தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : குறுந்தகவல் - 2
- எழில்

இவ்வாரமும் குறுந்தகவல் பற்றிக் காணலாம்.

ஒரு குறுந்தகவலில் நூற்றி அறுபது எழுத்துக்கள் வரை அனுப்பலாம். அதற்கு மேல் அனுப்ப இயலாது. இரு வார்த்தைகளுக்கு இடையே விடப்படும் இடைவெளியும் (Blank space) ஒரு எழுத்தாகக் கணக்கில் சேர்க்கப்படும். இது சில வருடங்களுக்கு முன் இருந்த நிலை. அதன் பின்பு நூற்றி அறுபது எழுத்துக்களுக்கும் மேல் ஒரே தகவலில் அனுப்பும் வண்ணம் தொழில் நுட்பம் மாற்றி அமைக்கப்பட்டது . செல்பேசியில் தான் இந்த மாறுதல். செல்பேசிக்கும் தள நிலையத்துக்கும் இடையே ஒரே மாதிரியான தகவல் பரிமாற்றம் தான் . எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் 160க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் கொண்ட ஒரு தகவலை செல்பேசியில் உள்ளிடுகிறீர்கள் எனலாம். முதல் 160 எழுத்துக்கள் ஒரு தகவலாகவும், அடுத்த 160 எழுத்துக்கள் இரண்டாவது தகவலாகவும் மாற்றப்படும் . இப்படியாய் அதிக பட்சம் நான்கு தகவல்கள் வரை ( 160X4=480 எழுத்துக்கள் ) வரை ஒரே தகவலில் உள்ளிட்டு அனுப்ப முடியும். இத்தகவல்கள் நான்கு தகவல்களாகத்தான் அனுப்பப் படும். 160 எழுத்துக்களாய்ப் பிரிக்கப்பட்ட நான்கு தகவல்களுக்கும் வரிசை எண் கொடுக்கப் பட்ட பின் ( எது முதலில், எது அடுத்து , எது கடைசி என்று) குறுந்தகவல் மையத்தினை அடைகின்றன. அங்கிருந்து தகவல் அனுப்ப வேண்டிய எண்ணுக்கு இந்தத் தகவல்கள் நான்கு தகவல்களாகத்தான் அனுப்பப் படுகின்றன, தகவல் பெற்றவரின் செல்பேசி இந்தத் தகவல்களை ஒன்றாக்கி ஒரே தகவலாய் மாற்றுகிறது . உங்களிடம் ஐந்து , ஆறு வருடங்களுக்கு முன் வந்த பழைய செல்பேசி இருந்தால் நான்கு தகவல்களும் தனித் தனியாகவே உங்களுக்குத் தெரிவிக்கப்படும் . இம்மாதிரி ஒன்று சேர்த்து வரும் தகவல்களை ஒட்டுப்போட்ட தகவல்கள் ( Concatinated Message)  என்றழைக்கலாம்.

வெறும் தகவல்கள் மட்டுமே அனுப்பப் பட்டு வந்த காலம் போய், தகவல்களுடன் படங்கள் மற்றும் இசையைச் சேர்த்து அனுப்பும் முறை தற்போது பிரபல்யமடைந்திருக்கிறது . பல்லூடகத் தகவல் (Multimedia Message Service MMS) என்று இதற்குப் பெயர்.  இம்மாதிரித் தகவலனுப்ப உங்கள் செல்பேசியில் இணைய இணைப்பினை ஏற்படுத்தும் வசதி இருத்தல் வேண்டும். செல்பேசி மூலம் இணைய உலா குறித்து , இனிமேல் வரப்போகும் பதிவுகளில் பார்ப்போம்.

சரி, உங்களுக்கு வரும் தகவல்கள் எங்கே சேர்த்து வைக்கப்படுகின்றன? செல்பேசியின் நினைவகத்திலா அல்லது ஸிம் அட்டையிலா ? இரண்டிலும்தான், செல்பேசியில் சேகரித்து வைப்பதோ அல்லது ஸிம் அட்டையில் சேகரிப்பதோ உங்களது விருப்பம் . செல்பேசியில் தகவற்பகுதியில் இருக்கும் அமைப்புப் (Settings)பட்டியில் "தகவலைச் சேகரிக்க" (Save message in) எனும் உப பட்டியைச் சுட்டி செல்பேசியிலோ அல்லது ஸிம் அட்டையிலோ உங்களுக்கு வரும் தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். பழைய ஸிம் அட்டைகளில் (16 கிலோபைட் நினைவு கொண்டவை) அதிகபட்சம் பத்துத் தகவல்களைச் சேர்த்து வைக்கலாம். தற்போது வரும் ஸிம் அட்டைகள் 32 அல்லது 64 கிலோபைட்டுகள் நினைவிடம் கொண்டவை. இவ்வகை அட்டைகளில் அதிகமாக 20 அல்லது 25 குறுந்தகவல்களைச் சேகரிக்க முடியும். செல்பேசியிலும் குறுந்தகவல்களைச் சேகரித்து வைக்க முடியும் . எத்தனை தகவல்கள் சேர்த்து வைக்க முடியும் என்பது உங்களிடமிருக்கும் செல்பேசியைப் பொறுத்தது. ஒவ்வொரு செல்பேசித் தயாரிப்பாளர்களின் பல்வேறு மாதிரிகளில் சேகரிப்பு வசதி வகைக்கு வகை வேறுபட்டிருக்கும்.

