அவனுக்கு தூண்டுகோலாக இருந்தார் என்று எந்த ஒரு தனி நபரையும் சுட்டிக்காட்ட இயலாத நிலை. மொத்தத்தில் இச்சிறுவனுக்கு தற்போது என்ன தண்டனை கிடைத்தாலும் பிற்காலத்தில் அவன் மனம் மாறி திருந்தி வாழ்வானா என்பதை தண்டனையால் மட்டுமே நிர்ணயிக்க முடியாது.

பிஞ்சுக் குழந்தைகள் எல்லாம் கத்தியைத் தூக்கும் விதமாக அவர்களை உருமாற்றியிருக்கும் இச்சமூகத்தை நம்மால் தற்போது குறை கூற மட்டுமே முடிகிறதே தவிர இம்மாதிரி நடக்காமல் தவிர்க்க நம்மால் என்ன செய்ய இயலும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க மறந்து விட்டோம். வெறும் திரைப்படங்களை மட்டும் குறைகூறாமல் ஒவ்வொரு பெற்றோரும் தினம்1 மணி நேரம் குழந்தைகளுடன் செலவழித்து அவர்களுடைய மனதைப் புரிந்து கொண்டாலே இது போன்ற விபரீதங்களைப் பெறுமளவில் தடுக்கலாம். மேலும் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பான அணுகுமுறையுடன் கனிவையும் கொஞ்சம் மாணவர்கள் மீது காட்டினால் பாதிப் பிரச்சனை தீர்ந்தது. எனவே இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுப்பது நம் கையில் மட்டுமே உள்ளது. நாட்டில் உலவும் ஒவ்வொரு தீவிரவாதியும் வீட்டிலிருந்துதான் உருவாகிறான். இதைத் தடுக்கும் விதமாக நாம் நம் கடமையைச் சரிவர செய்வோமா? இல்லை மற்றவர்கள் மீது குறை கூறியே காலத்தைக் கழிக்கப்போகிறோமா? 

Copyright © 2005 Tamiloviam.com - Authors