தமிழோவியம்
முச்சந்தி : காங்க்ரீட் சுழல்
- என். சொக்கன்

பெங்களூரில் இப்போதெல்லாம் எங்கே சென்றாலும், காற்றும், ஆக்ஸிஜனும் இருக்கிறதோ இல்லையோ, சிமென்ட் தூசு கண்டிப்பாக இருக்கிறது. உள்ளங்கை அகல நிலம் கிடைத்தாலும், வளைத்துப்போட்டு ராக்கெட்மாதிரி உசர்ர்ரமாகக் கட்டடம் எழுப்பிவிடுகிறார்கள்.

சதுர அடிக்கு இத்தனை ஆயிரம் என்று கணக்கிட்டு, கோடிக்கணக்கில் விற்பனையாகும் இந்தக் கட்டடங்கள் ('கட்டிடங்கள்' என்று எழுதக்கூடாதாமே !) பெரும்பாலும் ஒரேமாதிரியான குணங்களைக் கொண்டிருப்பவை - சுற்றிலும் கம்பிக் கதவு, அதன்வழியே கார் நிறுத்துமிடங்கள் (இதற்குத் தனியே இரண்டு லட்சம்வரை வசூலிக்கிறார்கள்), ஓர் ஓரத்தில் காவல்காரர்கள் தங்குமிடம், அதற்குப் பக்கத்திலோ, அல்லது, பயன்படுத்தப்படாமல் தூசு படிந்திருக்கும் மாடிப் படிகளுக்கருகிலோ, சச்சதுரமான தபால் பெட்டிகள், பின்னர் கட்டடத்தின் பிரம்மாண்டத்துக்கேற்ப விரிந்து, சுருங்கும் உயர்த்தி லி·ப்ட்கள், அதிலேறி மேலே சென்றால், தேக்குக் கதவு, அதனருகே சின்னதாய் ஒரு வீடியோப் பெட்டி, அதிலிருக்கும் பொத்தானை அமுக்கினால், உள்ளே நமது பொம்மை தெரிகிறது, அதைப் பார்த்துவிட்டு, 'யார்ப்பா அது ?', என்று அவர்கள் அங்கிருந்தே விசாரித்துவிட்டு, கதவைத் திறக்கவோ, மறுக்கவோ செய்யலாம்.

சாவிகளும், பூட்டுகளும் அபூர்வமாகிக்கொண்டிருக்கின்றன. கைரேகையை ஆராய்ந்து திறக்கும் நவீன கதவுகள் வந்துவிட்டன. என்றாலும், அந்த எலக்ட்ரானிக் பூட்டிற்குக்கீழே, ஒரு இருபத்தேழரை லிவர் பூட்டையாவது தொங்கவிட்டால்தான் நம்மவர்களுக்கு முழுத்திருப்தியாகிறது.

வீடுகளினுள், எவையெல்லாம் அத்தியாவசியம் என்பதற்கான இலக்கணங்கள் மாறிக்கொண்டிருக்கிறன. சில ஆண்டுகளுக்குமுன்வரை ஆடம்பரமாகக் கருதப்பட்ட பல விஷயங்கள், இப்போது இன்றியமையாதவையாகிவிட்டன. அல்லது, அப்படிதான் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, செயற்கைக் குளிரூட்டிகள், உயரத்திலிருந்து தொங்கும் அலங்காரக் கண்ணாடி விளக்குகள், ஆளுயரக் கண்ணாடியுடன் ஒப்பனை மேஜை, பாத் டப் (குளியல் தொட்டி ?) முதலானவற்றைச் சொல்லலாம்.