இது தவிர, தகவல் வந்தவுடன் உங்களது செல்பேசித் திரையிலேயே உடனடியாக, தகவலைத் தெரிவிக்கவும் முடியும் . சில அவசரத் தகவல்களை அனுப்பும் போது, தகவல் பெறுபவரின் கவனத்தை உடனடியாக ஈர்க்க இம்மாதிரி முறையைப் பயன்படுத்தலாம் . இவ்வகைத்தகவல்கள் செல்பேசியின் நினைவிலோ, ஸிம் அட்டையின் நினைவிலோ சேகரித்து வைக்கப்படுவதில்லை . இரண்டாவது தகவல் (இதே மாதிரி உடனடித் திரைச் செய்தி) வந்தவுடன் முதல் தகவல் தானாக அழிந்து விடும் அல்லது செல்பேசியின் இயக்கத்தினை நிறுத்திப் பின் மீண்டும் இயக்கினால் (Power off and On) தகவல் அழிந்து விடும்.

உங்களது தகவல் நினைவிடம் முழுவதும் தகவல்களால் நிரம்பிவிட்டதென்றால் மேற்கொண்டு தகவல் பெற முடியாமற்போகலாம். தகவல் சேகரிக்க இடமில்லையேல் அதனை உங்களுக்குத் தெரிவிக்கும் வண்ணம் செல்பேசித்திரையில் தகவலுக்கான குறியீடு (Message Icon) ஒளிர்ந்து மறைவதைக் (Blinking) காணலாம் சில தகவலகளை நீங்கள் அழித்தவுடன்,மேற்கொண்டு தகவல் பெறுவது சாத்தியமாகும்.

தற்போது இணைய தளங்கள் பலவற்றிலும் "எந்த நாட்டுக்கும், எந்தச் சேவை வழங்குனரின் செல்பேசிக்கும் இணையம் வழி குறுந்தகவல் அனுப்பலாம்" போன்ற விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம் . இது எப்படிச் சாத்தியமாகிறது? குறுந்தகவல் சேவை வழங்கும் ஒரு இணையப்பக்கத்தில் உங்களது தகவலையும் , அனுப்ப வேண்டிய எண்ணையும் தட்டச்சு செய்து உள்ளிடுகிறீர்கள். இந்தத் தகவல்களெல்லாம் ஒரு தரவுத்தளத்துக்கு அனுப்பப் படுகிறது. அங்கிருந்து செல்பேசிச் சேவை அளிக்கும் சேவை வழங்குனருக்கு ஏதாவது ஒரு நுழைவாயில் (Gateway) மூலம் அனுப்பப் படுகிறது . அச்சேவை வழங்குனர் பின்னர் குறித்த வலையமைப்புக்கு குறுந்தகவலை அனுப்பி அத்தகவல் பெறுனரை அடைய உதவுகிறது. இருப்பினும் இந்த "இணைய வழிக் குறுந்தகவலில்" பல ஓட்டைகள் உண்டு. இலவசக் குறுந்தகவல்கள் பல நேரங்களில் சரியாகச் சென்றடைவதில்லை. சேவை வழங்குனர்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பு இல்லாதது ஒரு காரணம். தொழில் நுட்பங்களிடையே இடைச்செயலாக்கம் (InterOperability) இல்லாதது இன்னொரு காரணம் .

மேற்சொன்ன காரணங்கள் செல்பேசி வழி அனுப்பப் படும் குறுந்தகவல்களுக்கும் பொருந்தும். எல்லாச் சமயங்களிலும் , எல்லாத் தகவல்களும் சரியாகச் சேர்ப்பிக்கப் படுவதில்லை. பல்வேறு வலையமைப்புக்களைக் கடந்து செல்லும் குறுந்தகவல், குறிப்புத்தகவல்கள் (Signalling messages) தடுமாற்றத்தினால் தொலைந்துவிட நேரிடலாம் . இன்னும் நமது சிறிய நகரங்களில் / கிராமங்களில் பழையவகைத் தொலைபேசி இணைப்பகங்கள் உபயோகத்திலிருப்பதால் குறிப்புத் தகவல் பொருந்தாத்தன்மை (Signalling mismatch) ஏற்படலாம்.

அழைப்பு ஏற்படுத்துவதால் செலவு நிறைய ஏற்படலாம். எனவே முக்கியத்துவமில்லாத செய்திகள் அல்லது அயல் நாடுகளில் நண்பர்/உறவினருக்குச் சில செய்திகள் பரிமாறிக்கொள்ள குறுஞ்செய்தியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த "உள்ளங்கையில் உலகம் " தொடரின் முதல் பகுதியிலேயே சொன்ன குறுந்தகவல் குறளினை மீண்டும் நினைவு படுத்துவோம்:

பேசுக செல்பேசியில் அளவோடு; செலவானால்
பேசுதலின் குறுந்தகவல் நன்று.
Copyright © 2005 Tamiloviam.com - Authors