இதேபோல், வீட்டிற்கு வெளியிலேயும், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், பச்சைப்பசேல் பூங்கா, பளபள நீரூற்றுகள், மளிகைக்கடை, நூலகம், இணைய இணைப்பு என்று, அடுக்ககச் சுற்றுச்சுவருக்குள்ளாகவே எல்லாம் இருக்கவேண்டும் என்று ஒரு பு(பொ)து விதி தோன்றிவிட்டது. ஒரு புதிய அடுக்ககத்தில், கார் கழுவும் கூடம்கூட இருக்கிறதாம்.  இவற்றில் எதையெல்லாம் நாம் உபயோகிக்கிறோம் என்பதுகூட முக்கியமில்லை, எதற்காகவும் அதிக தூரம் நடக்க அவசியமில்லாமல், எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கவேண்டும். அப்படி அமைந்துவிட்டால், அதுதான் பூலோக சொர்க்கம் என்று வண்ண விளம்பரங்கள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் இல்லாத வீடுகளில் வாழ்கிறவர்கள், புழுவினும் கேவலமானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு உருவாக்கப்படும் இந்த பிம்பத்தால், புதிதாக வீடு கட்டுகிறவர்கள் / வாங்குகிறவர்கள் மேற்படி வசதிகளைக் கேட்கிறார்கள், 'செஞ்சிடலாம் சார்', என்று பெரிதாகத் தலையாட்டும் கட்டுமானர்கள், உற்சாகமாக, வீட்டின் விலையில் சில லட்சங்களைக் கூட்டிவிடுகிறார்கள். கூடவே, இதுபோன்ற சவுகர்யங்களைப் பராமரிப்பதற்கான மாதாந்திரக் கட்டணமும், சில ஆயிரங்களைத் தொட்டுவிடுகிறது.

இதுபோன்ற பளபள அடுக்ககங்கள், பெரும்பாலும் நகரிலிருந்து மிக விலகியுள்ளன. இங்கெல்லாம் நில மதிப்பு அவ்வளவாக அதிகமில்லை, பெரும்பாலான பகுதிகளில் ஒழுங்கான சாலை வசதிகள்கூட கிடையாது. ஆனால், அடுக்கக வீடுகளின் விலைகள்மட்டும், ஏறிக்கொண்டேபோகிறது. இதுபோன்ற கட்டடங்களில் பராமரிப்புக்காக வசூலிக்கப்படுகிற மாதாந்திரத் தொகையைமட்டும் வைத்துக்கொண்டு, பக்கத்தில் அதே அளவிலான ஒரு சாதாரண வீட்டை வாடகைக்குப் பிடித்துவிடலாம் என்பது பெரும்பான்மையினருக்குத் தோன்றாதவண்ணம் மறைக்கப்பட்டுவிட்டது.

இந்தச் செயற்கை வீக்கத்துக்கு முக்கியமான காரணம், பெங்களூரில் பணப்புழக்கம் அதிகம். கணினித்துறை சார்ந்த பணிகள் ஏராளமாக உருவானபிறகு, இங்கே பணிபுரிய வரும் வெளிமாநில இளைஞர்களையெல்லாம், 'ஒரு வீடு வாங்கிப் போடுங்கப்பா', என்று விளம்பரங்களாலேயே அடிக்கிறார்கள். இதனால் கணிசமான வருமான வரிச் சலுகையும் கிடைக்கிறது என்பதால், எதற்காக யாருக்கோ மாதாமாதம் கொள்ளை வாடகை கொடுத்து, வருமான வரியும் கட்டவேண்டும் என்று கணக்கிட்டு, என்னைப்போலப் பலரும் இந்த வலையில் விழுகிறார்கள்.

அப்புறம் ஏன் புலம்புகிறாய் என்று கேட்காதீர்கள். வீடு வாங்குகிறபோது, வரிச் சலுகையும், வாடகை மிச்சமாவதும் உண்மைதான். ஆனால், அதற்காக, இதுபோன்ற பளபளப்பு விளம்பரங்களில் ஏமாந்துவிடாமலிருக்கவேண்டும் என்பது முக்கியமாகிறது. போலியான சவுகர்ய பிம்பங்களை உருவாக்கிக் கண்கட்டு வித்தை செய்யும் அடுக்ககங்கள், இப்போது மிகவும் லாபகரமான தொழிலாகிவிட்டன. இவைசார்ந்து, வீட்டுக்கடன் தரும் வங்கிகள், மர / பிற வேலை ஒப்பந்ததாரர்கள், விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகள் என்று பலரும் கொழிக்கிறார்கள்.

குறிப்பாக, இந்தப் பத்திரிகைகள் / செய்தித்தாள்கள், இதுபோன்ற பளபளப்பு அடுக்ககங்களைப்பற்றி வாராந்திரச்

இந்த வாரத் தகவல்(கள்) :

* வரிக்குதிரைகள் மேயும்போது, எல்லாம் ஒரே திசையில் திரும்பியபடி இருக்கும். ஆனால், அவற்றில் ஒன்றுமட்டும் எதிர்திசையில் திரும்பி, பின்பக்கமாக ஏதாவது ஆபத்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும்.

* காட்டில் தனியாக ஒரு வரிக்குதிரைமட்டும் மேயவேண்டியிருந்தால், அது தனக்குத் துணையாக 'காங்கோனிஸ்' என்னும் மானைச் சேர்த்துக்கொள்ளும். வரிக்குதிரை ஓய்வெடுக்கும்போது, அந்த மான் நின்றபடியே சுற்றுமுற்றும் கவனித்துக்கொண்டிருக்கும். ஆபத்து வரும்போல் தெரிந்தால், எச்சரிக்கை செய்து, வரிக்குதிரையை எழுப்பிவிடும்.

* வரிக்குதிரையின் உடலில் ஒரு பக்கம் இருக்கிற வரிகள், அதே அமைப்பில், சிறிதும் மாறாமல் அப்படியே மறுபக்கமும் இருக்கும்.

- ஆழி
கோகுலம் (ஜுலை 2005)

சிறப்பிதழ்களெல்லாம் வெளியிடுகிறார்கள். அதில் ஏராளமான விளம்பரங்களுக்கு இடையே, பல்துறை அறிஞர்களை(?) முன்னிறுத்தி, இதுபோன்ற வீடுகளை வாங்காவிட்டால் நீங்கள் இந்தப் பூவுலகில் வாழ்ந்ததே வீண் என்று மேஜையிலடித்துச் சொல்கிறார்கள். பெருநகர வீடுகளின் விலை நிலவரம் தறிகெட்டுப்போய்க்கொண்டிருப்பதற்கு, மீடியாவின் இந்தப் போலி பிம்பம் முக்கியமான காரணம்.

மார்ஜின் என்று சொல்லப்படும் லாப சதவீதமெல்லாம், இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது. முடிந்தவரை புது வசதிகளைக் கூட்டிக் காண்பித்து, விலையை உயர்த்தி, செலவழித்ததைப்போல இருமடங்காவது சம்பாதித்துவிடவேண்டும் என்பதே இங்கு தாரக மந்திரமாக இருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்கள் பத்திரிகை / சுவர் / தனிப்பட்ட விளம்பரங்களுக்குச் செலவழிக்கும் தொகையை நினைத்தால் மூச்சுமுட்டுகிறது. இந்தக் காசெல்லாம், வீடு வாங்குகிறவர்கள் தலையில்தானே வந்து விழும் ?

இந்த வீடுகளின் விலை எத்தனை உயர்ந்தாலும், அதில் பெரும்பகுதியைக் கடன் தருவதற்கு உள்ளூர் / பன்னாட்டு வங்கிகள் கெஞ்சிக்கொண்டு காத்திருக்கிறார்கள். ஆகவே, உடனடியாக நம் கையிலிருந்து அதிகப் பணம் தரவேண்டியதில்லை என்பதால், கவனம் தவறி, மிதமிஞ்சிச் செலவழித்துவிடுவதற்கான சாத்தியங்கள் ரொம்பவே அதிகம். அதன்பிறகு சுமை யாருக்கு ?

இந்த மாயச்சுழலிலிருந்து தப்பவேண்டுமானால், ஒரே ஒரு வழிதான் உண்டு. மேற்படி மாய சவுகர்யங்கள் எவையுமில்லாத, அதிகம் விளம்பரப்படுத்திக்கொள்ளாத சிறிய / சாதாரண அடுக்ககங்களைத் தேடிப் பிடிக்கவேண்டும், பின்னர், எல்லா வசதிகளும் கொண்ட வேறு சில அடுக்ககங்களையும் தேர்ந்தெடுத்து, இவற்றின் விலைகளை நேருக்கு நேர் ஒப்பிட்டாலே போதும். பின்னர், அவர்கள் தருவதாகச் சொல்கிற சவுகர்யங்களை நாம் நிஜமாகவே பயன்படுத்தப்போகிறோமா ? ஆம் எனில், மாதத்துக்கு எத்தனை நாள் ? அதற்காக நாம் செலவழிக்கவேண்டிய கூடுதல் பராமரிப்புக் கட்டணம் எவ்வளவு ? அது தகுமா ? என்றெல்லாம் நிதானமாக யோசிப்பது மிக அவசியம்.

மற்ற பொருள்களை வாங்கும்போது, மிஞ்சிப்போனால், சில நூறு ரூபாய்கள் ஏமாறுவோம். ஆனால், இந்த வீடுகளின் விஷயத்தில், தரம், சவுகர்யம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பிடுங்கிவிட வாய்ப்புண்டு. கபர்தார் !

'வீடென்று எதைச் சொல்வீர்', என்று எப்போதோ படித்த கவிதைதான் நினைவுக்கு வருகிறது. நம்முடைய 'ஆனந்த' வீடு, நமக்குள்தானே இருக்கிறது ?


இந்தக் கட்டுரையை எழுதக் காரணம், சென்ற மாதத்தில் ஒருநாள், உறவினர் ஒருவரின் வீட்டுப் புதுமனைப் புகுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல ஊருக்கு வெளியே, ஒரு மண் சாலையில் சில கிலோமீட்டர்கள் பயணித்து, அவர்கள் தந்திருந்த வரைபடத்தின் உதவியுடன் ஒருவழியாக அந்தப் பளபள அடுக்ககத்தைக் கண்டுபிடித்துவிட்டோம்.

வழக்கம்போல், சுமார் நூறு வீடுகள் நிரம்பிய புத்தம்புது அடுக்ககம் அது. நீச்சல் குளத்தில் இன்னும் தண்ணீர் வரவில்லை, அதை ஒட்டினாற்போலிருந்த உடற்பயிற்சிக்கூடத்தில் ஆளுயரக் கருவிகள் பாலித்தீன் உறை பிரிக்காமல் தூங்கிக்கொண்டிருந்தன. எந்த வீட்டுக்காரரும், தங்களின் பக்கத்து வீட்டுக்காரரை நேருக்கு நேர் பார்த்துவிடாதபடி (பிரைவஸியாம் !) மூலை முடுக்குகளில் கதவுகளை ஒளித்துவைத்துக் கட்டியிருந்தார்கள்.

சலவைக்கல் படிகளில் ஏறி நடக்கையில், 'அவங்ககிட்டே பேசும்போது, உங்க வீட்டுக்கு வழியே சரியாத் தெரியலை, ரொம்பக் கஷ்டப்பட்டுதான் கண்டுபிடிச்சோம். பத்து பேர்கிட்டே விசாரிச்சுட்டு வந்தோம்-ன்னு சொல்லு', என்றாள் என் மனைவி.

'ஏன் ? நாமதான் சுலபமா வந்துட்டோமே', என்றேன் நான்.

'ப்ச்', என்று சலித்துக்கொண்டாள் அவள், 'நான் சொல்றமாதிரி சொல்லு, அதான் கரெக்ட்', என்றாள் மிகுந்த உறுதியுடன்.

'அதுதான் ஏன்னு கேட்கறேன் ?'

'அவங்க நம்ம வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு வரும்போது, அப்படிதான் சொன்னாங்க !'

(படம் : நன்றி  Mosh)

Copyright © 2005 Tamiloviam.com - Authors